Sunday, April 10, 2016

நாவல் பயிலரங்கு அனுபவம் (10-4-2016)

10-4-2016 : நாவல் பயிலரங்கு!.
காலைல அங் மோ கியோ நூலகத்துக்கு நான் வரும்போது திரு.இளங்குமரன் நிகழ்ச்சி இங்க தானானு அவர் நண்பர்களுக்கு அலைபேசியில் கேட்டுகொண்டிருந்தார்.
ஊருக்கு முன்னாடி சொன்ன நேரத்துக்கு குழந்தையை விட்டுட்டு வந்தாச்சு; ஆனா பயிலரங்கு ஆரம்பிக்க மணி 10 ஆயிடுச்சு.


ஆரம்பிச்ச பிறகு எல்லோர் பேச்சுமே நன்றாக இருந்தது. தோழிகள் கூட்டத்தோடு, சிரித்த வண்ணம், முழு நாளுமே நிறைவாக இருந்தது.

நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டோம். எங்க மேஜைல எங்களுக்குள்ளேயே நிறைய விவாதிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் செய்ய முடிந்தது.

திரு.புண்ணியவான் அவர்கள், தி.ஜானகிராமனின் மோகமுள் பற்றி பேசும்போது நாங்கள் அதில் வரும் வேறு சிலரை பற்றியும் பேசினோம்.

ஒரு விஷயம் மிகத்தெளிவாய் புரிந்தது.தமிழர் வாழும் எல்லா நாடுகளிலும் சிங்கப்பூர் போல இலக்கியத்துறையில் ஈடுபட சூழ்நிலை நிலவுவதில்லை.
சிகப்பு அட்டை பற்றி திரு.கோ.புண்ணியவான் அவர்கள் பேசும்போது அந்த சூழல் கண் முன்னே விரிந்தது. அவரது நூலான செலாஞ்சார் அம்பாட் படிக்க வேண்டும்.
திரு.வித்யாசாகர் பேசும்போது அடிக்கொருதரம் நாங்கள் சிரித்துக்கொண்டே இருந்தோம். தென்றல் பத்திரிகையும் கொடுத்தார்கள்.


திருமதி ஜெயந்தி ஷங்கரின் திரைக்கடலோடி சிறுகதை தொகுப்பை ஒரு சிலர் வாசித்திருந்தோம். ஒவ்வொரு சிறுகதையும் ஒரு விதம்- ஒரு கதையில் ஒரு இந்திய ஆடவர் சிங்கப்பூர் பெண்ணைத்திருமணம் செய்வார்; ஆனால் திருமணத்தின் பின்னர், எல்லா அதிகாரமும்  அந்த பெண்ணின் கையிலும் அவளின் பெற்றோர் கையிலுமே இருக்கும்.

இன்னொரு கதையில் ஒரு பெண்ணை வீட்டு வேலைக்கென இந்தியாவிலிருந்து வரவழைத்தால், அந்த பெண் நான் வீட்டு வேலைக்கு வரவில்லை ;எனக்கு அலுவலக வேலை தான் வேண்டும் என்று அழுது தீர்ப்பாள். நீ இந்த விசாவில் வேறு வேலை செய்ய முடியாது என்று சொன்னால் ஏற்று கொள்ளும் மன நிலையில் இருக்க மாட்டாள்.

அவளை ஊருக்கு திருப்பி அனுப்புவதற்குள் படும் பாடு; அவள் தன் சொந்த ஊர் வரை சென்று சேர்ந்தாள் என அறிந்த பிறகு வரும் நிம்மதி என பல உணர்ச்சிகளைத்தொடும் மற்றொரு கதை.

நான் கடைசி நிமிஷத்தில் திருமதி.ஜெயந்தி ஷங்கர் அவர்கள் வருகிறார்கள் என்ற ஆவலில் தான் சேர்ந்துகொண்டேன்.

நூலகத்தில் அவரது சிறுகதைத்தொகுப்பை முதலில் வாசித்தேன்.முதல் வாசிப்பிற்கு பிறகு, அடுத்த முறையிலிருந்து நானாக  அவர் புத்தகங்களைத்தேடி வாசிக்க ஆரம்பித்தேன்.

