Sunday, March 29, 2015

காலத்தை வென்றவர்- திரு. லீ குவான் யூ!

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறையென்று வைக்கப் படும்
."-திருக்குறள்

இங்கு இன்று, சிங்கை மக்களின் இறைவனாய் உயர்ந்த  திரு.லீ குவான் யூ அவர்களின், இறுதி சடங்குகள் நடைபெற்றன.

இது சிங்கையில்  அனைவருக்கும் மனதிற்கு மிகக்கனமான ஒரு வாரம். கொட்டும் மழையிலும், கொஞ்சமும் நகராமல், அவர் பெயரை முழங்கியவாறு, வீதியெங்கும் நின்ற மக்கள் கூட்டத்தில்,மக்களுக்காக  சேவையாற்றிய அவரின் உயரிய வாழ்வும், மக்கள் தம் நல்வாழ்க்கைக்கு வித்திட்ட திரு.லீ அவர்களுக்குக்காட்டும் நெஞ்சார்ந்த நன்றியும் வெளிப்பட்டன.




சிங்கப்பூருக்கு இந்தியாவிலிருந்து  வந்த என் போன்ற முதல் தலைமுறைக்கு இங்கு நடப்பது அதிசயம்.இந்த தீவுத்தேசம் தன் 50வது ஆண்டில் இருக்கிறது.

நாங்கள் இந்தியாவிலிருந்து இங்கு வந்து 8 ஆண்டுகள் ஆகின்றன. முதல் முறை சிங்கை மண்ணில் காலடி வைத்ததுமே அதன் விண்ணளவு வளர்ச்சியை கட்டிடங்கள் சொல்லாமல் சொன்னாலும், மறுபக்கம் இது பசுமை நகரம் என்பது காணும் பச்சை நிற மரங்கள் சொல்லும்.இந்த நகரம் பூங்கா நகரமாக திகழ வித்திட்டவர் திரு.லீ.


சிங்கப்பூரில் அன்றைய அடிப்படை தேவைகளான நல்ல வீடுகள், சுத்தமான தண்ணீர், உயர் தர கல்வி என எல்லாவற்றிலும், இவரும், இவருடைய சகாக்களும் செய்த பணிகள் என்றும், சரித்திரத்தில் நீங்கா இடம் பெறுவன.

ஒற்றுமையான மக்கள்; ஒருங்கிணைந்த தேசம் என்று முழங்கியவர் திரு.லீ. 

சிங்கையில் அவரவர் தாய் மொழியையும் பயில வழி வகுத்தவர் திரு.லீ. நாங்கள் சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்தாலும் கூட இன்றைய நகர பள்ளிகள் தமிழை சிறு பிள்ளைகள் படிக்க வழி வகுக்கின்றனவா என்பது நம் மனசாட்சிக்குத்தெரியும்.!!! 

இங்குள்ள ஒரு பள்ளியில் படிக்கும் என் 4 வயது பிள்ளை, ஆத்திச்சூடியை அழகாய் சொல்ல சொல்ல, என் மனம், திரு.லீ அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறது.

பெயரளவில் தமிழை வளர்க்கிறோம் என்று பேசுவதற்கும், நடைமுறையில்,உண்மையில் தமிழை இளையர்களுக்குக்கொண்டு சேர்க்கும் சிங்கப்பூருக்கும், ரொம்ப தூரம்!!!

இன்றைய இரங்கல் கூட்டத்தில் பேசிய ஒருவர் மலாய் மொழியில் ஒரு கவிதை வாசித்தார். ஒருவர் உங்களுக்கு செய்த நற்செயலை உங்களால் எப்படியும் ஈடு செய்ய முடியாது என்றார்.

உண்மை தான்!!!. ஒரு தாயாக, என் பிள்ளை 33 வாரங்களில், 1.5 கிலோ எடையில் பிறந்த போது எங்களைக்காத்து, நாங்கள் இன்று நல்லபடியாய் இருக்க காரணம்,சிங்கப்பூரின் மருத்துவ தொழில் நுட்பமும், எங்களை சுற்றி இருந்த நல்ல உள்ளங்களும் தான்.
 திரு.லீ போன்ற பெரியவர்கள், மருத்துவ துறை எப்படி இயங்க வேண்டும், என்று விதித்த செயல் திட்டத்தின் பலன் தான், இங்கு  பிறக்கும் எடைக்குறைந்த குழந்தைகளைக்கூட  எப்படியாவது பிழைக்க வைக்கும் வித்தையைச்செய்கிறது.

என் பிள்ளையைக்கண்ணென காத்த செவிலியரில், அனைத்து இனத்தவரும் உண்டு.
ஒரு பெண்ணாக எந்த நேரத்திலும் அச்சமில்லாமல், வெளியே சென்று வர முடியும் என்ற பாதுகாப்பிற்குக்காரணம், திரு.லீ அவர்கள் வகுத்த கடுமையான சட்டங்கள்.

எங்கள் தஞ்சை மாவட்ட கிராமங்கள் பலவற்றிலிருந்தும், சிங்கை மண்ணினால் உயர்ந்த குடும்பங்கள் பல.

ஊழலற்ற அரசாங்கம், தகுதிக்கு முன் உரிமை என்று திரு.லீ நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய ராம ராஜ்யம், உலக நாடுகள் பலவற்றுக்கு ஒரு வாழ்க்கை பாடம்.

வழக்கமாக எங்களுக்குத்தெரிந்து நம்மூரில் அரசியல் கட்சி தலைவர், கைதானாலோ, அல்லது இறந்தாலோ, பாதிப்பு சாதாரண மக்களுக்குத்தான்; பேருந்து ரயில் சேவைகள் பாதிக்கப்படும். ஆனால் இங்கு  அவருக்கு மரியாதை செலுத்த வந்த கூட்டத்தினருக்காக 24 மணி நேரமும் ரயில் சேவையும், பேருந்து வசதியும் இருந்தன.

எங்கள் அடுக்ககத்திற்கு அடிக்கடி மக்களைச்சந்திக்க வருவார் சட்டத்துறை அமைச்சர் திரு.சண்முகம்.அரசியலில், கடை நிலை ஊழியர் கூட பத்து பேரோடு அலையும் சூழலுக்கு பழகிய நமக்கு இவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.



திரு.லீ, அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இறுதி மரியாதை செய்த கூட்டத்தில் நாங்களும் இருந்தோம் என்பதே எங்களுக்கு ஒரு நிறைவு தந்தன. அன்னாருக்கு என்றும் எங்கள் பிரார்த்தனைகள்!