Sunday, March 16, 2014

கண்களும், நெஞ்சமும் தேடும் அன்றைய மன்னை -1 (Mannargudi, Tiruvarur District)

கல்லூரி, வேலை, திருமணம், குழந்தை என தன் சொந்த ஊரை விட்டு வெகு தூரம், வந்துவிட்ட என் போன்றவர்களுக்கு, என்றோ ஒரு நாள், சொந்த வீட்டையும், ராஜகோபாலனையும் பார்க்க என மன்னைக்கு சென்றால், மனம் கனக்கிறது. ஒரு 10-15 ஆண்டுகளில், பெருத்த மாற்றம்!.

எல்லா வீடுகளும், முகமாற்றம் கண்டுள்ளன- ஓட்டு வீடுகளிலிருந்து, கட்டிடங்களாக!;அக்கம் பக்கத்திலிருந்த மாமா மாமிகள், எங்களைப் போல, சென்னை நோக்கி சென்றாகிவிட்டது. ஜெல்லி மாமா வீடு, அப்பாலு மாமாவீடு,தொப்பை அய்யங்கார் வீடு முதலிய எங்கள் மேல இரண்டாம் தெருவின்,அடையாங்களைக்காணோம்.

ஒரு நிமிடம்,காலத்தைப்பின்னோக்கி நகர்த்தி,  பழைய தெரு கண்ணில் இருக்காதா என்ற ஏக்கம் வந்தது. சட்டென தலையில், கொட்டிக்கொண்டேன்; என்னைப்போல என்னூரும், மாறி விட்டது.

மாறாமல், என் மனதில், உள்ள நினைவுகளை எழுதியதன், பலன், இந்த கட்டுரை!.

தஞ்சை பெரிய கோயிலைப்பார்த்து விட்டு பள்ளி நாட்களில், எழுதும் போது, நினைத்திருக்க வாய்ப்பில்லை- இது போல ஒரு முயற்சி தேவைப்படும் என்று!

பரவலாக புங்கை மரங்களும், வேப்ப மரங்களும், நிறைந்த,பரந்த தெரு. ஜுன் மாதத்தில், வேப்பம் பழங்களைக் கையால், பிதுக்கி, மூக்கு சளிப்பழம், என எல்லாரையும் ஓட வைப்போம்.

என் முதல் வயது முதல், சமீப காலம், வரை, மாலையானால், கடலை வண்டி பாயை எதிர்பார்க்கும் நாக்கு. சுடச்சுட வேர்க்கடலையை மணலில் வறுத்து, சலித்துப்பொட்டலம், போட்டுத்தருவார். பெருவாரியான குழந்தைகளின், அன்றைய புரத சத்து, இவர்  கைங்கர்யம்.

வருட விடுமுறையில், எல்லா அம்மாக்களும், வீட்டுக்குள்ளே தூங்க அழைக்கும், உச்சி வெயிலில், முக்கோண க்ரேப்  மற்றும்,பால் குச்சி  Ice  எங்களை வா என்றழைக்கும்.கொஞ்ச நேரத்திற்கு, சிவந்த நாக்குகளோடு, சந்தோஷமாய் வலம் வருவோம். இப்ப அதெல்லாம் இருக்கானு தெரியலை!..

எங்கள் வீட்டுக்கொல்லையில காய்க்கும், முழு நெல்லிக்காய்கள், தெருவில், உள்ள அத்தனை வீடுகளுக்கும், கொடுத்த்திருக்கிறோம்.

ஒரு சில தொழில்கள், இன்றும்,நினைக்கையில் வியப்பூட்டுகின்றன. "கிணத்தில விழுந்த சொம்பெடுக்கலையோ சொம்பு" என சட்டை அணியாமல், ஒருவர், சைக்கிளில், கத்திக்கொண்டே வருவார்.

இரும்பினால், ஆன பாதாள கரண்டியால், முதலில், முயற்சி செய்வார்; முதன்முதலில் நான் பார்த்த சர்க்கஸ் (Circus) என இவரைத்தான் சொல்ல வேண்டும்; கிணற்றில், தடாலடியாய் குதித்து, விழுந்த பொருளை எடுத்துக்கொண்டு, சொட்ட சொட்ட மேலே வருவார்.

(மீண்டும்)