Saturday, December 31, 2016

விடைபெறும் 2016 - வார்தாவும் ,விமான நிலையத்தில் மாட்டிக்கொண்ட நாங்களும்!

இந்த வருடம் 2016  எங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத பல தருணங்களைத்தாங்கி வந்தது. அசுரப்பிரயத்தனம் செய்து, சில தடங்கல்களைத்தாண்ட வேண்டி இருந்தது. 

அந்த வகையில் கடைசியாக வந்தது வார்தா- நானும் வரேண்டா என்றது. 


ஊருக்கு போன ஓரிரண்டு வாரங்களில் ஒரு தானியங்கியிலும் பணம் இல்லை. அப்பா வெச்சுக்கொடுத்தது, மாமனார் அன்பில் கொடுத்தது என்று அவர்கள் கொடுத்த பணத்தை வைத்தே, சென்னை, பாண்டி என்று சுற்றி வந்தோம். வழக்கமான கார் பயணம் இல்லாமல், சிக்கனமாக பேருந்தில் சென்று வந்தோம். சிலக்கடைகளில் பற்று அட்டையைப்பல முறை தேய்த்தார்கள். பயமாக இருந்தது. 
ஒரு வழியாய் சிக்கனமாக வேண்டிய பொருட்களை மட்டும் வாங்கி, கணவரின் நெஞ்சில் மசாலா டீயை வார்த்தேன். 

அப்பளம், வடகம், கைப்பிடி மாற்றிய குக்கர், அதற்கு உயிர்தோழியாக புது காஸ்கெட்,பற்று அட்டையில் தேய்த்து வாங்கிய ஆடைகள், இந்திய பெண்களின் உலகளாவிய ஆடையான நைட்டிகள் , கைத்தறி துண்டுகள், கதர்க்கடை நாலு முழம் வேஷ்டிகள்,ஆதார் அட்டை விண்ணப்பிக்க என்று கொண்டு வந்த சான்றிதழ்கள் என்று சகலத்தையும் மூட்டைக்ககட்டினேன். அப்பா கடைசி நேரத்தில் நாட்டு நெல்லிக்காய், பச்சை மிளகு என்று பொழிந்த அன்பையும் அட்டைப்பெட்டியில் அடைத்தேன் . 

ஞாயிறு மாலை செய்தியில் எல்லா ரயில்களும் புயல் காரணமாக ரத்தானதாய் சொல்லப்பட்டது. விமானங்களைப்பற்றி ஒரு செய்தியும் இல்லை.

ஏர் இந்தியாவின் சேவை மையத்தின் தொலைப்பேசி எண்ணில் யாரும் பதில் அளிக்க வில்லை. வானம் புயல் வருவதற்கான எந்த அடையாளமும் இன்றி இருந்தது.

டாக்ஸியில் காலை எட்டரை மணிக்கு புதிய சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டோம். வழக்கம் போல விமான அனுமதி சீட்டு பெற்று, பெட்டிகளைக்கொடுத்து விட்டு, குடியேற்றமும் முடித்தோம்.
அதன் பிறகு விமானம் தாமதம் என சொல்லப்பட்டது. மழையும் ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் காற்றின் சீற்றம் அதிகமாகி, விமான ஓடு களப்பாதையில் இருந்த விளக்குக்கம்பங்கள் பிரேக் டான்ஸ் ஆடத்துவங்கின.

ஆளாளுக்கு இருந்த ஓரிரண்டு தொலைப்பேசிகள் வழியாகவும், இலவச இணைய சேவை வழியாகவும் வீட்டுக்கு செய்தி சொல்ல ஆரம்பித்தார்கள்.
கையில் இருந்த கொஞ்சம் இந்திய பணத்தில் காபிக்கு 120 ரூபாய் என்பது நெஞ்சு வலியைதானே உண்டாக்கியது.

இதற்குள் கொஞ்ச நேரத்தில் அனைவரின் கைப்பேசியில் இணைய சேவை சொர்க்கப்பதவி பெற்றது. அதன் பின்னர், ஒவ்வொருவராய் கைகுலுக்கி நீங்க சிங்கப்பூர்ல எங்க இருக்கீங்க? எங்க வேலை பாக்கறீங்க என்று நட்பு பாராட்ட துவங்கினோம்.

நேரம் ஆக ஆக ஒரு ஒரு விமான சேவை நிறுவனமும் மதிய உணவைத்தந்தது.Ethiad நிறுவனம் பயணிகளுக்கு உடனே தாங்கும் வசதியை ஏற்பாடு செய்து விமான நிலையத்திலிருந்து அவர்களைக்கொண்டு சென்றது.
நாங்கள் அவர் வருவாரா? அவர் வருவாரா? என்று ஏர் இந்தியா ஆசாமிகள் முக தரிசனத்துக்கென்று காத்திருந்தோம்.

புயலின் வேகம் அதிகரித்து , கேட் 18  முழுதுமாய் ஆட்டம் கண்டது. ஒரு சில போலீசார் வந்து எங்களை பழைய விமான நிலையத்தில் இருக்கும்படி சொன்னார்கள்.
ஒரு 4  மணி நேரங்கள் என்ன நடந்ததென்று யாருக்கும் புரியவில்லை. ஒரு சிலர் தரையில் அப்படியே தூங்கினார்கள். ஏர் இந்தியா சிப்பந்திகள் யாரையும் காணோம்.மாலை நேரம் சிங்கப்பூரிலிருந்து வர வேண்டிய விமானம் பெங்களூர் சென்றதாய் அறிவிக்கப்பட்டது. 