அவரின் கதைகளில் அவரால் மற்ற எழுத்தாளர்களை விட சீன கலாச்சாரத்தை பற்றி அறிந்து எழுத முடிகிறது.அதற்கு காரணம்,தான் வளர்ந்த சூழலும் , திறந்த மனதோடு இருப்பதும் தான் என்றார்.

சிங்கப்பூரின் வாழ்க்கை முறையை,இங்கு உள்ள சிக்கல்களை , கதை வடிவாக தமிழர் வாழும் பல நாடுகளுக்கு இவரின் நூல்கள் அழகாய் சொல்கின்றன.

ஒரு திட்டம் போட்டு தான் நாவல் எழுதணுமா? 
நாவல் முழுக்கவே ஒரே ஆள் கதை சொல்வது போன்று அமைந்தால் அந்த நாவல் படிக்க சுவாரஸ்யமாய் இருக்குமா?இப்படி சில கேள்விகள்!

எனக்கு சமையல் செய்யும் போது ஒரு வரி தோணும்; எழுதறதுக்குள்ள எங்கியாவது மறந்திடுமோனு  பதட்டம் ஆயிடும் - இது தான்  வினுதா,பானு சுரேஷ், தமிழ் செல்வினு எங்க மேஜைல இருந்த எல்லாரோட எண்ணமும்.

திருமதி.ஜெயந்தி ஷங்கர் சொன்னாங்க.-" உங்களுக்கு உள்ள இருக்கற கதை உங்களை விட்டு போகாது . பதட்டம் வேண்டாம். நாள்பட எழுதும் போதும் இந்த பதட்டம் போயிடும். ஒரு பேப்பர் பென்சில் வெச்சு, தூக்கத்தில தோணுகிற கருத்தை எழுதிடுங்கனு' .
 அட. இது கூட நல்லா இருக்கேன்னு தோணிச்சு.

திருமதி.பிரேமா மகாலிங்கம் உங்களுக்கு பயனுள்ளதா இருக்கானு கேட்டுகிட்டே இருந்தாங்க. நான் வாசகர் வட்டத்துக்கு புது வரவு.அவங்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரா, எல்லார் மேலயும்
நல்ல அக்கறை.

சொந்த அனுபவமா இருக்கறது நல்லதுன்னு சொன்னதும், ஒருத்தர் கேட்டார், கொலை பற்றிய கதைனா, கொலை பண்ணிட்டா எழுத முடியும்னு?

பாதையில் பதிந்த  அடிகள் - திருமதி.ராஜம் கிருஷ்ணன் அவர்களின் மணலூர் மணியம்மாள் பற்றிய நூல். கொஞ்சம் கொஞ்சமாக மனியம்மாளை பற்றி அவர் வாழ்ந்த ஊரில் சென்று தகவல் சேர்த்து தான் எழுதினார்

திருமதி சிவசங்கரியின் பாலங்கள் நாவல் அவர் இந்த நாவலுக்காக எத்தனை முயற்சி எடுத்திருப்பார் என்று வியக்க வைத்தது. மூன்று தலைமுறை வாழ்க்கையையும் எழுத நிறைய பாட்டிகளோடு பேசினார் சிவசங்கரி.
சொந்த அனுபவம் இல்லேன்னா ரொம்ப முயற்சி செய்து அதுக்காக உழைக்கணும்.

நாங்களாக எங்களுக்கு தெரிந்த கதைகளை பற்றியும் பேசினோம்.
எதையும் திறந்த மனசோட அணுகினா ஒரு எழுத்தாளனுக்கு மற்றவர்களுக்கு தெரியாத கோணங்கள் கிடைக்கும் என்பது தான் திரு.வித்யாசாகர், திருமதி.ஜெயந்தி ஷங்கர் இருவரும் சொன்ன கருத்து.

சட்ட சிக்கல்களை பற்றிய கேள்வி எழும்போது, Loss and Laws புத்தகம் பற்றியும் கேட்க நேரிடும் என்று எதிர்பார்த்தேன்.

திருமதி.ஜெயந்தி ஷங்கரின் திரிந்தலையும் திணைகள் நாவலில் வரும் பாலசுப்ரமணியர் கோவில் என் வீட்டில் இருந்து பத்தடி; 

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.அவரின் அறிமுகம் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு மறக்க முடியாத தருணம்.அவர் சொன்ன பதில்களில் வெளிப்பட்ட உண்மையும், தெளிவும் அவரின்  சிந்தனையில் உள்ள முதிர்ச்சியை அழகாய் காட்டின.

