Tuesday, August 15, 2023

 வணக்கம் நண்பர்களே!

கனவு இதழில் எனது சிறுகதை வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்.

கனவு இதழை இங்கே இணைத்துள்ளேன்.

நன்றி

வித்யா அருண்  




















Sunday, July 12, 2020

சமூக அக்கறை கொண்ட படைப்புகள்- நைரா மற்றும் மாலு- வாசிப்பு அனுபவம்!



நைரா:

ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி எப்படித் திருப்பூரை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் திரு.சுப்ரபாரதிமணியன். 

அரசியல், மக்களின் இயல்பு வாழ்க்கை, பொருளாதாரம் வேகமாக வளரும்  ஊரில் அந்த ஊரின் கடைநிலை  மனிதர்கள் இடம் மாறவேண்டிய கட்டாயம், மாட்டுக்கறிக்கென இருக்கும் கூட்டம் என்று பலவற்றையும் தொட்டிருக்கிறது இந்த நாவல். பள்ளிகளில் சமசீர் கல்விக்கான புத்தகங்கள் இல்லை என்பதுகூட விடப்படவில்லை. 
எனக்கு எப்படி இத்தனை விஷயங்களை ஒரே புத்தகத்தில் கோர்த்தார் என்பது  அதிசயமாக இருந்தது.

நைரா என்ற சொல் எனக்குப்புதிது.(நைஜீரியா நாட்டின் பணத்தை நைரா என்கிறார்கள்).

 முதல் அத்தியாயத்தில் ரயில் நிலையத்தில் கறுத்தப்பனையாக நிற்கும் நைஜீரிய மனிதனின் அறிமுகம் நன்றாக இருந்தது.
 
நம் ஊரில் விற்கும் சிவப்பழகு பொருட்களின் விளம்பரங்கள் வெள்ளைத்தோலை விரும்பும் மனதைத்தானே வெட்டவெளிச்சப்படுத்திக்காட்டுகின்றன. 

கெலுச்சி போன்ற ஆண்கள், பெண்களைப் படி, நல்ல வேலைக்கு போ என்று உற்சாகப்படுத்துபவர்காளாக இருந்தாலும், அவர்கள் சிவகாமி போன்றவர்களுக்கு ஒருவித அபசகுனம் தானே . 
நம்மவர் அத்தனை கருப்பாகவும், கெலுச்சி போன்றோர் நம் தமிழர்களின் சராசரி நிறத்திலும் இருந்தால், இந்தக்காதலுக்கு ஒரு தடையும் இருந்திருக்காது இல்லையா? 

ஒரு கதைசொல்லியாக, அங்கங்கே டைரிக்குறிப்புகளாக இந்தியாவையும், நைஜீரியாவையும் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, அங்கிருந்த தலைவர்கள், அவர்களைப்பற்றிய விமர்சனங்கள் என்று திரு.சுப்ரபாரதிமணியன் எடுத்துக்கொண்ட முயற்சி நிச்சயம் பாராட்டுதலுக்குரியது.

நைஜீரியா என்ற நாட்டைப் பற்றி ஓரளவு அறிமுகம் இந்த  நூலின் வாயிலாகக்கிடைத்தது. அங்கும் முருகன் கோயில்களும், தமிழ் பேசும் மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்பது எனக்குப்புது செய்தி .

நான் அமெரிக்காவில் ஒரு சில ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். கென்யா நாட்டிலிருந்து ஓரிருவர் என்னோடு வேலைப்பார்த்தனர். வெள்ளை இன மக்களைவிட, நம் தமிழ் சமூகத்தோடு அவர்களால் தங்களது, எண்ணங்களையும், கலாச்சாரம் தொடர்பான பகிர்தலையும் எளிதில் செய்ய முடிவதாக எனக்குத்தோன்றுகிறது. 

இந்தியாவில் தான் அகதிகளாகட்டும், வேலைக்கென வரும் வெளிநாட்டவர் ஆகட்டும், பயமின்றி இருக்கமுடியும். 

காட்சிப்படுத்தும் போது  ஒரு வழிச்சாலையில் மனிதத்தலைகளை நட்டுவைப்பதாக சொல்வதும், மிதிவண்டியில் வருபவரை அதிசயமாகப்பார்க்கும் பார்வையாக ரசிக்கவைக்கும்படி காட்சிப்படுத்தி இருந்தார்.

ஆயத்த ஆடைகள் தயாரிக்கும்போது வரும் உபரித்துணிகளை அடுப்பெரிக்கப் பயன்படுத்தினால்  புற்று நோய் வரும் என்பது இந்த  நூல் வாயிலாக அறிந்துகொண்ட புதியத்தகவல். சாக்கடையாக, சாயத்தண்ணீராக  மாறி விட்ட நொய்யலை மீட்டெடுப்பது எப்படி?

சுமங்கலித்திட்டம் பற்றி பல வருடங்களுக்கு முன்னர் நீயா நானாவில் ஒரு பெண் பேசினார். அவர் நேர்முகமாக அதில் பாதிக்கப்பட்டிருந்தார். கிறிஸ்துவின் சடலம் உயிர்தெழலற்று அழுகிக்கிடப்பது போல இருக்கிறது இந்த தேசம். சரி தான்!. எத்தனை நன்னீர் ஊற்றுகள் இருந்தாலும், குடிக்க சுத்தீகரிக்கப்பட்ட நீர் தானே இன்றைய நிதர்சனம். 

கடைசி ஒரு சில அத்தியாயங்களில் மட்டும் மூட்டைப்பூச்சி, கைத்தடி போன்றவை மூலமாக காட்சிகள் நகர்வது தனியாகத்தெரிந்தது.

