Saturday, December 31, 2016

விடைபெறும் 2016 - வார்தாவும் ,விமான நிலையத்தில் மாட்டிக்கொண்ட நாங்களும்!

இந்த வருடம் 2016  எங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத பல தருணங்களைத்தாங்கி வந்தது. அசுரப்பிரயத்தனம் செய்து, சில தடங்கல்களைத்தாண்ட வேண்டி இருந்தது. 

அந்த வகையில் கடைசியாக வந்தது வார்தா- நானும் வரேண்டா என்றது. 


ஊருக்கு போன ஓரிரண்டு வாரங்களில் ஒரு தானியங்கியிலும் பணம் இல்லை. அப்பா வெச்சுக்கொடுத்தது, மாமனார் அன்பில் கொடுத்தது என்று அவர்கள் கொடுத்த பணத்தை வைத்தே, சென்னை, பாண்டி என்று சுற்றி வந்தோம். வழக்கமான கார் பயணம் இல்லாமல், சிக்கனமாக பேருந்தில் சென்று வந்தோம். சிலக்கடைகளில் பற்று அட்டையைப்பல முறை தேய்த்தார்கள். பயமாக இருந்தது. 
ஒரு வழியாய் சிக்கனமாக வேண்டிய பொருட்களை மட்டும் வாங்கி, கணவரின் நெஞ்சில் மசாலா டீயை வார்த்தேன். 

அப்பளம், வடகம், கைப்பிடி மாற்றிய குக்கர், அதற்கு உயிர்தோழியாக புது காஸ்கெட்,பற்று அட்டையில் தேய்த்து வாங்கிய ஆடைகள், இந்திய பெண்களின் உலகளாவிய ஆடையான நைட்டிகள் , கைத்தறி துண்டுகள், கதர்க்கடை நாலு முழம் வேஷ்டிகள்,ஆதார் அட்டை விண்ணப்பிக்க என்று கொண்டு வந்த சான்றிதழ்கள் என்று சகலத்தையும் மூட்டைக்ககட்டினேன். அப்பா கடைசி நேரத்தில் நாட்டு நெல்லிக்காய், பச்சை மிளகு என்று பொழிந்த அன்பையும் அட்டைப்பெட்டியில் அடைத்தேன் . 

ஞாயிறு மாலை செய்தியில் எல்லா ரயில்களும் புயல் காரணமாக ரத்தானதாய் சொல்லப்பட்டது. விமானங்களைப்பற்றி ஒரு செய்தியும் இல்லை.

ஏர் இந்தியாவின் சேவை மையத்தின் தொலைப்பேசி எண்ணில் யாரும் பதில் அளிக்க வில்லை. வானம் புயல் வருவதற்கான எந்த அடையாளமும் இன்றி இருந்தது.

டாக்ஸியில் காலை எட்டரை மணிக்கு புதிய சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டோம். வழக்கம் போல விமான அனுமதி சீட்டு பெற்று, பெட்டிகளைக்கொடுத்து விட்டு, குடியேற்றமும் முடித்தோம்.
அதன் பிறகு விமானம் தாமதம் என சொல்லப்பட்டது. மழையும் ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் காற்றின் சீற்றம் அதிகமாகி, விமான ஓடு களப்பாதையில் இருந்த விளக்குக்கம்பங்கள் பிரேக் டான்ஸ் ஆடத்துவங்கின.

ஆளாளுக்கு இருந்த ஓரிரண்டு தொலைப்பேசிகள் வழியாகவும், இலவச இணைய சேவை வழியாகவும் வீட்டுக்கு செய்தி சொல்ல ஆரம்பித்தார்கள்.
கையில் இருந்த கொஞ்சம் இந்திய பணத்தில் காபிக்கு 120 ரூபாய் என்பது நெஞ்சு வலியைதானே உண்டாக்கியது.

இதற்குள் கொஞ்ச நேரத்தில் அனைவரின் கைப்பேசியில் இணைய சேவை சொர்க்கப்பதவி பெற்றது. அதன் பின்னர், ஒவ்வொருவராய் கைகுலுக்கி நீங்க சிங்கப்பூர்ல எங்க இருக்கீங்க? எங்க வேலை பாக்கறீங்க என்று நட்பு பாராட்ட துவங்கினோம்.

நேரம் ஆக ஆக ஒரு ஒரு விமான சேவை நிறுவனமும் மதிய உணவைத்தந்தது.Ethiad நிறுவனம் பயணிகளுக்கு உடனே தாங்கும் வசதியை ஏற்பாடு செய்து விமான நிலையத்திலிருந்து அவர்களைக்கொண்டு சென்றது.
நாங்கள் அவர் வருவாரா? அவர் வருவாரா? என்று ஏர் இந்தியா ஆசாமிகள் முக தரிசனத்துக்கென்று காத்திருந்தோம்.

புயலின் வேகம் அதிகரித்து , கேட் 18  முழுதுமாய் ஆட்டம் கண்டது. ஒரு சில போலீசார் வந்து எங்களை பழைய விமான நிலையத்தில் இருக்கும்படி சொன்னார்கள்.
ஒரு 4  மணி நேரங்கள் என்ன நடந்ததென்று யாருக்கும் புரியவில்லை. ஒரு சிலர் தரையில் அப்படியே தூங்கினார்கள். ஏர் இந்தியா சிப்பந்திகள் யாரையும் காணோம்.மாலை நேரம் சிங்கப்பூரிலிருந்து வர வேண்டிய விமானம் பெங்களூர் சென்றதாய் அறிவிக்கப்பட்டது. 

பின்னர் ஓரிரு ஏர் இந்தியா ஊழியர்கள் வந்து, உங்கள் பெட்டிகளைத்திரும்ப பெற முடியாது. மின்தூக்கி இருக்கும் பகுதி முழுவதும் நீர் தேங்கி உள்ளது. வடபழனியில் தாங்கும் இடம் ஏற்பாடு செய்கிறோம். ஆனால் இப்போதைக்கு ஒரு போக்குவரத்து வசதியும் செய்து தர முடியாது என்றார்.


கொஞ்ச நேரம் கழித்து தான் எங்களின் பல சான்றிதழ்கள் பெட்டிகளில் இருப்பது நினைவில் வந்தது. 4  மணி நேரம் கெஞ்சிக்கூத்தாடி அவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு வந்தோம். 

மற்றபடி எங்களோடு பேச எந்த அதிகாரியும் தயாராக இல்லை. குடியேற்றம் முடிந்து உள்ளே இருந்த எங்களுக்கும், அந்த பக்கம் இருந்த ஏர் இந்தியா அதிகாரிகளுக்கும் இடை வெளி 20  அடிகள் கூட இருக்காது. ஆனால் அகதிகள் போல தான் இருந்தது எங்கள் நிலை.