வடை, பாயசம்னு உணவும் ருசி; காதுக்கு வந்த உணவும் ருசியே.
நல்ல அனுபவம்; நன்றி- திரு.பாலு மணிமாறன் மற்றும் தங்க மீன் ஏற்பாட்டுகுழுவிற்கு.



Wednesday, March 23, 2016

கல்யாண தேனிலா.. காய்ச்சாத பால் நிலா...!

போன டிசம்பர் மாசம் (12.12.15), மாலை ஒரு ஆட்டோல அண்ணா சாலை பக்கம் போய்கிட்டு இருந்தேன். எல்லாரும் வானத்தையே பார்த்துட்டு இருந்தாங்க.
ஆட்டோ ஓட்டுனர் சொன்னாரு
- ஏன் எல்லாம் வானத்தையே பார்க்குறாங்க. உலகம் அழிய போகுதா?



நானும் வெளிய தலைய விட்டு மேல பார்த்தா- நிலாவிலிருந்து பால் வழியற மாதிரி காட்சி.
நான் ஏதோ ஒரு தனிப்பட்ட பிரச்னையை நினச்சு, மனசளவுல நொந்து போய் வந்துகிட்டு இருந்தேன். ஏதோ கடவுள் அருள் மாதிரி அந்த நொடி நினச்சேன்.

வீட்டுக்கு வந்து பேப்பரை பார்த்தா- நம்ம சிங்கப்பூர் செயற்கைக்கோள் 
ஸ்ரீஹரி கோட்டாலேந்து விட்டு இருக்காங்க.
ஒரே அல்வாவா போச்சு. :)




Tuesday, March 22, 2016

சீன மூங்கில் - விடா முயற்சி சொல்லும் பாடம்!


என் பையன் படிக்கும் பள்ளியில் கண்ட ஒரு சுவரொட்டி இது.
ஒவ்வொரு குழந்தையும் ஒரு விதம்; ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் வேறானது. குழந்தைகளை ஒப்பிடவும் வேண்டாம்; ஓடி விளையாட கூட நேரமின்றி அவர்களை எப்பொழுதும் படிக்க சொல்லவும் வேண்டாம்.

இப்போதுள்ள அவசர யுகத்தில், அம்மாக்கள் whatsapp  போன்றவற்றை கூட தத்தம் குழந்தைகளை பற்றிய அலசலாக ஆக்கும் கூத்தையும் காண முடிகிறது.

என் தோழிகளில் சிலர், வார வாரம் , வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி பற்றி படித்து கொண்டிருப்பர்; இவை எல்லாம் ஒரு அளவுக்கு தான் உதவும்.

குமரகுருபரர் என்ற ஒரு சைவ பெரியவர். சகலகலாவல்லி மாலை, மீனாட்சி பிள்ளை தமிழ் என பல நூல்கள் இவர் அருளிவை.
இவர் பிறந்து முதல் 5 ஆண்டுகள் ஒன்றும் பேசவில்லை.கந்தர் கலி வெண்பா பாடினார்- தன் ஐந்தாம் வயதில்!

தாய்மை என்பது ஒரு அனுபவம். ஒரு சின்ன குழந்தையோடு அதன் உலகில் பயணிக்கும் அனுபவம். தாயும் தந்தையும் தான் அவர்களுக்கு ஹீரோ ஹீரோயின் . 

குழந்தைகள் தங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உள்வாங்கி வளர்கின்றனர். அவர்களுக்கு உரமாக நாம் தர வேண்டியது அன்பும், நல்ல அரவணைப்பும் மட்டுமே. சட்டென்று அவர்கள் தங்கள் வளர்ச்சியில் நம்மை வியக்க வைக்கின்றனர். 