மொத்தத்தில் இது ஒரு நல்ல வாசிப்பு அனுபவம்!.சமூக அக்கறை கொண்ட ஒரு எழுத்தாளரின் முக்கிய படைப்பு .ஆட்சியாளர்கள் யோசிக்க நிறையவிஷயங்கள் இருக்கின்றன. சுமங்கலி திட்டம், பள்ளிமாணவர்கள் குடிக்க ஆரம்பிப்பது இப்படிப்பல. இவற்றில் முக்கியமான ஒன்று- வெளி நாட்டிலிருந்து வருவோர் எப்படி நம் சமூகப்பாதுகாப்பைப் பாதிக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வது என்பது. கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் பன்னிரண்டு வயதுக்கும் கீழே உள்ள பெண்பிள்ளைகள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்கு, அங்கு வரும் அதிக அளவிலான வெள்ளையின வெளிநாட்டவரும் முக்கியக்காரணம்.

அந்நிய செலவாணி என்று மட்டும் யோசிக்காமல், மொத்தமாக யோசித்து செயல்படாவிட்டால், இந்தியாவின் முதலுக்கு மோசம் வந்துவிடும்.


மாலு :

நைராவை போலவே பெயர் புதிது. சொல்லுக்கான பொருள் முதலில் எனக்குத் தெரியவில்லை. 
மாலு என்பது ரப்பர் மரங்களில் போடப்படும் கோடு.

திரு.சீ.முத்துசாமியின் இருளில் அலையும் குரல்கள் (தங்கமீன் வெளியீடு) தான் மலேசிய வரலாற்றை எனக்கு அறிமுகம் செய்தது.  இந்தப் படைப்பில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களான விக்னேஷும் , அப்பாசாமியும் இணைகோடுகளாகக் கதையை நகர்த்தி செல்கின்றனர். எங்கும் அவர்கள் சந்திக்கவில்லை. 
திரு.சுப்ரபாரதிமணியனின் யுக்தியாக நான் இந்தப் படைப்பிலும், மலேசியா பற்றிய தகவல்கள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் தரப்பட்டிருந்ததைக் கவனித்தேன்.
அவை மலேசிய வரலாற்றைப்பற்றி தெரிந்துகொள்ள பெரிதும் உதவின.

பெ. ராஜேந்திரன்- தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்கம் சொன்னதாக வரும் கருத்து:

இங்கு படைக்கப்படும் இலக்கியங்களையும், இலக்கியவாதிகளையும் மலேசியர்கள் அறியாமல் இருப்பார்கள். ஆனால், தமிழ் நாட்டினரையும், அங்கு படைக்கப்படும் இலக்கியத்தையும் நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம்.
இந்தச் செய்தி என்னை யோசிக்க வைத்தது.

மலேசியர்கள் பன்னிரண்டு வயது வரை மட்டுமே தாய்மொழி படிக்கும் வாய்ப்பை பெற்றவர்கள். அவர்களின் சவால்கள் முற்றிலும் வேறானவை.
தமிழ் நாட்டிலிருந்து எழுதுபவரை விட, தம் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள மலசியத்தமிழர்கள் அதிகம் போராட வேண்டியிருக்கிறது.

லங்காட் நதிக்கரை, ப.சிங்காரத்தின் புயலில் ஒரு தோணி, The Bridge on the River Kwai என அரவமிருப்பவர்கள் மேலும் படிக்க என விரித்துச்சொன்னது மிகவும் உதவியாக இருக்கிறது. 

தமிழர்கள் தம் தொழிலில் முன்னேற முடியாமல் இருப்பது ஏன் என்ற யோசனை எல்லாருக்கும் இருக்கும்.

அதை யோசனையாக நிறுத்தாமல், தர்க்கரீதியாக பதில் சொல்ல முனைந்திருப்பது சிறப்பு. 
புற உலகம் என்று வரும்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நீட்டி எழுதிய அளவில், மலேசியாவிலிருக்கும் விக்னேஷை சுற்றிய உலகம் காட்சிகளாக கண்ணில் விரியும் அளவில் சொல்லப்படவில்லை. அங்கங்கே தெரியும் கிளைக்கதாபாத்திரங்களான கிருஷ்ணமூர்த்தி போன்றோர் எப்படி போலீஸ்க்கு பயந்து மூஞ்சூர் போல உடலைகுறுக்கி அமர்கிறார்கள் என்பது, அங்கு தலைமறைவு வாழ்க்கை வாழ்வோரின் பயத்தைக்காட்டியது. 

எத்தனை முறை எச்சரித்தாலும் எனக்கு நடக்காது என்ற நம்பிக்கையில் தொடர்ந்து வெளிநாடுகளில் ஏமாறுவோரும் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள். 

  பினாங்கு, மலாக்கா, ஜோஹோர் போன்ற பகுதிகளுக்கு சென்று வந்திருக்கிறேன். கடைநிலை வேலைகளில் தமிழர்கள் அதிகம் இருப்பதைக்கண்கூடாகப்பார்க்க முடிகிறது.

திரு.சுப்ரபாரதிமணியனின்  புத்தகங்கள் விரித்துரைக்கும் சராசரி மக்களின் வாழ்க்கை போராட்டங்களும், அவற்றை சுற்றி இருக்கும் அரசியலும், நம்மை சுற்றியுள்ள உலகை புதிய கோணத்தில் அவதானிக்க வைக்கின்றன. 

Wednesday, April 5, 2017

அமைதியைத்தேடி- சித்தானந்த சுவாமி கோயில் (பாண்டிச்சேரி)

வழக்கமாக பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வரும் குடும்பங்கள், மணக்குள விநாயகரையும், அன்னையின் ஆஸ்ரமம், ஆரோவில், அழகிய கடற்கரை என்று வந்து போவார்கள்.

பிரெஞ்சு அரசின் எச்சங்களாய் அழகாய் வடிவமைக்கப்பட்ட பழைய கால கட்டிடங்கள், முறையான வகையில் செங்குத்தாய் பிரியும் சாலைகள், சிவப்பு கலர் தொப்பி அணிந்த போலீஸ் என்று பாண்டிச்சேரி பல விதமாய் உங்களை  ஈர்க்கும் .

அமைதியை நாடி போகக்கூடிய மற்றொரு இடம் சித்தானந்த சுவாமி கோயில். சென்ற வருடம் தான் கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
பாரதியார் இங்கு தான் குயில் பாட்டு எழுதினர். குயில் தோப்பு என்று அழைக்கப்படும் இந்த பகுதியில், எஞ்சி இருப்பவை ஒரு சில மரங்களும், ஒரு குளமும், சித்தானந்தரின் சமாதியும் தான்.