பின்னர் ஓரிரு ஏர் இந்தியா ஊழியர்கள் வந்து, உங்கள் பெட்டிகளைத்திரும்ப பெற முடியாது. மின்தூக்கி இருக்கும் பகுதி முழுவதும் நீர் தேங்கி உள்ளது. வடபழனியில் தாங்கும் இடம் ஏற்பாடு செய்கிறோம். ஆனால் இப்போதைக்கு ஒரு போக்குவரத்து வசதியும் செய்து தர முடியாது என்றார்.


கொஞ்ச நேரம் கழித்து தான் எங்களின் பல சான்றிதழ்கள் பெட்டிகளில் இருப்பது நினைவில் வந்தது. 4  மணி நேரம் கெஞ்சிக்கூத்தாடி அவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு வந்தோம். 

மற்றபடி எங்களோடு பேச எந்த அதிகாரியும் தயாராக இல்லை. குடியேற்றம் முடிந்து உள்ளே இருந்த எங்களுக்கும், அந்த பக்கம் இருந்த ஏர் இந்தியா அதிகாரிகளுக்கும் இடை வெளி 20  அடிகள் கூட இருக்காது. ஆனால் அகதிகள் போல தான் இருந்தது எங்கள் நிலை.

இரவு 10 மணி வாக்கில் மதியம் மீந்த உணவுகள் மீண்டும் தரப்பட்டன.

குழந்தைகளோடு இருந்த ஓரிரு தம்பதிகள் எங்களோடு சேர்ந்து கொண்டனர். ஓய்வு பெற்ற சிங்கை பள்ளி ஆசிரியர் ஒருவர் வந்தார்.முன்பின் அறிமுகம் இல்லையென்றாலும் எங்களுக்குள் ஒத்துழைத்து, ஒருவர் மற்ற பலரின் கைப்பைகளைப்பார்த்துக்கொண்டோம். 

இரவு மழை நின்றதால் ஏக குளிரில், புது விமான நிலையத்தில், உள்ள இருக்கைகளில் உட்கார்ந்தவாறே தூங்கினோம். என் குழந்தை தரையில தூங்கணுமா? என்று சத்தமாய் சண்டையிட்டு வெளியே போன ஒரு சில பிரயாணிகளுக்கு வெளியே போக வழி இல்லை. வார்தா நிறைய மரங்களை வழி நெடுங்க பிடுங்கி வீசியதில், விமான நிலையம் தான் ஒரே இடம். உள்ளே தூங்கலாம், அல்லது வெளியே.


நாங்கள் அடுத்த நாள் காலை வரை அங்கேயே இருக்க முடிவு செய்து அப்படியே நாற்காலிகளில் கால் மாற்றி உறங்கினோம். 
மறுநாள் காலை 6  மணி வரை சேவைகள் நிறுத்தப்பட்டது என அங்கங்கே இருந்த திரைகளைப்பார்த்து தெரிந்துகொண்டோம். திருப்பதிக்கு சென்று முடிகாணிக்கை கொடுத்த ஒருவர், பெருமாளே என்னை ஊருக்கு கொண்டு போய் சேர்த்திடு என்று வேண்டிக்கொண்டார். ஒரு சிங்கப்பூர்காரரின் மகள், தூதரகத்தைத்தொடர்பு கொண்டு எங்களுக்கு எதாவது உதவ முடியுமா என்று பார்த்தார்.

மறுநாள் சூரியன் பளிச்சென்று வெளியில் வர, அனைவரின் முகத்திலும் புன்னகை. கல்யாண மண்டபத்தைப்போல, எழுந்து கழிவறைக்கு சென்ற சிலர், உங்க கிட்ட பேஸ்ட் இருக்கா? சோப் இருக்கா? என்றனர்.

சில சிறிய விமானங்கள் தரை இறங்கத்துவங்கின. எங்களுக்கும் நம்பிக்கை வந்தது. அதன் பின்னர், ஏர் இந்தியா ஊழியர்கள் 9  மணி அளவில் வந்ததும், எல்லாரும் முறையிட ஆரம்பித்தோம். முதலில் காலை உணவு தந்தார்கள். அதன் பின்னர், நாங்கள் புதிய போர்டிங் பாஸ் பெற்று, மறுபடி குடியேற்றம் செய்ய வேண்டும் என்றனர். கிட்ட தட்ட 2  மணி நேரத்துக்கும் மேல் நிற்க வேண்டி இருந்தது. செவ்வாய்க்கிழமை பயணிக்கும் புதிய பயணிகளோடு, திங்களன்று தங்கிவிட்ட பயணிகளும் சேர்ந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம்.
ஒரு வழியாய் விமானம் புறப்பட மதியம் 3  மணி ஆனது.


விமானம் தரை இறங்கியதும், அப்பாடி, ஒரு வழியாய் வந்துட்டோம் என்று எங்களின் விமான (ரயில்) ஸ்நேகிதர்களிடம் சொல்லிக்கொண்டோம்.
இப்போது AI346  என்றே ஒரு குழுவை தொடங்கி, வாட்ஸாப்ப் மூலம் தொடர்பில் இருக்கிறோம்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.