இரவு 10 மணி வாக்கில் மதியம் மீந்த உணவுகள் மீண்டும் தரப்பட்டன.

குழந்தைகளோடு இருந்த ஓரிரு தம்பதிகள் எங்களோடு சேர்ந்து கொண்டனர். ஓய்வு பெற்ற சிங்கை பள்ளி ஆசிரியர் ஒருவர் வந்தார்.முன்பின் அறிமுகம் இல்லையென்றாலும் எங்களுக்குள் ஒத்துழைத்து, ஒருவர் மற்ற பலரின் கைப்பைகளைப்பார்த்துக்கொண்டோம். 

இரவு மழை நின்றதால் ஏக குளிரில், புது விமான நிலையத்தில், உள்ள இருக்கைகளில் உட்கார்ந்தவாறே தூங்கினோம். என் குழந்தை தரையில தூங்கணுமா? என்று சத்தமாய் சண்டையிட்டு வெளியே போன ஒரு சில பிரயாணிகளுக்கு வெளியே போக வழி இல்லை. வார்தா நிறைய மரங்களை வழி நெடுங்க பிடுங்கி வீசியதில், விமான நிலையம் தான் ஒரே இடம். உள்ளே தூங்கலாம், அல்லது வெளியே.


நாங்கள் அடுத்த நாள் காலை வரை அங்கேயே இருக்க முடிவு செய்து அப்படியே நாற்காலிகளில் கால் மாற்றி உறங்கினோம். 
மறுநாள் காலை 6  மணி வரை சேவைகள் நிறுத்தப்பட்டது என அங்கங்கே இருந்த திரைகளைப்பார்த்து தெரிந்துகொண்டோம். திருப்பதிக்கு சென்று முடிகாணிக்கை கொடுத்த ஒருவர், பெருமாளே என்னை ஊருக்கு கொண்டு போய் சேர்த்திடு என்று வேண்டிக்கொண்டார். ஒரு சிங்கப்பூர்காரரின் மகள், தூதரகத்தைத்தொடர்பு கொண்டு எங்களுக்கு எதாவது உதவ முடியுமா என்று பார்த்தார்.

மறுநாள் சூரியன் பளிச்சென்று வெளியில் வர, அனைவரின் முகத்திலும் புன்னகை. கல்யாண மண்டபத்தைப்போல, எழுந்து கழிவறைக்கு சென்ற சிலர், உங்க கிட்ட பேஸ்ட் இருக்கா? சோப் இருக்கா? என்றனர்.

சில சிறிய விமானங்கள் தரை இறங்கத்துவங்கின. எங்களுக்கும் நம்பிக்கை வந்தது. அதன் பின்னர், ஏர் இந்தியா ஊழியர்கள் 9  மணி அளவில் வந்ததும், எல்லாரும் முறையிட ஆரம்பித்தோம். முதலில் காலை உணவு தந்தார்கள். அதன் பின்னர், நாங்கள் புதிய போர்டிங் பாஸ் பெற்று, மறுபடி குடியேற்றம் செய்ய வேண்டும் என்றனர். கிட்ட தட்ட 2  மணி நேரத்துக்கும் மேல் நிற்க வேண்டி இருந்தது. செவ்வாய்க்கிழமை பயணிக்கும் புதிய பயணிகளோடு, திங்களன்று தங்கிவிட்ட பயணிகளும் சேர்ந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம்.
ஒரு வழியாய் விமானம் புறப்பட மதியம் 3  மணி ஆனது.


விமானம் தரை இறங்கியதும், அப்பாடி, ஒரு வழியாய் வந்துட்டோம் என்று எங்களின் விமான (ரயில்) ஸ்நேகிதர்களிடம் சொல்லிக்கொண்டோம்.
இப்போது AI346  என்றே ஒரு குழுவை தொடங்கி, வாட்ஸாப்ப் மூலம் தொடர்பில் இருக்கிறோம்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 

Saturday, September 17, 2016

நுண் மோட்டார் திறன் மேம்பட !- என்ன செய்யலாம்? (For Improving Fine Motor Skills in Young Children)

ஒரு 20-30 ஆண்டுகளில் நாம் பல வகையான முன்னேற்றங்களைக்கண்டாலும், குழந்தை வளர்ப்பு என்பது வெளி நாட்டில் இருப்பவர்களுக்கோ, தனிக்குடித்தனத்தில் இருப்பவர்களுக்கோ மிக பெரிய பளுவாக மாறி இருக்கிறது. பெரும்பாலும் தாத்தா பாட்டிகளுக்கு அந்நாளில் என்ன செய்தார்கள் என்பது ஞாபகம் இல்லை.

நம் தலைமுறை எல்லாவற்றுக்கும் இணையத்தில் தீர்வைத்தேடி திரிகிறோம். எனக்கு தெரிந்து வார வாரம் கருவில் வளரும் தன் குழந்தையைப்பற்றி இணையத்தில் படித்து விரல் நுனியில் ஏற்றி பாடம் எடுத்தவர்கள் உண்டு. அதிகபடியான தகவல் நம்மை மேலும் குழப்புகிறது.

பெருநகரங்களில் இந்தியாவில் வசிக்கும் நிறைய பெற்றோருக்கு, நிபுணர்கள் பயிற்சிகள் பற்றி விளக்குவதே இல்லை. சிறு நகரங்களிலோ, கிராமங்களிலோ இன்னும் ஆக்குபேஷனல் தெரபி எனப்படும் இவ்வகை சிகிச்சைகளுக்கு வழி இல்லை.

கிராமமும் அல்லாத, நகரமும் அல்லாத சின்ன ஊரில் வளர்ந்தவள் நான். விளையாட்டாய் தான் சின்ன குழந்தைகள் பெண்கள் பூ கட்டும் போது வரிசையாய் எடுத்து கொடுத்து உதவுவார்கள். இது உண்மையில் நுண் மோட்டார் திறன் வளர உதவும்.

நுண் மோட்டார் திறன் என்றால் என்ன? சின்ன சின்ன தசைகளும், கண்களும், ஒருங்கிணைந்து செய்ய நமக்கு தேவைப்படும் திறன். எழுதுவது, படம் வரைவது, ஒரு பொருளை சிந்தாமல் கையாள்வது போன்றவை நுண் மோட்டார் திறனால் சாத்தியமாகின்றன.

எனக்கு தெரிந்த சில பயிற்சிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.நான் கற்றது பிறருக்கு உதவும் என்ற எண்ணத்தைத்தவிர இதை எழுத வேறு ஏதும் உந்து சக்தி இல்லை.