என் மகனிடம் போன வாரம் சொன்னேன் - அம்மாவிற்கு ரொம்ப கால் வலிக்கிறது. இப்போது உன்னை விளையாட அழைத்து செல்ல முடியாதென.
அவன் மீண்டும் பிடிவாதம் பிடிக்க - காலையிலிருந்து உட்கார நேரமில்லை தம்பி. உனக்கு இதயம் இருக்கானு கேட்டேன்.
அவன் சொன்னான்- என்னிடம் triangle  square  எல்லாம் இருக்கு; ஹார்ட் இல்லைன்னு . நொந்துட்டேன்; அவனோட கிளம்பி கீழ போனேன் :)





Thursday, March 3, 2016

மானுடம் வாழும் -சுசீலா மாமி! (மன்னை நினைவலைகள்)

மெத்த படித்தவரல்ல; ஆணும் பெண்ணும் சரி நிகர் என எண்ணும் குடும்பத்தில் வந்தவரும் அல்ல.
பைங்காநாட்டில் பிறந்து 12 வயது வரை மட்டுமே பள்ளிக்கு அனுப்பட்டவர்;
சுட்ட அப்பளமும், வத்த குழம்புமாய், வறுமையில் மிக செம்மையாய், சிக்கனமாய் குடும்பம் நடத்தும் பெண்மணி.

என் நினைவில் , பாதி  வெள்ளையும் , பாதி  கறுப்புமாய்  இரண்டே கால்கள் கொண்ட எலி வால் பின்னல்; அதில் ஒரு கிள்ளு பூ.
அள்ளி சொருகிய ஆறு முழ புடவை. கைகளிலும் கால்களிலும் எப்போதும் இருக்கும் மருதாணி நிறம்.
மாமி சற்றே மாநிறம் ஆனவர். வாயில் அவ்வவ்போது பெருகும் எச்சிலை முழுங்கியவாறே பேசுவார்.முகத்தில் எப்போதும் தேக்கிய புன்னகை அவரின் தனித்த அடையாளம்.
நிக்க நேரமில்லடி வித்யா; அம்மாவை வார மலரை எடுத்து வெக்க சொல்லு, வரும் போது வாங்கிகறேன் என்பார்.

மென்பொருள் துறையில் உள்ள கஷ்டங்களை பற்றி பலரும் பேசுகிறோம். அனால் இது தான் வேலை என்று இல்லாமல் எத்தனையோ வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றிய பெண்கள் அநேகம்.

மாமிக்கு இது தான் வேலை என்று இல்லை. சமையல் வேலை செய்வார்; வார பத்திரிகைகளை வாங்கி, அவற்றை பல வீடுகளுக்கு படிக்க கொடுத்து, அவற்றுக்கு ஒரு தொகையை வாங்கி கொள்வார்.
ரேஷனில் கால் கடுக்க நின்று உங்கள் வீட்டின் பொருட்களையும் வாங்கி கொண்டு வந்து தருவார்; கத்திரி வெயில் வாட்டும் நாட்களிலும் கூட வடகம் போட்டு விற்பார். எங்கள் தெரு குழந்தைகள் யார் போய் கேட்டாலும்,சுவையான எலுமிச்சை பிழிந்த காரமான அரிசி வடக மாவு கை நிறைய தருவார்.

மாமிக்கு கால்ல சக்கரம் தான் வெச்சுருக்கு; மேல ரெண்டாம் தெருலேந்து அசேஷம் வரைக்கும் கூட தினமும் நடப்பார். 18 நாள் உற்சவத்திற்கும், எங்கள் மன்னை ராஜ கோபாலனை பார்க்க மாமி ஆஜர்.
எங்களை மாதிரி சில குடும்பங்களுக்கு மாமி வந்து சாமியின் டைம் டேபிள்  சொல்வார்; சாமி இன்னும் கீழ ராஜ வீதியில இருக்கு; சீக்கிரம் போங்கோன்னு.
ஒரு நாளும் உடம்பு முடியலைன்னு சொல்லி பாத்ததில்ல  நாங்க.

அன்றைக்கு (1980-2000)  எந்த ஒரு வீட்டில் இல்லாதது  கேமரா. மாமியின் புகைப்படம் இல்லை என்னிடம். மன்னையில் அன்று இருந்த பல குடும்பங்கள் இன்று சென்னைக்கு பயணித்து விட்டன. மாமி போன்று சிலர் எங்கள் நினைவில் என்றும் நீங்கா முகமே.

மாமிக்கு மூன்று பெண்கள்; நார்மடி உடுத்திய பாட்டி- மாமியின் மாமியார்- உடல் வற்றிய ஒரே வேளை ஒரு கை உண்ணும்  பாட்டி .அவர் சிறுமியாய் இருக்கும் போது வெள்ளைகார துரை குதிரையில் வந்தால் எப்படி நடுங்கி ஒளிந்துகொள்வர் என கதை சொல்லுவார்.மாமா ரிடையர் ஆகி, எலெக்ட்ரிசிட்டி வேலை பார்த்தார்.