எல்லா மெய்ஞ்ஞானிகளுக்கும் சிலை வடித்திருக்கிறார்கள். உள்ளே பாரதியாரின் சிலையும் இருக்கிறது. 



சித்தானந்த சுவாமி 1837 ஆம் வருடம் ஜீவ சமாதி அடைந்துவிட்டார். திருப்பாதிரிப்புலியூர் ஈசனின் அருள் பெற்றவர்.வண்டிப்பாளையம் என்ற ஊரை சேர்ந்த இந்த மகான், முத்துகுமாரஸ்வாமிப்பிள்ளை என்பவரின் வேண்டுக்கோளுக்கு இணங்கி பாண்டிச்சேரிக்கு வந்தார். அவர் வந்து சேரும்முன்னரே, வெகு நாட்களாக நோய்வாய்ப்பட்ட முத்துக்குமாரசுவாமி பிள்ளையின் மனைவி நலம் அடைந்தார்.
இப்படியாக பலருக்கும் நன்மை அவரால் ஏற்பட்டது. 

பாரதியார் புதுவை வரும்முன்னரே சித்தானந்தசுவாமி சமாதி ஆகிவிட்டார். 

சித்தானந்த சாமி கோயில் பற்றிய பாரதியாரின் பாடல் 

 சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலி
 தீப வொளி யுண்டாம் - பெண்ணே 
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட 
மூண்ட திருச் சுடராம் - பெண்ணே 

உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும் 
ஓட்ட வருஞ் சுடராம் - பெண்ணே 
கள்ளத் தங்க ளனைத்தும் வெளிப்படக் 
காட்ட வருஞ் சுடராம் - பெண்ணே 

தோன்று முயிர்க ளனைத்து நன்றென்பது 
தோற்ற முறுஞ் சுடராம் - பெண்ணே
 மூன்று வகைப்படு கால நன்றென்பதை 
முன்ன ரிடுஞ் சுடராம் - பெண்ணே

 பட்டினந் தனிலும் பார்க்க நன்றென்பதைப்
 பார்க்க வொளிர் சுடராம் - பெண்ணே 
கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக் 
காண வொளிர் சுடராம் - பெண்ணே.

இந்த கோயிலின் உள்ளத்தின் அழுக்கையும், உடலின் குறைகளையும் துடைக்கும் என்கிறார் பாரதியார். 

பட்டினம் தன்னிலும்  பார்க்க நன்றென்பதை பார்க்க ஒளிர் சுடராம் என்ற வரி அருமை. 
உள்ளத்துக்கு அமைதியை அள்ளிதருகிறார் சித்தாந்த சுவாமி.
அருட்ஜோதியாய் தெய்வம் உறையும் கோயிலில் இதுவும் ஒன்று.

(நன்றி: http://bharathipayilagam.blogspot.sg/2012/05/blog-post_6836.html)




Saturday, December 31, 2016

விடைபெறும் 2016 - வார்தாவும் ,விமான நிலையத்தில் மாட்டிக்கொண்ட நாங்களும்!

இந்த வருடம் 2016  எங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத பல தருணங்களைத்தாங்கி வந்தது. அசுரப்பிரயத்தனம் செய்து, சில தடங்கல்களைத்தாண்ட வேண்டி இருந்தது. 

அந்த வகையில் கடைசியாக வந்தது வார்தா- நானும் வரேண்டா என்றது. 


ஊருக்கு போன ஓரிரண்டு வாரங்களில் ஒரு தானியங்கியிலும் பணம் இல்லை. அப்பா வெச்சுக்கொடுத்தது, மாமனார் அன்பில் கொடுத்தது என்று அவர்கள் கொடுத்த பணத்தை வைத்தே, சென்னை, பாண்டி என்று சுற்றி வந்தோம். வழக்கமான கார் பயணம் இல்லாமல், சிக்கனமாக பேருந்தில் சென்று வந்தோம். சிலக்கடைகளில் பற்று அட்டையைப்பல முறை தேய்த்தார்கள். பயமாக இருந்தது. 
ஒரு வழியாய் சிக்கனமாக வேண்டிய பொருட்களை மட்டும் வாங்கி, கணவரின் நெஞ்சில் மசாலா டீயை வார்த்தேன். 

அப்பளம், வடகம், கைப்பிடி மாற்றிய குக்கர், அதற்கு உயிர்தோழியாக புது காஸ்கெட்,பற்று அட்டையில் தேய்த்து வாங்கிய ஆடைகள், இந்திய பெண்களின் உலகளாவிய ஆடையான நைட்டிகள் , கைத்தறி துண்டுகள், கதர்க்கடை நாலு முழம் வேஷ்டிகள்,ஆதார் அட்டை விண்ணப்பிக்க என்று கொண்டு வந்த சான்றிதழ்கள் என்று சகலத்தையும் மூட்டைக்ககட்டினேன். அப்பா கடைசி நேரத்தில் நாட்டு நெல்லிக்காய், பச்சை மிளகு என்று பொழிந்த அன்பையும் அட்டைப்பெட்டியில் அடைத்தேன் . 

ஞாயிறு மாலை செய்தியில் எல்லா ரயில்களும் புயல் காரணமாக ரத்தானதாய் சொல்லப்பட்டது. விமானங்களைப்பற்றி ஒரு செய்தியும் இல்லை.

ஏர் இந்தியாவின் சேவை மையத்தின் தொலைப்பேசி எண்ணில் யாரும் பதில் அளிக்க வில்லை. வானம் புயல் வருவதற்கான எந்த அடையாளமும் இன்றி இருந்தது.