1.ஊசியில்லாத தையல் :)


இங்கே இருப்பது அட்டைப்பெட்டியில் வரையப்பட்ட நாய் படம். அதன் மூலைகளில் பெரிய ஓட்டைகள். உங்கள் பிள்ளையின் ஷூ லேஸ் போதும். ஒரு வழியாக நுழைத்து மறுபடி எடுத்து பயிற்சி செய்யலாம். Mellisa and Doug என்ற நிறுவனத்தின் தயாரிப்பு இது. வீட்டிலே செய்வதும் சாத்தியமே.

2.கோலி குண்டுகளும் அப்பளக்கரண்டியும்:

பணம் செலவில்லாத பயிற்சி இது. கொஞ்சம் கோலிகுண்டுகளை ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.ஒரு கிண்ணத்திலிருந்து மற்றொரு கிண்ணத்தில் அப்பளம் எடுக்கும் குரடினால் போடச்சொல்லுங்கள். கீழே கோலி விழும் தான். சிரித்து சிரித்து விளையாட்டாய் ஒரு பயிற்சி !!!!

3.பல்லாங்குழி  :)

நம்ம பழமையான விளையாட்டு , குழந்தைகளுக்கு இது நல்ல பயிற்சி.


Always Old is Gold.பல்லாங்குழி இணையம் வழியாகவும் வாங்க முடியும்.

4.சுவர் இருந்தா சித்திரம் வரையலாம் :)

பென்சில் கிரிப் சரியாக இல்லை என்று தெரிந்தால், நீங்கள் வீட்டின் ஒரு சுவரை கருப்பு பெயிண்ட் அடித்துக்கொள்ளலாம். குழந்தைகளின் கற்பனைக்கு அவர்கள் எழுதலாம், வரையலாம். சாக் பீஸ் ரொம்ப நீளமாக இருக்க கூடாது.


இப்போது கடையில் போர்டு போன்ற உபகரணங்கள் கிடைக்கின்றன.

5.பேப்பர் தட்டுகளும், துணி காய வைக்கும் கிளிப்களும்: 

துணி காய போடும் கிளிப்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பேப்பர் தட்டிலும், போட சொல்லுங்கள்.
6.பெரிய அளவு புதிர்கள் (Jumbo Puzzles).



இவை மரத்தினால் ஆனவை. குழந்தைகள் எளிதில் கையாளும் வகையில் அவர்களை சிந்திக்க தூண்டுகிறது.

8. HAMA Puzzles:மணி மணியாய் கைவண்ணம்!
இதுவும் இன்னொரு வகை பயிற்சி. கொடுக்கப்பட்ட படத்தில் உள்ள வண்ணத்தில் மணிகளை வைத்துக்கொண்டே வர வேண்டும். சின்னச்சிறு கைகளுக்கு சவாலான முயற்சி .




8, வாங்க பேப்பர் வெட்டலாம் :
இது சிறு குழந்தைகளுக்கான கத்தரிக்கோல். பிடிக்க அவர்களுக்கு வாட்டம். பல வகையாய் அவர்களை வெட்ட சொல்லி பழக்கலாம்.



9. பெரிய அளவிலான பென்சில்கள்:
முக்கோண வகை பென்சில்கள் கிடைக்கின்றன. இவற்றில் பெரிய அளவு பென்சில்கள் குழந்தைகள் எழுத ஆரம்பிக்கும் தருவாயில் அவர்களுக்கு அதிகமாய் உதவும்.

10.எல்லாவற்றையும் விட முக்கியம் குழந்தைகள் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை.
அவர்களை வீட்டில் உள்ள சின்ன சின்ன வேலைகளில் சேர்த்து கொள்ளுங்கள். துணிகளை மடிப்பது, காபி கோப்பையை தேய்க்க போடுவது என்று அவர்களுக்கு பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள். குழந்தைகள் உங்களைப்பார்த்து நிறைய கற்றுக்கொள்வார்கள். நிறைய பாராட்டுங்கள்!!!.

Wednesday, May 18, 2016

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளும், அதற்கு பின்னரும்!

இது ஒரு 19 வருடத்திற்கு முன்னால் நடந்த கதை!!!. வருடம் 1997 .
ஆனால் அன்றைய நடப்பில் இருந்து  இன்று வரை  நிறைய விஷயங்கள்  மாறவில்லை என்றே தோன்றுகிறது.

+2 தேர்வு முடிவுகள் வந்தன. 

தமிழ் பாடத்தில் 192 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றேன். மொத்த மதிப்பெண் 1136 பெற்று திருவாரூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்றேன்.
அப்போது 1997, தி.மு.க ஆட்சிக்கு வந்த புதிது. தமிழை இரண்டாம் பாடமாக படிப்பவர்களுக்கு என்று பரிசுகளை அறிவித்தார்கள். இதில் எல்லா மாவட்டங்களிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்கள். 
தமிழ்நாடு முழுதும் கிட்டத்தட்ட 90 பேர்,இந்த திட்டத்தின் பயனர்கள்.


எனக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. இந்த உதவித்தொகையை நம்பி என் அப்பா, என்னை பிலானியில் சேர்த்தார்.

நான் எந்த கட்சியை சார்ந்தவளும் அல்ல.
இந்த பதிவை ஒரு  பயனாளியாக தமிழக அரசுக்கு என் நன்றியை சொல்லவும் , இந்த உதவித்தொகை சார்ந்த தடைகளை உடைக்க உதவியவர்களை எண்ணி என் நன்றியை சொல்லவும் பயன்படுத்த எண்ணுகிறேன்

பழைய சட்டபேரவை வளாகத்தில் தான் நாங்கள் ,அன்றைய முதல்வர் டாக்டர் திரு.கலைஞரை சந்தித்தோம். 
அப்போது, 2 பேர் தமிழில் 192 வாங்கி இருக்கீங்க. ஆனா மொத்த மதிப்பெண் அடிபடையில நீங்க 3 வது இடம். தமிழக அரசு, உங்களை இரண்டாம் இடமா நினைக்கிறோம்னு சொல்லி 2000 ரூபாய்க்கான காசோலையை அடித்து 3000 என எழுதிக் கையெழுத்திட்டார்.



என்றைக்கும் மறக்க முடியாத தருணம்.என் அப்பா முகத்தில் தெரியும் சந்தோஷம் என்றும் மறக்க முடியாதது.
 கூடியிருந்த பத்திரிகையாளர்கள் கை தட்ட, எல்லாரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

பத்திரிகைசெய்தியில்,திரு.கலைஞர் அவர்களுக்கும்,திரு.அன்பழகன் அவர்களுக்கும் இடையில் நிற்கிறேன் நான்.(பாதி முகம் தெரியவில்லை :)



வார வாரம் எதாவது ஒரு பரிசு வந்து கொண்டே இருந்தது. தமிழ் பாடத்தில் நல்ல மதிப்பெண் வாங்கியதற்காக.