சாதி மத பேதமில்லாத ஒரு விஷயம்  பெண் சிசுக் கொலை ; நவ நாகரிகம் மிக்க இந்த நாளிலும் நடக்கும் அவலம்.

வரதட்சணை கொடுமை அதிகம் இருந்த எண்பதுகளில், பெண் குழந்தைகள் எல்லா வீடுகளிலும் வரவேற்கப்பட்ட மழலைகள் அல்லர்.

மாமியின் மூன்றாவது பெண் குழந்தை பிறந்த போது அதை உடனே மேல் உலகம் அனுப்ப தயாராய் இருந்தன சுற்றங்கள்.
அஞ்சு பெண்ணை  பெத்தா அரசனும் ஆண்டி ஆவான்;உன் புருஷன் ஒண்ணும் அரசனும் இல்ல என்பதான புத்தி மதிகள் வேறு.

மாமி மிக தெளிவாய் முடிவெடுத்தார்- என் குழந்தைக்கு தேவையான பணத்தை நான் எப்பாடு பட்டாவது சம்பாதிக்கிறேன்; என் குழந்தை வாழ வேண்டும்.அன்றிலிருந்து ஓட்டம் தான்.
மூன்று பெண்களையும் படிக்க வைத்து, நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்தார்.
கடைசி பெண்ணுக்கு திருமணம் செய்ய ஒரு வருடம் அமெரிக்காவில் தெரியாத யாரோ ஒருவர் வீட்டில் சிறு பிள்ளையை பார்த்துக்கொள்ள போனார்.
நிறைய நேரங்களில், படித்த நல்ல வேலைக்கு செல்லும் பெண்களுக்கே அவ்வப்போது தோன்றும் அவ நம்பிக்கை, சுய திறமை குறித்த சந்தேகம் எனத் தோன்றும் தருணங்களில், நம்பிக்கை நட்சத்திரமாக மனக்கண்ணில் தோன்ற வேண்டியவர் மாமி போன்றவர்கள்.

வீடு வேலைகளிலோ, அலுவலக வேலைகளுக்கோ, நிறைய நேரங்களில் அங்கீகாரம் தேடும் தலைமுறை நாம். மாமி போன்றவர்கள் வாழ்க்கையில் நல்ல பாராட்டை எப்போதோ ஒரு முறை தான் பார்த்து இருப்பார்கள்.

மாமி இப்போது சென்னையில் இருக்கிறாராம்.  பார்த்தே பல வருடங்கள் ஆகி விட்டன; அடுத்த இந்திய பயணத்தில் எங்கு இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். மாமிக்கு ஒரு சல்யுட்!







Sunday, November 15, 2015

இந்த கோலத்தை ரசிக்கலாமா :)

நம்ம ஊர் கோலங்கள் பல வகை, - சிக்கு கோலம், பூக்கோலம், கலர் கோலம்னு!
பெல்ஜியம் நாட்டின் ப்ருச்செல்ஸ் (Brussels) நகரத்தில் வருட வருடம், இந்த பூக்களால் ஆன தரை அலங்காரம் சுற்றுலா பயனிகளுக்களை கவரும் வகையில் அமைக்க படுகிறது.இது  2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகஸ்ட் மாதம் ஒரு வார இறுதியில் அமைக்க படுகிறது.
75 மீ நீளமும், 24 மீ அகலத்திலும், ஒரு சதுரத்தில் 300 பூக்கள் என, 4 மணி நேரத்தில், 100 பேரின் கை வண்ணம் இது.


இது நம்ம வீட்டுக்கோலம்!


நம்ம கலாச்சாரத்தை சின்னகுழந்தைகளுக்கு அழகா சொல்லி தர, பலகாரத்தையும், பல வண்ண கோலங்களும் அழகான வழிகள் :)


எப்படி இருக்குனு சொல்லுங்க!!!


Saturday, August 8, 2015

அப்படி என்ன தெரிந்துக்கொள்ள வேண்டும்???- சிங்கப்பூரிடம் !