டாக்ஸியில் காலை எட்டரை மணிக்கு புதிய சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டோம். வழக்கம் போல விமான அனுமதி சீட்டு பெற்று, பெட்டிகளைக்கொடுத்து விட்டு, குடியேற்றமும் முடித்தோம்.
அதன் பிறகு விமானம் தாமதம் என சொல்லப்பட்டது. மழையும் ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் காற்றின் சீற்றம் அதிகமாகி, விமான ஓடு களப்பாதையில் இருந்த விளக்குக்கம்பங்கள் பிரேக் டான்ஸ் ஆடத்துவங்கின.

ஆளாளுக்கு இருந்த ஓரிரண்டு தொலைப்பேசிகள் வழியாகவும், இலவச இணைய சேவை வழியாகவும் வீட்டுக்கு செய்தி சொல்ல ஆரம்பித்தார்கள்.
கையில் இருந்த கொஞ்சம் இந்திய பணத்தில் காபிக்கு 120 ரூபாய் என்பது நெஞ்சு வலியைதானே உண்டாக்கியது.

இதற்குள் கொஞ்ச நேரத்தில் அனைவரின் கைப்பேசியில் இணைய சேவை சொர்க்கப்பதவி பெற்றது. அதன் பின்னர், ஒவ்வொருவராய் கைகுலுக்கி நீங்க சிங்கப்பூர்ல எங்க இருக்கீங்க? எங்க வேலை பாக்கறீங்க என்று நட்பு பாராட்ட துவங்கினோம்.

நேரம் ஆக ஆக ஒரு ஒரு விமான சேவை நிறுவனமும் மதிய உணவைத்தந்தது.Ethiad நிறுவனம் பயணிகளுக்கு உடனே தாங்கும் வசதியை ஏற்பாடு செய்து விமான நிலையத்திலிருந்து அவர்களைக்கொண்டு சென்றது.
நாங்கள் அவர் வருவாரா? அவர் வருவாரா? என்று ஏர் இந்தியா ஆசாமிகள் முக தரிசனத்துக்கென்று காத்திருந்தோம்.

புயலின் வேகம் அதிகரித்து , கேட் 18  முழுதுமாய் ஆட்டம் கண்டது. ஒரு சில போலீசார் வந்து எங்களை பழைய விமான நிலையத்தில் இருக்கும்படி சொன்னார்கள்.
ஒரு 4  மணி நேரங்கள் என்ன நடந்ததென்று யாருக்கும் புரியவில்லை. ஒரு சிலர் தரையில் அப்படியே தூங்கினார்கள். ஏர் இந்தியா சிப்பந்திகள் யாரையும் காணோம்.மாலை நேரம் சிங்கப்பூரிலிருந்து வர வேண்டிய விமானம் பெங்களூர் சென்றதாய் அறிவிக்கப்பட்டது. 

பின்னர் ஓரிரு ஏர் இந்தியா ஊழியர்கள் வந்து, உங்கள் பெட்டிகளைத்திரும்ப பெற முடியாது. மின்தூக்கி இருக்கும் பகுதி முழுவதும் நீர் தேங்கி உள்ளது. வடபழனியில் தாங்கும் இடம் ஏற்பாடு செய்கிறோம். ஆனால் இப்போதைக்கு ஒரு போக்குவரத்து வசதியும் செய்து தர முடியாது என்றார்.


கொஞ்ச நேரம் கழித்து தான் எங்களின் பல சான்றிதழ்கள் பெட்டிகளில் இருப்பது நினைவில் வந்தது. 4  மணி நேரம் கெஞ்சிக்கூத்தாடி அவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு வந்தோம். 

மற்றபடி எங்களோடு பேச எந்த அதிகாரியும் தயாராக இல்லை. குடியேற்றம் முடிந்து உள்ளே இருந்த எங்களுக்கும், அந்த பக்கம் இருந்த ஏர் இந்தியா அதிகாரிகளுக்கும் இடை வெளி 20  அடிகள் கூட இருக்காது. ஆனால் அகதிகள் போல தான் இருந்தது எங்கள் நிலை.

இரவு 10 மணி வாக்கில் மதியம் மீந்த உணவுகள் மீண்டும் தரப்பட்டன.

குழந்தைகளோடு இருந்த ஓரிரு தம்பதிகள் எங்களோடு சேர்ந்து கொண்டனர். ஓய்வு பெற்ற சிங்கை பள்ளி ஆசிரியர் ஒருவர் வந்தார்.முன்பின் அறிமுகம் இல்லையென்றாலும் எங்களுக்குள் ஒத்துழைத்து, ஒருவர் மற்ற பலரின் கைப்பைகளைப்பார்த்துக்கொண்டோம். 

இரவு மழை நின்றதால் ஏக குளிரில், புது விமான நிலையத்தில், உள்ள இருக்கைகளில் உட்கார்ந்தவாறே தூங்கினோம். என் குழந்தை தரையில தூங்கணுமா? என்று சத்தமாய் சண்டையிட்டு வெளியே போன ஒரு சில பிரயாணிகளுக்கு வெளியே போக வழி இல்லை. வார்தா நிறைய மரங்களை வழி நெடுங்க பிடுங்கி வீசியதில், விமான நிலையம் தான் ஒரே இடம். உள்ளே தூங்கலாம், அல்லது வெளியே.


நாங்கள் அடுத்த நாள் காலை வரை அங்கேயே இருக்க முடிவு செய்து அப்படியே நாற்காலிகளில் கால் மாற்றி உறங்கினோம். 
மறுநாள் காலை 6  மணி வரை சேவைகள் நிறுத்தப்பட்டது என அங்கங்கே இருந்த திரைகளைப்பார்த்து தெரிந்துகொண்டோம். திருப்பதிக்கு சென்று முடிகாணிக்கை கொடுத்த ஒருவர், பெருமாளே என்னை ஊருக்கு கொண்டு போய் சேர்த்திடு என்று வேண்டிக்கொண்டார். ஒரு சிங்கப்பூர்காரரின் மகள், தூதரகத்தைத்தொடர்பு கொண்டு எங்களுக்கு எதாவது உதவ முடியுமா என்று பார்த்தார்.