அப்போது எல்லா நிதி நிறுவனங்களும் 38% வட்டி என்று அறிவித்து கொண்டிருந்தன. கலைமகள் சபா, அனுபவ் சிட்ஸ் முதலியவற்றிலிருந்தும், கோனார் தமிழ் உரை நிறுவனத்திலிருந்தும்  பரிசுகள் வந்தன. தினமலர் உள்ளிட்ட நாள் இதழ்களும் பரிசுத் தொகை வழங்கின.
 ரொக்கமாக சுமார் 20000 ரூபாய்  வந்து விட்டது.

நான் படித்த மன்னார்குடி,தூய வளனார் பள்ளியில் தமிழைக்கற்பிக்க, ஒரு நல்ல உக்தியை கையாண்டார்கள்.
6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழுக்கு மட்டும் இரண்டு ஆசிரியர்கள்.
ஒரு ஆசிரியர் வயதில் மூத்தவர். அவர் செய்யுள் பகுதியை கையாள்வார்.
நிறைய பாடல்களுக்கு நாங்களே மெட்டமைத்து வந்து பாடுவோம்.
பிழையின்றி எழுதவும் இந்த ஆசிரியை வழிகாட்டினார். நான் படிக்கும் போது திருமதி.ராதாமணி, திருமதி.கலைமணி ஆகியோர் இருந்தனர்.

இன்னொரு தமிழ் ஆசிரியை, உரைநடை மற்றும் கட்டுரை, துணைப்பாடம் ஆகியவற்றை கையாள்வார்.
இந்த முறை தமிழ் வகுப்புகளை ஆர்வமாக எதிர்நோக்க வழி செய்தது.

என் அப்பாவும் ஒரு பள்ளி ஆசிரியர். நான் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய வருடங்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு, வரவில்லை என எழுதிகொடுத்துவிடார். நேர்மைக்கு ரொம்பவே பேர் வாங்கியவர்.

சில வருடங்களில் இவரை கண்காணிக்கும் அதிகாரியாக கண்டால் நிறைய பேருக்கு நடுங்கி இருக்கிறது. ஒரு சிறு மூங்கில் கூடை நிறைய பிட் பேப்பர் பிடித்தார் ஒரு வருடம்.

நாங்கள் படித்த வருடம்  புத்தகம் மாறி விட்டது. பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தை பன்னிரண்டாம் வகுப்பில் செப்டெம்பர் மாதம் தான் ஆரம்பித்தார்கள். ஒருத்தி வாங்கிய புத்தகத்தை எல்லாரும் பிரதி  எடுத்துக்கொண்டோம்.

தீராத மின்வெட்டு அப்போதெல்லாம் மன்னையில் எப்போதுமே. மெழுகுவர்த்திக்கு தான் பணம் ஒதுக்க வேண்டி இருக்கும்.

பேப்பர் திருத்துவது கஷ்டமான வேலை. நிறைய இடைவெளி விட்டு எழுது; பாலும் தெளிதேனும் பாட்டு முதல்ல எழுது- அப்டின்னு நிறைய தேர்வு நுணுக்கங்களை சொன்னார் என் அப்பா.

அரசாணை வந்ததும்,எந்த செலவுகளை அரசு ஏற்கும்; எதை ஏற்காது என்பதில் ஒரு குழப்பம் இருந்தது. உணவு செலவுக்கு , புத்தக செலவுக்கு  உண்டா. என் போல தமிழ்நாட்டில் படிக்காமல் வெளியே படிப்பவர்களுக்கு ரயில் கட்டணம் உண்டா என பல கேள்விகள்.

நாங்கள் செய்யும் எல்லா செலவுக்கும் கணக்கு காண்பித்து, அவற்றுக்கு 4 பிரதி எடுத்து, மாவட்ட பள்ளி கல்வி அலுவலகத்தில் காண்பிக்க வேண்டும்.
முன்னே செலவு செய்து பின்னர் பணம் அரசிடமிருந்து கிடைக்கும்.

முதல் வருடம் பெரிதாய் ஒரு பிரச்னையும் இல்லை. பார்க்கின்ற  உறவினர்கள், பாரு. அக்கா மாதிரி படிக்கணும். அப்பாக்கு கஷ்டம் இல்லாம படிக்கறானு சொல்லும்போது உள்ளுக்குள்ள பெருமையா தான் இருந்தது.

நான் படித்தது பொறியியல் அல்ல. 4 வருடங்களில் கிடைக்கும் MBA க்கு சமமான MMS  என்ற ஒரு படிப்பு. இந்தியாவில் இங்கே மட்டும் தான் இருக்கிறது. ஆராய்ச்சி எல்லாம் பண்ணி சேரல.
யாருக்கோ வாங்கிய விண்ணப்பபடிவம் என் சித்தப்பா கொடுத்து விண்ணப்பித்தேன். 

 பிலானியில் சேரும் போது உங்களுக்கு என்ன படிப்பு வேண்டும் என்று கேட்பார்கள். நான் கேட்ட பொறியியல் படிப்பு கிடைக்கவில்லை. பிலானியில் முழுதும், மதிப்பெண் அடிப்படையிலான அனுமதி. நான் கேட்ட 4வது சாய்ஸ் MMS .

ரொம்ப நாள் தாமதமாய் counselling தொடங்கவும் பிலானியில் சேர்ந்து விட்டேன்.
என் அம்மா அப்பா வழியில் சித்தப்பா, சித்தி, மாமா என பலரும் எனக்கு உதவினார்கள்.உடைகளில்  தொடங்கி, துணிகள் உலர்த்தும் கயிறு வரை பட்டியலிட்டு வாங்கி கொடுத்தார்கள்.
ஹிந்தி தெரியாமல், ஆங்கிலமும் அதிகம் தெரியாமல் நன்றாக விழிகள் பிதுங்கின.

ஒரு வழியாக பாதியில் விடாமல் நல்லபடியாய், மிக தீவிரமான குளிரையும், மற்ற பல சிக்கல்களையும் தாண்டி படித்தேன்.நாலாம் வருட கடைசியில் cognizant நிறுவனம் என்னை வேலைக்கு சேர்த்துக்கொண்டது.