இன்று, சிங்கப்பூர் பொன் விழா காண்கிறது.மிக சிறிய நாடாக இருந்தாலும், பெருமைக்குரிய பல சாதனைகளைக்கடந்து, உலக நாடுகள் மதிக்கும் முக்கிய நாடாக தன்னை எப்போதும் முன்னிறுத்திக்கொண்டிருக்கிறது. திரு.லீ குவான் யூ அவர்கள் வழி நடத்திய இந்த தேசம், நல்லொழுக்கமும், பல்வேறு இனத்தவரும், வேறுபாடின்றி ஒன்றாய் வாழ முடியும் என்பதன் முன் மாதிரி.

ரொம்ப சின்ன ஊருய்யா; அதான் நல்லபடியா செய்ய முடியுது!!!!. இது இந்தியாவிலிருந்து வரும் பலரும் சொல்வது. 

ஆனால் இந்த நாட்டின் சாதனை, ஊழலற்ற அரசாங்கம், தொலை நோக்கு பார்வையுடன் தீட்டப்ட்ட திட்டங்கள், மக்களின் முழு ஒத்துழைப்பு என,இந்த வெற்றிக்கு உந்து சக்தியாக இருக்கும் பல விஷயங்கள் வளர்ந்து வரும் பல நாடுகள் எளிதில் சாதிக்க முடியாதவை.


 ஒரு 8 ஆண்டுகள் இங்கு வாழ்ந்த அனுபவத்தில், சில வித்தியாசங்கள், சட்டென கண் முன் விரிகின்றன.


  • மறந்தும் யாரும் குப்பைகளைக்கண்ட இடத்தில் வீசுவதில்லை. 300/500 வெள்ளி அபராதம் பொது இடத்தில் குப்பை போடுவோருக்கு- இரண்டாம் முறை சிறை தண்டனை என, சட்டம் கடுமையாய் இருக்கிறது.



  • நம்ம ஊரிலே நம்மளை படாதபாடு படுத்தும் கொசுக்களைக்கட்டோடு அழிக்கிறார்கள்.டெங்கி தாக்குதல் உங்கள் குடியிருப்பு பகுதியில் தெரிந்தால், உங்கள் வீட்டுக்கு தீடீரென சோதனைக்கு அலுவலர்கள் வருவார்கள்; கழிவறை, பூச்சாடி என  தண்ணீர் தேங்கி இருக்கிறதா என்று கண்டு செல்வார்கள்.
  •  எல்லா அரசு துறைகளின், இணைய பக்கங்களில் உங்களுக்கு தேவையான தகவல்கள், படிவங்கள், அவற்றை இணையத்தில், கட்டணத்தோடு சம்ர்ப்பிக்க வழிகளும் இருக்கின்றன. இதனால், அரசு அலுவலகங்களின் நேரம், வீணாவதில்லை. பொது மக்களும், விடுமுறை எடுத்துக்கொண்டு அலைய தேவையில்லை.
  • எல்லா இன பெண்களும், பயமின்றி படிக்கவும், வேலைபார்க்கவும் முடியும். சட்டங்கள் மிகக்கடுமையாய் இருப்பதால் பெண்களை யாரும், கேலி செய்வதை பார்க்க முடியாது.இந்தியாவில், பெண்களுக்கு எதிராக நடக்கும், வன்கொடுமைகளுக்கு, இது முற்றிலும் வேறான அனுபவம்.
  • எங்கு சென்றாலும் கழிவறைகள், குழந்தைகளின் கைத்துண்டு(Diaper) மாற்றும் அறை இருக்கும். அதனால்,நாள் முழுக்க பயந்துக்கொண்டு, தண்ணீர் அருந்தாமல், அலைய வேண்டியதில்லை.
  • ஒரு மருத்துவமனையிலிருந்து, நீங்கள் வீட்டுக்கு செல்வதற்கு முன், மொத்தப்பணத்தையும் கட்டத்தேவையில்லை. மொத்தப்பணம் எத்தனை செலுத்த வேண்டும் என்பது, வீட்டுக்கு ஒரு கடிதமாய் வரும். நீங்கள் தவணையில் செலுத்தலாம்.