மறுநாள் சூரியன் பளிச்சென்று வெளியில் வர, அனைவரின் முகத்திலும் புன்னகை. கல்யாண மண்டபத்தைப்போல, எழுந்து கழிவறைக்கு சென்ற சிலர், உங்க கிட்ட பேஸ்ட் இருக்கா? சோப் இருக்கா? என்றனர்.

சில சிறிய விமானங்கள் தரை இறங்கத்துவங்கின. எங்களுக்கும் நம்பிக்கை வந்தது. அதன் பின்னர், ஏர் இந்தியா ஊழியர்கள் 9  மணி அளவில் வந்ததும், எல்லாரும் முறையிட ஆரம்பித்தோம். முதலில் காலை உணவு தந்தார்கள். அதன் பின்னர், நாங்கள் புதிய போர்டிங் பாஸ் பெற்று, மறுபடி குடியேற்றம் செய்ய வேண்டும் என்றனர். கிட்ட தட்ட 2  மணி நேரத்துக்கும் மேல் நிற்க வேண்டி இருந்தது. செவ்வாய்க்கிழமை பயணிக்கும் புதிய பயணிகளோடு, திங்களன்று தங்கிவிட்ட பயணிகளும் சேர்ந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம்.
ஒரு வழியாய் விமானம் புறப்பட மதியம் 3  மணி ஆனது.


விமானம் தரை இறங்கியதும், அப்பாடி, ஒரு வழியாய் வந்துட்டோம் என்று எங்களின் விமான (ரயில்) ஸ்நேகிதர்களிடம் சொல்லிக்கொண்டோம்.
இப்போது AI346  என்றே ஒரு குழுவை தொடங்கி, வாட்ஸாப்ப் மூலம் தொடர்பில் இருக்கிறோம்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 

Saturday, September 17, 2016

நுண் மோட்டார் திறன் மேம்பட !- என்ன செய்யலாம்? (For Improving Fine Motor Skills in Young Children)

ஒரு 20-30 ஆண்டுகளில் நாம் பல வகையான முன்னேற்றங்களைக்கண்டாலும், குழந்தை வளர்ப்பு என்பது வெளி நாட்டில் இருப்பவர்களுக்கோ, தனிக்குடித்தனத்தில் இருப்பவர்களுக்கோ மிக பெரிய பளுவாக மாறி இருக்கிறது. பெரும்பாலும் தாத்தா பாட்டிகளுக்கு அந்நாளில் என்ன செய்தார்கள் என்பது ஞாபகம் இல்லை.

நம் தலைமுறை எல்லாவற்றுக்கும் இணையத்தில் தீர்வைத்தேடி திரிகிறோம். எனக்கு தெரிந்து வார வாரம் கருவில் வளரும் தன் குழந்தையைப்பற்றி இணையத்தில் படித்து விரல் நுனியில் ஏற்றி பாடம் எடுத்தவர்கள் உண்டு. அதிகபடியான தகவல் நம்மை மேலும் குழப்புகிறது.

பெருநகரங்களில் இந்தியாவில் வசிக்கும் நிறைய பெற்றோருக்கு, நிபுணர்கள் பயிற்சிகள் பற்றி விளக்குவதே இல்லை. சிறு நகரங்களிலோ, கிராமங்களிலோ இன்னும் ஆக்குபேஷனல் தெரபி எனப்படும் இவ்வகை சிகிச்சைகளுக்கு வழி இல்லை.

கிராமமும் அல்லாத, நகரமும் அல்லாத சின்ன ஊரில் வளர்ந்தவள் நான். விளையாட்டாய் தான் சின்ன குழந்தைகள் பெண்கள் பூ கட்டும் போது வரிசையாய் எடுத்து கொடுத்து உதவுவார்கள். இது உண்மையில் நுண் மோட்டார் திறன் வளர உதவும்.

நுண் மோட்டார் திறன் என்றால் என்ன? சின்ன சின்ன தசைகளும், கண்களும், ஒருங்கிணைந்து செய்ய நமக்கு தேவைப்படும் திறன். எழுதுவது, படம் வரைவது, ஒரு பொருளை சிந்தாமல் கையாள்வது போன்றவை நுண் மோட்டார் திறனால் சாத்தியமாகின்றன.

எனக்கு தெரிந்த சில பயிற்சிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.நான் கற்றது பிறருக்கு உதவும் என்ற எண்ணத்தைத்தவிர இதை எழுத வேறு ஏதும் உந்து சக்தி இல்லை.


1.ஊசியில்லாத தையல் :)


இங்கே இருப்பது அட்டைப்பெட்டியில் வரையப்பட்ட நாய் படம். அதன் மூலைகளில் பெரிய ஓட்டைகள். உங்கள் பிள்ளையின் ஷூ லேஸ் போதும். ஒரு வழியாக நுழைத்து மறுபடி எடுத்து பயிற்சி செய்யலாம். Mellisa and Doug என்ற நிறுவனத்தின் தயாரிப்பு இது. வீட்டிலே செய்வதும் சாத்தியமே.

2.கோலி குண்டுகளும் அப்பளக்கரண்டியும்:

பணம் செலவில்லாத பயிற்சி இது. கொஞ்சம் கோலிகுண்டுகளை ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.ஒரு கிண்ணத்திலிருந்து மற்றொரு கிண்ணத்தில் அப்பளம் எடுக்கும் குரடினால் போடச்சொல்லுங்கள். கீழே கோலி விழும் தான். சிரித்து சிரித்து விளையாட்டாய் ஒரு பயிற்சி !!!!

3.பல்லாங்குழி  :)

நம்ம பழமையான விளையாட்டு , குழந்தைகளுக்கு இது நல்ல பயிற்சி.


Always Old is Gold.பல்லாங்குழி இணையம் வழியாகவும் வாங்க முடியும்.

4.சுவர் இருந்தா சித்திரம் வரையலாம் :)

பென்சில் கிரிப் சரியாக இல்லை என்று தெரிந்தால், நீங்கள் வீட்டின் ஒரு சுவரை கருப்பு பெயிண்ட் அடித்துக்கொள்ளலாம். குழந்தைகளின் கற்பனைக்கு அவர்கள் எழுதலாம், வரையலாம். சாக் பீஸ் ரொம்ப நீளமாக இருக்க கூடாது.