என் அறை தோழியில் ஒருத்தி என்னை விட மொத்த மதிப்பெண் அதிகம் வாங்கியவள். அதென்ன தமிழ் படிச்சதாலே உனக்கு மட்டும் உதவித்தொகைனு நிறைய தடவை கேட்டு இருக்கா.இது வேற மாதிரி சமூக அநீதின்னு சொன்னவங்களும் இருந்தாங்க 

இரண்டாவது வருடம் ஆரம்பத்தில் சொன்னார்கள்- அரசால் முழுதும் செலவை ஏற்க முடியாது. ஒரு அரசாணை வர போகிறது. வருடத்திற்கு ஒரு சிறு தொகை கிடைக்கும் என்று.

இரண்டாம் ஆண்டில் எந்த வங்கியும் உங்களுக்கு எளிதில் கல்விக்கடன் தராது. அதிலும் என்னைப்போல,பரவலாக தெரியாத படிப்பை படிப்பவர்களின் கதை இன்னும் மோசம்.
அப்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியராக திரு.உமா சங்கர் இருந்தார்.
நான் ஒரு இன்லண்ட் லெட்டரில் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

படிப்புக்கான உதவி பாதியில் நின்றால் எங்கள் எதிர்காலம் என்ன?. உங்களுக்கு என் நிலை புரியும் என்பதாக.
அந்த கடிதம் சென்னையில் நடந்த கலெக்டர் மாநாட்டில் படிக்கப்பட்டது.
எங்கள் நல்ல நேரம், நாங்கள் படித்து முடிக்கும்வரை உதவி தொகை கிடைக்கும் என்று அறிவித்தார்கள். அடுத்த வருடத்திலிருந்து இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இது எனக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ் ; இதில் வாழ்த்துக்களுடன்  என்று தான் இருக்கிறது  டாக்டர்.கலைஞரின் கையொப்பம் . 

ஆனால் பெருவாரியானவர்கள்  வாழ்த்துகள் என்றே எழுதுகிறார்கள். 
எது சரி என்பதில் தனியாக பட்டிமன்றம் நடக்கிறது அங்கங்கே :).

என் அனுபவம் சொல்லும் பாடம் என்ன?
1. எந்த அரசாணையாக இருந்தாலும், அதைத்தொடங்கி அதனால் பயன் பெறுவோருக்கு இடையில் பயன் நின்று போகாமல் இருக்கும் வகையில் செயல் திட்டம் இருக்க வேண்டும்.
2. எந்த செலவு வகைகள் உண்டு இல்லை என்று விரிவாக சொல்லிவிட்டால், பல கேள்விகளை தவிர்க்கலாம்.
3. நிறைய பெற்றோர்கள் செலவழிக்காத பணத்திற்கு பொய் ரசீது தந்தனர்.ஆதியோடு அந்தம் ஊழல் இல்லாமல் இருந்தால் தான் தனி மனித அளவிலும் பொய்யை தவிர்க்க இயலும்.
சிங்கப்பூராக இருந்தால் பொய் ரசீது சமர்ப்பிக்க யாரும் அஞ்சுவார்கள்

4.அடித்தளத்தில் இருந்து படித்து அதிகாரத்தில் இருக்கும் அலுவலர்கள் பலருக்கு, தம்போன்ற மாணவர்களின் கஷ்டம் புரிகிறது. இப்போதெல்லாம் முன்னை விட இன்னும் நிறைய பேர் உதவுகிறார்கள். ஊடகங்களும் தன் பங்கிற்கு உதவுகின்றன.
ஒருவர் மற்றவர் மீது காடும் அக்கறை என்பது மேலும் அதிகரித்தாலே, நாம் முன்னேறிவிடலாம்.

5.ஒவ்வொரு   முறையும்  கருவூலத்திலிருந்து என் அப்பாவுக்கு  DD வரும்போதும் கண்டிப்பாக  கையூட்டு  கொடுத்தே  ஆக வேண்டிய  நிலை இருந்தது.  என் அப்பா சொல்லி கொண்டே இருப்பார் . இது scholarship என்று நினைக்காதே . பல முறை நடையான  நடை  நடக்கிறேன்  என்று.

எல்லா அரசாங்க அலுவலகத்திலும் பணம் வாங்காமல் ஒன்றுமே நடக்காதா?. அங்கொன்றும் இங்கொன்றுமாய் நாம் லஞ்சம் வாங்காதவர்களை ப்பற்றி  கேள்விப்படுகிறோம். 20 ஆண்டுகளில் இந்த நிலை மாற வில்லை.

 முதல் முறை பணம் கடனாக வாங்கி கல்லூரிக்கு கட்டி இருந்தார். 4 மாதங்கள் ஆகியும் பணம் வரவில்லை. அப்போது அப்பாவுக்கு தெரிந்த திரு.அம்பிகாபதி என்ற மில் உரிமையாளர் அவருக்கு தெரிந்த திரு. T.R.பாலு அவர்களின் உதவியாளருக்கு சொல்லி அவரும், திரு.கலைஞர் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.பணம் எங்களுக்கு வந்தது.

நான் ஒவ்வொரு முறை பிலானிக்கு  கிளம்பும் போது கண்டிப்பாக ஒரு மொத்த தொகையும், ஒரு 200 ரூபாய்க்கு நாணயமுமாய் தருவார் அப்பாவின் நண்பர் திரு.வைத்யநாதன். இவர் ஸ்டேட் பேங்க் ஊழியர்.
அப்பாவின் மற்றொரு நண்பர் திரு.விவேகானந்தனும் அப்பாவிற்கு முன்பணம் கடனாக கொடுத்து உதவினார்.

ஆக, ஊர் கூடி தேர் இழுத்து போல, அரசு செலவில் என் படிப்பிற்கு தடை வந்த போது, பலரும் உதவினார்கள்.

ஒருமைக்கண் கற்ற கல்வி  ஒருவர்க்கு எழுமையும் ஏமாப் புடைத்து என்கிறது திருக்குறள்.
 என் கல்வி என்னைபோல பலரையும் கைத்தூக்கி விட வேண்டும். 

இன்று அந்த எண்ணத்தில் நானும் வருடத்தில்  ஒரு 5-10 பிள்ளைகளுக்கான பள்ளி அல்லது கல்லூரி கட்டணத்தை செலுத்துகிறேன்.
இந்தியாவில் இல்லாவிட்டாலும் என்னால் முடிந்த நன்றி இதுவே.

 இலவச கணினி முதலியவற்றைத்தருவதை விட, வென்றவர்களுக்கு படிப்புக்கான உதவித்தொகை என்ற அணுகுமுறை, மாணவர்களை ஊக்கப்படுத்தும் என்பது என் தனிப்பட்ட கருத்து .

எனக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!!!.