  • எல்லா உணவுக்கூடங்களுக்கும் அவற்றின் தூய்மையைக்கணக்கில் கொண்டு (A/B/C),  என பிரிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் வீட்டில் சமைக்க முடியாமல், அலுவலகம் நோக்கிச் செல்வோரும், தம் வயிற்றைக்காத்துக் கொள்ள இது உதவுகிறது.
  • வாடகைக்காரில் செல்லும்போது, பயணிப்பவர், கண்ணுக்குத்தெரியும்படி, வாகனத்தின் எண்ணும், ஓட்டுனர் பெயரும் இருக்கும்.இது உங்களின் பாதுகாப்பிற்கென இவர்கள் கடைப்பிடிக்கும் விதி. சென்னை போன்ற நகரங்களில், பெண்கள் தனியாக பயணிக்கும் பொழுதுகளில், நம் இந்திய அரசாங்கம் பின் பற்ற வேண்டிய சின்ன உதாரணம்.
  • குடி நீரைப்பாதுகாக்க அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. பசுமைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நிலம் மிக சிறிய அளவிலிருப்பதால், இங்கு பல அடுக்கு வீடமைப்புப்பேட்டைகள் அதிகம். ஆனால் எங்கும் குழந்தைகள் விளையாடவும், பெரியவர்களின் உடற்பயிற்சிக்கும் வசதிகள் கண்டிப்பாக இருக்கும்.



  • தமிழ் இங்கே உண்மையில் வாழும் மொழியாக இருக்கிறது. எங்கள் திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலிருந்து, நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ் மொழி விழா, அவ்வையார் விழா, திருமுறை மாநாடு, பைந்தமிழ் விழா, கம்பன் விழா, என்று, இங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் அதிகம்.
  • நடைமுறை சிக்கல் அதிகமில்லாமல், அமைதியாக வாழவும், நம் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் வழி செய்கிறது சிங்கப்பூர்.
  • குறை மாதத்தில் பிறந்த என் மகன் இன்று நல்லபடியாய் இருப்பதற்கு, சிங்கப்பூரின் மருத்துவ வசதிகளும், தூய்மையான சூழலும் முக்கியக்காரணங்கள்.!
சிங்கப்பூர் தேசிய தின வாழ்த்துக்கள்!!!




Sunday, March 29, 2015

காலத்தை வென்றவர்- திரு. லீ குவான் யூ!

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறையென்று வைக்கப் படும்
."-திருக்குறள்

இங்கு இன்று, சிங்கை மக்களின் இறைவனாய் உயர்ந்த  திரு.லீ குவான் யூ அவர்களின், இறுதி சடங்குகள் நடைபெற்றன.

இது சிங்கையில்  அனைவருக்கும் மனதிற்கு மிகக்கனமான ஒரு வாரம். கொட்டும் மழையிலும், கொஞ்சமும் நகராமல், அவர் பெயரை முழங்கியவாறு, வீதியெங்கும் நின்ற மக்கள் கூட்டத்தில்,மக்களுக்காக  சேவையாற்றிய அவரின் உயரிய வாழ்வும், மக்கள் தம் நல்வாழ்க்கைக்கு வித்திட்ட திரு.லீ அவர்களுக்குக்காட்டும் நெஞ்சார்ந்த நன்றியும் வெளிப்பட்டன.




சிங்கப்பூருக்கு இந்தியாவிலிருந்து  வந்த என் போன்ற முதல் தலைமுறைக்கு இங்கு நடப்பது அதிசயம்.இந்த தீவுத்தேசம் தன் 50வது ஆண்டில் இருக்கிறது.

நாங்கள் இந்தியாவிலிருந்து இங்கு வந்து 8 ஆண்டுகள் ஆகின்றன. முதல் முறை சிங்கை மண்ணில் காலடி வைத்ததுமே அதன் விண்ணளவு வளர்ச்சியை கட்டிடங்கள் சொல்லாமல் சொன்னாலும், மறுபக்கம் இது பசுமை நகரம் என்பது காணும் பச்சை நிற மரங்கள் சொல்லும்.இந்த நகரம் பூங்கா நகரமாக திகழ வித்திட்டவர் திரு.லீ.


சிங்கப்பூரில் அன்றைய அடிப்படை தேவைகளான நல்ல வீடுகள், சுத்தமான தண்ணீர், உயர் தர கல்வி என எல்லாவற்றிலும், இவரும், இவருடைய சகாக்களும் செய்த பணிகள் என்றும், சரித்திரத்தில் நீங்கா இடம் பெறுவன.