இப்போது கடையில் போர்டு போன்ற உபகரணங்கள் கிடைக்கின்றன.

5.பேப்பர் தட்டுகளும், துணி காய வைக்கும் கிளிப்களும்: 

துணி காய போடும் கிளிப்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பேப்பர் தட்டிலும், போட சொல்லுங்கள்.
6.பெரிய அளவு புதிர்கள் (Jumbo Puzzles).



இவை மரத்தினால் ஆனவை. குழந்தைகள் எளிதில் கையாளும் வகையில் அவர்களை சிந்திக்க தூண்டுகிறது.

8. HAMA Puzzles:மணி மணியாய் கைவண்ணம்!
இதுவும் இன்னொரு வகை பயிற்சி. கொடுக்கப்பட்ட படத்தில் உள்ள வண்ணத்தில் மணிகளை வைத்துக்கொண்டே வர வேண்டும். சின்னச்சிறு கைகளுக்கு சவாலான முயற்சி .




8, வாங்க பேப்பர் வெட்டலாம் :
இது சிறு குழந்தைகளுக்கான கத்தரிக்கோல். பிடிக்க அவர்களுக்கு வாட்டம். பல வகையாய் அவர்களை வெட்ட சொல்லி பழக்கலாம்.



9. பெரிய அளவிலான பென்சில்கள்:
முக்கோண வகை பென்சில்கள் கிடைக்கின்றன. இவற்றில் பெரிய அளவு பென்சில்கள் குழந்தைகள் எழுத ஆரம்பிக்கும் தருவாயில் அவர்களுக்கு அதிகமாய் உதவும்.

10.எல்லாவற்றையும் விட முக்கியம் குழந்தைகள் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை.
அவர்களை வீட்டில் உள்ள சின்ன சின்ன வேலைகளில் சேர்த்து கொள்ளுங்கள். துணிகளை மடிப்பது, காபி கோப்பையை தேய்க்க போடுவது என்று அவர்களுக்கு பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள். குழந்தைகள் உங்களைப்பார்த்து நிறைய கற்றுக்கொள்வார்கள். நிறைய பாராட்டுங்கள்!!!.

Wednesday, May 18, 2016

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளும், அதற்கு பின்னரும்!

இது ஒரு 19 வருடத்திற்கு முன்னால் நடந்த கதை!!!. வருடம் 1997 .
ஆனால் அன்றைய நடப்பில் இருந்து  இன்று வரை  நிறைய விஷயங்கள்  மாறவில்லை என்றே தோன்றுகிறது.

+2 தேர்வு முடிவுகள் வந்தன. 

தமிழ் பாடத்தில் 192 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றேன். மொத்த மதிப்பெண் 1136 பெற்று திருவாரூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்றேன்.
அப்போது 1997, தி.மு.க ஆட்சிக்கு வந்த புதிது. தமிழை இரண்டாம் பாடமாக படிப்பவர்களுக்கு என்று பரிசுகளை அறிவித்தார்கள். இதில் எல்லா மாவட்டங்களிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்கள். 
தமிழ்நாடு முழுதும் கிட்டத்தட்ட 90 பேர்,இந்த திட்டத்தின் பயனர்கள்.


எனக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. இந்த உதவித்தொகையை நம்பி என் அப்பா, என்னை பிலானியில் சேர்த்தார்.

நான் எந்த கட்சியை சார்ந்தவளும் அல்ல.
இந்த பதிவை ஒரு  பயனாளியாக தமிழக அரசுக்கு என் நன்றியை சொல்லவும் , இந்த உதவித்தொகை சார்ந்த தடைகளை உடைக்க உதவியவர்களை எண்ணி என் நன்றியை சொல்லவும் பயன்படுத்த எண்ணுகிறேன்

பழைய சட்டபேரவை வளாகத்தில் தான் நாங்கள் ,அன்றைய முதல்வர் டாக்டர் திரு.கலைஞரை சந்தித்தோம். 
அப்போது, 2 பேர் தமிழில் 192 வாங்கி இருக்கீங்க. ஆனா மொத்த மதிப்பெண் அடிபடையில நீங்க 3 வது இடம். தமிழக அரசு, உங்களை இரண்டாம் இடமா நினைக்கிறோம்னு சொல்லி 2000 ரூபாய்க்கான காசோலையை அடித்து 3000 என எழுதிக் கையெழுத்திட்டார்.



என்றைக்கும் மறக்க முடியாத தருணம்.என் அப்பா முகத்தில் தெரியும் சந்தோஷம் என்றும் மறக்க முடியாதது.
 கூடியிருந்த பத்திரிகையாளர்கள் கை தட்ட, எல்லாரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

பத்திரிகைசெய்தியில்,திரு.கலைஞர் அவர்களுக்கும்,திரு.அன்பழகன் அவர்களுக்கும் இடையில் நிற்கிறேன் நான்.(பாதி முகம் தெரியவில்லை :)



வார வாரம் எதாவது ஒரு பரிசு வந்து கொண்டே இருந்தது. தமிழ் பாடத்தில் நல்ல மதிப்பெண் வாங்கியதற்காக.

அப்போது எல்லா நிதி நிறுவனங்களும் 38% வட்டி என்று அறிவித்து கொண்டிருந்தன. கலைமகள் சபா, அனுபவ் சிட்ஸ் முதலியவற்றிலிருந்தும், கோனார் தமிழ் உரை நிறுவனத்திலிருந்தும்  பரிசுகள் வந்தன. தினமலர் உள்ளிட்ட நாள் இதழ்களும் பரிசுத் தொகை வழங்கின.
 ரொக்கமாக சுமார் 20000 ரூபாய்  வந்து விட்டது.