Sunday, April 10, 2016

நாவல் பயிலரங்கு அனுபவம் (10-4-2016)

10-4-2016 : நாவல் பயிலரங்கு!.
காலைல அங் மோ கியோ நூலகத்துக்கு நான் வரும்போது திரு.இளங்குமரன் நிகழ்ச்சி இங்க தானானு அவர் நண்பர்களுக்கு அலைபேசியில் கேட்டுகொண்டிருந்தார்.
ஊருக்கு முன்னாடி சொன்ன நேரத்துக்கு குழந்தையை விட்டுட்டு வந்தாச்சு; ஆனா பயிலரங்கு ஆரம்பிக்க மணி 10 ஆயிடுச்சு.


ஆரம்பிச்ச பிறகு எல்லோர் பேச்சுமே நன்றாக இருந்தது. தோழிகள் கூட்டத்தோடு, சிரித்த வண்ணம், முழு நாளுமே நிறைவாக இருந்தது.

நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டோம். எங்க மேஜைல எங்களுக்குள்ளேயே நிறைய விவாதிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் செய்ய முடிந்தது.

திரு.புண்ணியவான் அவர்கள், தி.ஜானகிராமனின் மோகமுள் பற்றி பேசும்போது நாங்கள் அதில் வரும் வேறு சிலரை பற்றியும் பேசினோம்.

ஒரு விஷயம் மிகத்தெளிவாய் புரிந்தது.தமிழர் வாழும் எல்லா நாடுகளிலும் சிங்கப்பூர் போல இலக்கியத்துறையில் ஈடுபட சூழ்நிலை நிலவுவதில்லை.
சிகப்பு அட்டை பற்றி திரு.கோ.புண்ணியவான் அவர்கள் பேசும்போது அந்த சூழல் கண் முன்னே விரிந்தது. அவரது நூலான செலாஞ்சார் அம்பாட் படிக்க வேண்டும்.
திரு.வித்யாசாகர் பேசும்போது அடிக்கொருதரம் நாங்கள் சிரித்துக்கொண்டே இருந்தோம். தென்றல் பத்திரிகையும் கொடுத்தார்கள்.


திருமதி ஜெயந்தி ஷங்கரின் திரைக்கடலோடி சிறுகதை தொகுப்பை ஒரு சிலர் வாசித்திருந்தோம். ஒவ்வொரு சிறுகதையும் ஒரு விதம்- ஒரு கதையில் ஒரு இந்திய ஆடவர் சிங்கப்பூர் பெண்ணைத்திருமணம் செய்வார்; ஆனால் திருமணத்தின் பின்னர், எல்லா அதிகாரமும்  அந்த பெண்ணின் கையிலும் அவளின் பெற்றோர் கையிலுமே இருக்கும்.

இன்னொரு கதையில் ஒரு பெண்ணை வீட்டு வேலைக்கென இந்தியாவிலிருந்து வரவழைத்தால், அந்த பெண் நான் வீட்டு வேலைக்கு வரவில்லை ;எனக்கு அலுவலக வேலை தான் வேண்டும் என்று அழுது தீர்ப்பாள். நீ இந்த விசாவில் வேறு வேலை செய்ய முடியாது என்று சொன்னால் ஏற்று கொள்ளும் மன நிலையில் இருக்க மாட்டாள்.

அவளை ஊருக்கு திருப்பி அனுப்புவதற்குள் படும் பாடு; அவள் தன் சொந்த ஊர் வரை சென்று சேர்ந்தாள் என அறிந்த பிறகு வரும் நிம்மதி என பல உணர்ச்சிகளைத்தொடும் மற்றொரு கதை.

நான் கடைசி நிமிஷத்தில் திருமதி.ஜெயந்தி ஷங்கர் அவர்கள் வருகிறார்கள் என்ற ஆவலில் தான் சேர்ந்துகொண்டேன்.

நூலகத்தில் அவரது சிறுகதைத்தொகுப்பை முதலில் வாசித்தேன்.முதல் வாசிப்பிற்கு பிறகு, அடுத்த முறையிலிருந்து நானாக  அவர் புத்தகங்களைத்தேடி வாசிக்க ஆரம்பித்தேன்.

அவரின் கதைகளில் அவரால் மற்ற எழுத்தாளர்களை விட சீன கலாச்சாரத்தை பற்றி அறிந்து எழுத முடிகிறது.அதற்கு காரணம்,தான் வளர்ந்த சூழலும் , திறந்த மனதோடு இருப்பதும் தான் என்றார்.

சிங்கப்பூரின் வாழ்க்கை முறையை,இங்கு உள்ள சிக்கல்களை , கதை வடிவாக தமிழர் வாழும் பல நாடுகளுக்கு இவரின் நூல்கள் அழகாய் சொல்கின்றன.

ஒரு திட்டம் போட்டு தான் நாவல் எழுதணுமா? 
நாவல் முழுக்கவே ஒரே ஆள் கதை சொல்வது போன்று அமைந்தால் அந்த நாவல் படிக்க சுவாரஸ்யமாய் இருக்குமா?இப்படி சில கேள்விகள்!

எனக்கு சமையல் செய்யும் போது ஒரு வரி தோணும்; எழுதறதுக்குள்ள எங்கியாவது மறந்திடுமோனு  பதட்டம் ஆயிடும் - இது தான்  வினுதா,பானு சுரேஷ், தமிழ் செல்வினு எங்க மேஜைல இருந்த எல்லாரோட எண்ணமும்.

திருமதி.ஜெயந்தி ஷங்கர் சொன்னாங்க.-" உங்களுக்கு உள்ள இருக்கற கதை உங்களை விட்டு போகாது . பதட்டம் வேண்டாம். நாள்பட எழுதும் போதும் இந்த பதட்டம் போயிடும். ஒரு பேப்பர் பென்சில் வெச்சு, தூக்கத்தில தோணுகிற கருத்தை எழுதிடுங்கனு' .
 அட. இது கூட நல்லா இருக்கேன்னு தோணிச்சு.

திருமதி.பிரேமா மகாலிங்கம் உங்களுக்கு பயனுள்ளதா இருக்கானு கேட்டுகிட்டே இருந்தாங்க. நான் வாசகர் வட்டத்துக்கு புது வரவு.அவங்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரா, எல்லார் மேலயும்
நல்ல அக்கறை.

சொந்த அனுபவமா இருக்கறது நல்லதுன்னு சொன்னதும், ஒருத்தர் கேட்டார், கொலை பற்றிய கதைனா, கொலை பண்ணிட்டா எழுத முடியும்னு?