ஒற்றுமையான மக்கள்; ஒருங்கிணைந்த தேசம் என்று முழங்கியவர் திரு.லீ. 

சிங்கையில் அவரவர் தாய் மொழியையும் பயில வழி வகுத்தவர் திரு.லீ. நாங்கள் சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்தாலும் கூட இன்றைய நகர பள்ளிகள் தமிழை சிறு பிள்ளைகள் படிக்க வழி வகுக்கின்றனவா என்பது நம் மனசாட்சிக்குத்தெரியும்.!!! 

இங்குள்ள ஒரு பள்ளியில் படிக்கும் என் 4 வயது பிள்ளை, ஆத்திச்சூடியை அழகாய் சொல்ல சொல்ல, என் மனம், திரு.லீ அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறது.

பெயரளவில் தமிழை வளர்க்கிறோம் என்று பேசுவதற்கும், நடைமுறையில்,உண்மையில் தமிழை இளையர்களுக்குக்கொண்டு சேர்க்கும் சிங்கப்பூருக்கும், ரொம்ப தூரம்!!!

இன்றைய இரங்கல் கூட்டத்தில் பேசிய ஒருவர் மலாய் மொழியில் ஒரு கவிதை வாசித்தார். ஒருவர் உங்களுக்கு செய்த நற்செயலை உங்களால் எப்படியும் ஈடு செய்ய முடியாது என்றார்.

உண்மை தான்!!!. ஒரு தாயாக, என் பிள்ளை 33 வாரங்களில், 1.5 கிலோ எடையில் பிறந்த போது எங்களைக்காத்து, நாங்கள் இன்று நல்லபடியாய் இருக்க காரணம்,சிங்கப்பூரின் மருத்துவ தொழில் நுட்பமும், எங்களை சுற்றி இருந்த நல்ல உள்ளங்களும் தான்.
 திரு.லீ போன்ற பெரியவர்கள், மருத்துவ துறை எப்படி இயங்க வேண்டும், என்று விதித்த செயல் திட்டத்தின் பலன் தான், இங்கு  பிறக்கும் எடைக்குறைந்த குழந்தைகளைக்கூட  எப்படியாவது பிழைக்க வைக்கும் வித்தையைச்செய்கிறது.

என் பிள்ளையைக்கண்ணென காத்த செவிலியரில், அனைத்து இனத்தவரும் உண்டு.
ஒரு பெண்ணாக எந்த நேரத்திலும் அச்சமில்லாமல், வெளியே சென்று வர முடியும் என்ற பாதுகாப்பிற்குக்காரணம், திரு.லீ அவர்கள் வகுத்த கடுமையான சட்டங்கள்.

எங்கள் தஞ்சை மாவட்ட கிராமங்கள் பலவற்றிலிருந்தும், சிங்கை மண்ணினால் உயர்ந்த குடும்பங்கள் பல.

ஊழலற்ற அரசாங்கம், தகுதிக்கு முன் உரிமை என்று திரு.லீ நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய ராம ராஜ்யம், உலக நாடுகள் பலவற்றுக்கு ஒரு வாழ்க்கை பாடம்.

வழக்கமாக எங்களுக்குத்தெரிந்து நம்மூரில் அரசியல் கட்சி தலைவர், கைதானாலோ, அல்லது இறந்தாலோ, பாதிப்பு சாதாரண மக்களுக்குத்தான்; பேருந்து ரயில் சேவைகள் பாதிக்கப்படும். ஆனால் இங்கு  அவருக்கு மரியாதை செலுத்த வந்த கூட்டத்தினருக்காக 24 மணி நேரமும் ரயில் சேவையும், பேருந்து வசதியும் இருந்தன.

எங்கள் அடுக்ககத்திற்கு அடிக்கடி மக்களைச்சந்திக்க வருவார் சட்டத்துறை அமைச்சர் திரு.சண்முகம்.அரசியலில், கடை நிலை ஊழியர் கூட பத்து பேரோடு அலையும் சூழலுக்கு பழகிய நமக்கு இவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.



திரு.லீ, அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இறுதி மரியாதை செய்த கூட்டத்தில் நாங்களும் இருந்தோம் என்பதே எங்களுக்கு ஒரு நிறைவு தந்தன. அன்னாருக்கு என்றும் எங்கள் பிரார்த்தனைகள்!