நான் படித்த மன்னார்குடி,தூய வளனார் பள்ளியில் தமிழைக்கற்பிக்க, ஒரு நல்ல உக்தியை கையாண்டார்கள்.
6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழுக்கு மட்டும் இரண்டு ஆசிரியர்கள்.
ஒரு ஆசிரியர் வயதில் மூத்தவர். அவர் செய்யுள் பகுதியை கையாள்வார்.
நிறைய பாடல்களுக்கு நாங்களே மெட்டமைத்து வந்து பாடுவோம்.
பிழையின்றி எழுதவும் இந்த ஆசிரியை வழிகாட்டினார். நான் படிக்கும் போது திருமதி.ராதாமணி, திருமதி.கலைமணி ஆகியோர் இருந்தனர்.

இன்னொரு தமிழ் ஆசிரியை, உரைநடை மற்றும் கட்டுரை, துணைப்பாடம் ஆகியவற்றை கையாள்வார்.
இந்த முறை தமிழ் வகுப்புகளை ஆர்வமாக எதிர்நோக்க வழி செய்தது.

என் அப்பாவும் ஒரு பள்ளி ஆசிரியர். நான் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய வருடங்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு, வரவில்லை என எழுதிகொடுத்துவிடார். நேர்மைக்கு ரொம்பவே பேர் வாங்கியவர்.

சில வருடங்களில் இவரை கண்காணிக்கும் அதிகாரியாக கண்டால் நிறைய பேருக்கு நடுங்கி இருக்கிறது. ஒரு சிறு மூங்கில் கூடை நிறைய பிட் பேப்பர் பிடித்தார் ஒரு வருடம்.

நாங்கள் படித்த வருடம்  புத்தகம் மாறி விட்டது. பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தை பன்னிரண்டாம் வகுப்பில் செப்டெம்பர் மாதம் தான் ஆரம்பித்தார்கள். ஒருத்தி வாங்கிய புத்தகத்தை எல்லாரும் பிரதி  எடுத்துக்கொண்டோம்.

தீராத மின்வெட்டு அப்போதெல்லாம் மன்னையில் எப்போதுமே. மெழுகுவர்த்திக்கு தான் பணம் ஒதுக்க வேண்டி இருக்கும்.

பேப்பர் திருத்துவது கஷ்டமான வேலை. நிறைய இடைவெளி விட்டு எழுது; பாலும் தெளிதேனும் பாட்டு முதல்ல எழுது- அப்டின்னு நிறைய தேர்வு நுணுக்கங்களை சொன்னார் என் அப்பா.

அரசாணை வந்ததும்,எந்த செலவுகளை அரசு ஏற்கும்; எதை ஏற்காது என்பதில் ஒரு குழப்பம் இருந்தது. உணவு செலவுக்கு , புத்தக செலவுக்கு  உண்டா. என் போல தமிழ்நாட்டில் படிக்காமல் வெளியே படிப்பவர்களுக்கு ரயில் கட்டணம் உண்டா என பல கேள்விகள்.

நாங்கள் செய்யும் எல்லா செலவுக்கும் கணக்கு காண்பித்து, அவற்றுக்கு 4 பிரதி எடுத்து, மாவட்ட பள்ளி கல்வி அலுவலகத்தில் காண்பிக்க வேண்டும்.
முன்னே செலவு செய்து பின்னர் பணம் அரசிடமிருந்து கிடைக்கும்.

முதல் வருடம் பெரிதாய் ஒரு பிரச்னையும் இல்லை. பார்க்கின்ற  உறவினர்கள், பாரு. அக்கா மாதிரி படிக்கணும். அப்பாக்கு கஷ்டம் இல்லாம படிக்கறானு சொல்லும்போது உள்ளுக்குள்ள பெருமையா தான் இருந்தது.

நான் படித்தது பொறியியல் அல்ல. 4 வருடங்களில் கிடைக்கும் MBA க்கு சமமான MMS  என்ற ஒரு படிப்பு. இந்தியாவில் இங்கே மட்டும் தான் இருக்கிறது. ஆராய்ச்சி எல்லாம் பண்ணி சேரல.
யாருக்கோ வாங்கிய விண்ணப்பபடிவம் என் சித்தப்பா கொடுத்து விண்ணப்பித்தேன். 

 பிலானியில் சேரும் போது உங்களுக்கு என்ன படிப்பு வேண்டும் என்று கேட்பார்கள். நான் கேட்ட பொறியியல் படிப்பு கிடைக்கவில்லை. பிலானியில் முழுதும், மதிப்பெண் அடிப்படையிலான அனுமதி. நான் கேட்ட 4வது சாய்ஸ் MMS .

ரொம்ப நாள் தாமதமாய் counselling தொடங்கவும் பிலானியில் சேர்ந்து விட்டேன்.
என் அம்மா அப்பா வழியில் சித்தப்பா, சித்தி, மாமா என பலரும் எனக்கு உதவினார்கள்.உடைகளில்  தொடங்கி, துணிகள் உலர்த்தும் கயிறு வரை பட்டியலிட்டு வாங்கி கொடுத்தார்கள்.
ஹிந்தி தெரியாமல், ஆங்கிலமும் அதிகம் தெரியாமல் நன்றாக விழிகள் பிதுங்கின.

ஒரு வழியாக பாதியில் விடாமல் நல்லபடியாய், மிக தீவிரமான குளிரையும், மற்ற பல சிக்கல்களையும் தாண்டி படித்தேன்.நாலாம் வருட கடைசியில் cognizant நிறுவனம் என்னை வேலைக்கு சேர்த்துக்கொண்டது.

என் அறை தோழியில் ஒருத்தி என்னை விட மொத்த மதிப்பெண் அதிகம் வாங்கியவள். அதென்ன தமிழ் படிச்சதாலே உனக்கு மட்டும் உதவித்தொகைனு நிறைய தடவை கேட்டு இருக்கா.இது வேற மாதிரி சமூக அநீதின்னு சொன்னவங்களும் இருந்தாங்க 

இரண்டாவது வருடம் ஆரம்பத்தில் சொன்னார்கள்- அரசால் முழுதும் செலவை ஏற்க முடியாது. ஒரு அரசாணை வர போகிறது. வருடத்திற்கு ஒரு சிறு தொகை கிடைக்கும் என்று.