பாதையில் பதிந்த  அடிகள் - திருமதி.ராஜம் கிருஷ்ணன் அவர்களின் மணலூர் மணியம்மாள் பற்றிய நூல். கொஞ்சம் கொஞ்சமாக மனியம்மாளை பற்றி அவர் வாழ்ந்த ஊரில் சென்று தகவல் சேர்த்து தான் எழுதினார்

திருமதி சிவசங்கரியின் பாலங்கள் நாவல் அவர் இந்த நாவலுக்காக எத்தனை முயற்சி எடுத்திருப்பார் என்று வியக்க வைத்தது. மூன்று தலைமுறை வாழ்க்கையையும் எழுத நிறைய பாட்டிகளோடு பேசினார் சிவசங்கரி.
சொந்த அனுபவம் இல்லேன்னா ரொம்ப முயற்சி செய்து அதுக்காக உழைக்கணும்.

நாங்களாக எங்களுக்கு தெரிந்த கதைகளை பற்றியும் பேசினோம்.
எதையும் திறந்த மனசோட அணுகினா ஒரு எழுத்தாளனுக்கு மற்றவர்களுக்கு தெரியாத கோணங்கள் கிடைக்கும் என்பது தான் திரு.வித்யாசாகர், திருமதி.ஜெயந்தி ஷங்கர் இருவரும் சொன்ன கருத்து.

சட்ட சிக்கல்களை பற்றிய கேள்வி எழும்போது, Loss and Laws புத்தகம் பற்றியும் கேட்க நேரிடும் என்று எதிர்பார்த்தேன்.

திருமதி.ஜெயந்தி ஷங்கரின் திரிந்தலையும் திணைகள் நாவலில் வரும் பாலசுப்ரமணியர் கோவில் என் வீட்டில் இருந்து பத்தடி; 

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.அவரின் அறிமுகம் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு மறக்க முடியாத தருணம்.அவர் சொன்ன பதில்களில் வெளிப்பட்ட உண்மையும், தெளிவும் அவரின்  சிந்தனையில் உள்ள முதிர்ச்சியை அழகாய் காட்டின.

வடை, பாயசம்னு உணவும் ருசி; காதுக்கு வந்த உணவும் ருசியே.
நல்ல அனுபவம்; நன்றி- திரு.பாலு மணிமாறன் மற்றும் தங்க மீன் ஏற்பாட்டுகுழுவிற்கு.



Wednesday, March 23, 2016

கல்யாண தேனிலா.. காய்ச்சாத பால் நிலா...!

போன டிசம்பர் மாசம் (12.12.15), மாலை ஒரு ஆட்டோல அண்ணா சாலை பக்கம் போய்கிட்டு இருந்தேன். எல்லாரும் வானத்தையே பார்த்துட்டு இருந்தாங்க.
ஆட்டோ ஓட்டுனர் சொன்னாரு
- ஏன் எல்லாம் வானத்தையே பார்க்குறாங்க. உலகம் அழிய போகுதா?



நானும் வெளிய தலைய விட்டு மேல பார்த்தா- நிலாவிலிருந்து பால் வழியற மாதிரி காட்சி.
நான் ஏதோ ஒரு தனிப்பட்ட பிரச்னையை நினச்சு, மனசளவுல நொந்து போய் வந்துகிட்டு இருந்தேன். ஏதோ கடவுள் அருள் மாதிரி அந்த நொடி நினச்சேன்.

வீட்டுக்கு வந்து பேப்பரை பார்த்தா- நம்ம சிங்கப்பூர் செயற்கைக்கோள் 
ஸ்ரீஹரி கோட்டாலேந்து விட்டு இருக்காங்க.
ஒரே அல்வாவா போச்சு. :)




Tuesday, March 22, 2016

சீன மூங்கில் - விடா முயற்சி சொல்லும் பாடம்!


என் பையன் படிக்கும் பள்ளியில் கண்ட ஒரு சுவரொட்டி இது.
ஒவ்வொரு குழந்தையும் ஒரு விதம்; ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் வேறானது. குழந்தைகளை ஒப்பிடவும் வேண்டாம்; ஓடி விளையாட கூட நேரமின்றி அவர்களை எப்பொழுதும் படிக்க சொல்லவும் வேண்டாம்.

இப்போதுள்ள அவசர யுகத்தில், அம்மாக்கள் whatsapp  போன்றவற்றை கூட தத்தம் குழந்தைகளை பற்றிய அலசலாக ஆக்கும் கூத்தையும் காண முடிகிறது.

என் தோழிகளில் சிலர், வார வாரம் , வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி பற்றி படித்து கொண்டிருப்பர்; இவை எல்லாம் ஒரு அளவுக்கு தான் உதவும்.

குமரகுருபரர் என்ற ஒரு சைவ பெரியவர். சகலகலாவல்லி மாலை, மீனாட்சி பிள்ளை தமிழ் என பல நூல்கள் இவர் அருளிவை.
இவர் பிறந்து முதல் 5 ஆண்டுகள் ஒன்றும் பேசவில்லை.கந்தர் கலி வெண்பா பாடினார்- தன் ஐந்தாம் வயதில்!

தாய்மை என்பது ஒரு அனுபவம். ஒரு சின்ன குழந்தையோடு அதன் உலகில் பயணிக்கும் அனுபவம். தாயும் தந்தையும் தான் அவர்களுக்கு ஹீரோ ஹீரோயின் . 

குழந்தைகள் தங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உள்வாங்கி வளர்கின்றனர். அவர்களுக்கு உரமாக நாம் தர வேண்டியது அன்பும், நல்ல அரவணைப்பும் மட்டுமே. சட்டென்று அவர்கள் தங்கள் வளர்ச்சியில் நம்மை வியக்க வைக்கின்றனர். 

என் மகனிடம் போன வாரம் சொன்னேன் - அம்மாவிற்கு ரொம்ப கால் வலிக்கிறது. இப்போது உன்னை விளையாட அழைத்து செல்ல முடியாதென.
அவன் மீண்டும் பிடிவாதம் பிடிக்க - காலையிலிருந்து உட்கார நேரமில்லை தம்பி. உனக்கு இதயம் இருக்கானு கேட்டேன்.
அவன் சொன்னான்- என்னிடம் triangle  square  எல்லாம் இருக்கு; ஹார்ட் இல்லைன்னு . நொந்துட்டேன்; அவனோட கிளம்பி கீழ போனேன் :)





Thursday, March 3, 2016

மானுடம் வாழும் -சுசீலா மாமி! (மன்னை நினைவலைகள்)

மெத்த படித்தவரல்ல; ஆணும் பெண்ணும் சரி நிகர் என எண்ணும் குடும்பத்தில் வந்தவரும் அல்ல.
பைங்காநாட்டில் பிறந்து 12 வயது வரை மட்டுமே பள்ளிக்கு அனுப்பட்டவர்;
சுட்ட அப்பளமும், வத்த குழம்புமாய், வறுமையில் மிக செம்மையாய், சிக்கனமாய் குடும்பம் நடத்தும் பெண்மணி.