இரண்டாம் ஆண்டில் எந்த வங்கியும் உங்களுக்கு எளிதில் கல்விக்கடன் தராது. அதிலும் என்னைப்போல,பரவலாக தெரியாத படிப்பை படிப்பவர்களின் கதை இன்னும் மோசம்.
அப்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியராக திரு.உமா சங்கர் இருந்தார்.
நான் ஒரு இன்லண்ட் லெட்டரில் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

படிப்புக்கான உதவி பாதியில் நின்றால் எங்கள் எதிர்காலம் என்ன?. உங்களுக்கு என் நிலை புரியும் என்பதாக.
அந்த கடிதம் சென்னையில் நடந்த கலெக்டர் மாநாட்டில் படிக்கப்பட்டது.
எங்கள் நல்ல நேரம், நாங்கள் படித்து முடிக்கும்வரை உதவி தொகை கிடைக்கும் என்று அறிவித்தார்கள். அடுத்த வருடத்திலிருந்து இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இது எனக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ் ; இதில் வாழ்த்துக்களுடன்  என்று தான் இருக்கிறது  டாக்டர்.கலைஞரின் கையொப்பம் . 

ஆனால் பெருவாரியானவர்கள்  வாழ்த்துகள் என்றே எழுதுகிறார்கள். 
எது சரி என்பதில் தனியாக பட்டிமன்றம் நடக்கிறது அங்கங்கே :).

என் அனுபவம் சொல்லும் பாடம் என்ன?
1. எந்த அரசாணையாக இருந்தாலும், அதைத்தொடங்கி அதனால் பயன் பெறுவோருக்கு இடையில் பயன் நின்று போகாமல் இருக்கும் வகையில் செயல் திட்டம் இருக்க வேண்டும்.
2. எந்த செலவு வகைகள் உண்டு இல்லை என்று விரிவாக சொல்லிவிட்டால், பல கேள்விகளை தவிர்க்கலாம்.
3. நிறைய பெற்றோர்கள் செலவழிக்காத பணத்திற்கு பொய் ரசீது தந்தனர்.ஆதியோடு அந்தம் ஊழல் இல்லாமல் இருந்தால் தான் தனி மனித அளவிலும் பொய்யை தவிர்க்க இயலும்.
சிங்கப்பூராக இருந்தால் பொய் ரசீது சமர்ப்பிக்க யாரும் அஞ்சுவார்கள்

4.அடித்தளத்தில் இருந்து படித்து அதிகாரத்தில் இருக்கும் அலுவலர்கள் பலருக்கு, தம்போன்ற மாணவர்களின் கஷ்டம் புரிகிறது. இப்போதெல்லாம் முன்னை விட இன்னும் நிறைய பேர் உதவுகிறார்கள். ஊடகங்களும் தன் பங்கிற்கு உதவுகின்றன.
ஒருவர் மற்றவர் மீது காடும் அக்கறை என்பது மேலும் அதிகரித்தாலே, நாம் முன்னேறிவிடலாம்.

5.ஒவ்வொரு   முறையும்  கருவூலத்திலிருந்து என் அப்பாவுக்கு  DD வரும்போதும் கண்டிப்பாக  கையூட்டு  கொடுத்தே  ஆக வேண்டிய  நிலை இருந்தது.  என் அப்பா சொல்லி கொண்டே இருப்பார் . இது scholarship என்று நினைக்காதே . பல முறை நடையான  நடை  நடக்கிறேன்  என்று.

எல்லா அரசாங்க அலுவலகத்திலும் பணம் வாங்காமல் ஒன்றுமே நடக்காதா?. அங்கொன்றும் இங்கொன்றுமாய் நாம் லஞ்சம் வாங்காதவர்களை ப்பற்றி  கேள்விப்படுகிறோம். 20 ஆண்டுகளில் இந்த நிலை மாற வில்லை.

 முதல் முறை பணம் கடனாக வாங்கி கல்லூரிக்கு கட்டி இருந்தார். 4 மாதங்கள் ஆகியும் பணம் வரவில்லை. அப்போது அப்பாவுக்கு தெரிந்த திரு.அம்பிகாபதி என்ற மில் உரிமையாளர் அவருக்கு தெரிந்த திரு. T.R.பாலு அவர்களின் உதவியாளருக்கு சொல்லி அவரும், திரு.கலைஞர் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.பணம் எங்களுக்கு வந்தது.

நான் ஒவ்வொரு முறை பிலானிக்கு  கிளம்பும் போது கண்டிப்பாக ஒரு மொத்த தொகையும், ஒரு 200 ரூபாய்க்கு நாணயமுமாய் தருவார் அப்பாவின் நண்பர் திரு.வைத்யநாதன். இவர் ஸ்டேட் பேங்க் ஊழியர்.
அப்பாவின் மற்றொரு நண்பர் திரு.விவேகானந்தனும் அப்பாவிற்கு முன்பணம் கடனாக கொடுத்து உதவினார்.

ஆக, ஊர் கூடி தேர் இழுத்து போல, அரசு செலவில் என் படிப்பிற்கு தடை வந்த போது, பலரும் உதவினார்கள்.

ஒருமைக்கண் கற்ற கல்வி  ஒருவர்க்கு எழுமையும் ஏமாப் புடைத்து என்கிறது திருக்குறள்.
 என் கல்வி என்னைபோல பலரையும் கைத்தூக்கி விட வேண்டும். 

இன்று அந்த எண்ணத்தில் நானும் வருடத்தில்  ஒரு 5-10 பிள்ளைகளுக்கான பள்ளி அல்லது கல்லூரி கட்டணத்தை செலுத்துகிறேன்.
இந்தியாவில் இல்லாவிட்டாலும் என்னால் முடிந்த நன்றி இதுவே.

 இலவச கணினி முதலியவற்றைத்தருவதை விட, வென்றவர்களுக்கு படிப்புக்கான உதவித்தொகை என்ற அணுகுமுறை, மாணவர்களை ஊக்கப்படுத்தும் என்பது என் தனிப்பட்ட கருத்து .

எனக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!!!.