என் நினைவில் , பாதி  வெள்ளையும் , பாதி  கறுப்புமாய்  இரண்டே கால்கள் கொண்ட எலி வால் பின்னல்; அதில் ஒரு கிள்ளு பூ.
அள்ளி சொருகிய ஆறு முழ புடவை. கைகளிலும் கால்களிலும் எப்போதும் இருக்கும் மருதாணி நிறம்.
மாமி சற்றே மாநிறம் ஆனவர். வாயில் அவ்வவ்போது பெருகும் எச்சிலை முழுங்கியவாறே பேசுவார்.முகத்தில் எப்போதும் தேக்கிய புன்னகை அவரின் தனித்த அடையாளம்.
நிக்க நேரமில்லடி வித்யா; அம்மாவை வார மலரை எடுத்து வெக்க சொல்லு, வரும் போது வாங்கிகறேன் என்பார்.

மென்பொருள் துறையில் உள்ள கஷ்டங்களை பற்றி பலரும் பேசுகிறோம். அனால் இது தான் வேலை என்று இல்லாமல் எத்தனையோ வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றிய பெண்கள் அநேகம்.

மாமிக்கு இது தான் வேலை என்று இல்லை. சமையல் வேலை செய்வார்; வார பத்திரிகைகளை வாங்கி, அவற்றை பல வீடுகளுக்கு படிக்க கொடுத்து, அவற்றுக்கு ஒரு தொகையை வாங்கி கொள்வார்.
ரேஷனில் கால் கடுக்க நின்று உங்கள் வீட்டின் பொருட்களையும் வாங்கி கொண்டு வந்து தருவார்; கத்திரி வெயில் வாட்டும் நாட்களிலும் கூட வடகம் போட்டு விற்பார். எங்கள் தெரு குழந்தைகள் யார் போய் கேட்டாலும்,சுவையான எலுமிச்சை பிழிந்த காரமான அரிசி வடக மாவு கை நிறைய தருவார்.

மாமிக்கு கால்ல சக்கரம் தான் வெச்சுருக்கு; மேல ரெண்டாம் தெருலேந்து அசேஷம் வரைக்கும் கூட தினமும் நடப்பார். 18 நாள் உற்சவத்திற்கும், எங்கள் மன்னை ராஜ கோபாலனை பார்க்க மாமி ஆஜர்.
எங்களை மாதிரி சில குடும்பங்களுக்கு மாமி வந்து சாமியின் டைம் டேபிள்  சொல்வார்; சாமி இன்னும் கீழ ராஜ வீதியில இருக்கு; சீக்கிரம் போங்கோன்னு.
ஒரு நாளும் உடம்பு முடியலைன்னு சொல்லி பாத்ததில்ல  நாங்க.

அன்றைக்கு (1980-2000)  எந்த ஒரு வீட்டில் இல்லாதது  கேமரா. மாமியின் புகைப்படம் இல்லை என்னிடம். மன்னையில் அன்று இருந்த பல குடும்பங்கள் இன்று சென்னைக்கு பயணித்து விட்டன. மாமி போன்று சிலர் எங்கள் நினைவில் என்றும் நீங்கா முகமே.

மாமிக்கு மூன்று பெண்கள்; நார்மடி உடுத்திய பாட்டி- மாமியின் மாமியார்- உடல் வற்றிய ஒரே வேளை ஒரு கை உண்ணும்  பாட்டி .அவர் சிறுமியாய் இருக்கும் போது வெள்ளைகார துரை குதிரையில் வந்தால் எப்படி நடுங்கி ஒளிந்துகொள்வர் என கதை சொல்லுவார்.மாமா ரிடையர் ஆகி, எலெக்ட்ரிசிட்டி வேலை பார்த்தார்.

சாதி மத பேதமில்லாத ஒரு விஷயம்  பெண் சிசுக் கொலை ; நவ நாகரிகம் மிக்க இந்த நாளிலும் நடக்கும் அவலம்.

வரதட்சணை கொடுமை அதிகம் இருந்த எண்பதுகளில், பெண் குழந்தைகள் எல்லா வீடுகளிலும் வரவேற்கப்பட்ட மழலைகள் அல்லர்.

மாமியின் மூன்றாவது பெண் குழந்தை பிறந்த போது அதை உடனே மேல் உலகம் அனுப்ப தயாராய் இருந்தன சுற்றங்கள்.
அஞ்சு பெண்ணை  பெத்தா அரசனும் ஆண்டி ஆவான்;உன் புருஷன் ஒண்ணும் அரசனும் இல்ல என்பதான புத்தி மதிகள் வேறு.

மாமி மிக தெளிவாய் முடிவெடுத்தார்- என் குழந்தைக்கு தேவையான பணத்தை நான் எப்பாடு பட்டாவது சம்பாதிக்கிறேன்; என் குழந்தை வாழ வேண்டும்.அன்றிலிருந்து ஓட்டம் தான்.
மூன்று பெண்களையும் படிக்க வைத்து, நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்தார்.
கடைசி பெண்ணுக்கு திருமணம் செய்ய ஒரு வருடம் அமெரிக்காவில் தெரியாத யாரோ ஒருவர் வீட்டில் சிறு பிள்ளையை பார்த்துக்கொள்ள போனார்.
நிறைய நேரங்களில், படித்த நல்ல வேலைக்கு செல்லும் பெண்களுக்கே அவ்வப்போது தோன்றும் அவ நம்பிக்கை, சுய திறமை குறித்த சந்தேகம் எனத் தோன்றும் தருணங்களில், நம்பிக்கை நட்சத்திரமாக மனக்கண்ணில் தோன்ற வேண்டியவர் மாமி போன்றவர்கள்.

வீடு வேலைகளிலோ, அலுவலக வேலைகளுக்கோ, நிறைய நேரங்களில் அங்கீகாரம் தேடும் தலைமுறை நாம். மாமி போன்றவர்கள் வாழ்க்கையில் நல்ல பாராட்டை எப்போதோ ஒரு முறை தான் பார்த்து இருப்பார்கள்.

மாமி இப்போது சென்னையில் இருக்கிறாராம்.  பார்த்தே பல வருடங்கள் ஆகி விட்டன; அடுத்த இந்திய பயணத்தில் எங்கு இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். மாமிக்கு ஒரு சல்யுட்!