இது ஒரு 19 வருடத்திற்கு முன்னால் நடந்த கதை!!!. வருடம் 1997 .
ஆனால் அன்றைய நடப்பில் இருந்து இன்று வரை நிறைய விஷயங்கள் மாறவில்லை என்றே தோன்றுகிறது.
+2 தேர்வு முடிவுகள் வந்தன.
தமிழ் பாடத்தில் 192 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றேன். மொத்த மதிப்பெண் 1136 பெற்று திருவாரூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்றேன்.
அப்போது 1997, தி.மு.க ஆட்சிக்கு வந்த புதிது. தமிழை இரண்டாம் பாடமாக படிப்பவர்களுக்கு என்று பரிசுகளை அறிவித்தார்கள். இதில் எல்லா மாவட்டங்களிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்கள்.
தமிழ்நாடு முழுதும் கிட்டத்தட்ட 90 பேர்,இந்த திட்டத்தின் பயனர்கள்.
ஆனால் அன்றைய நடப்பில் இருந்து இன்று வரை நிறைய விஷயங்கள் மாறவில்லை என்றே தோன்றுகிறது.
+2 தேர்வு முடிவுகள் வந்தன.
தமிழ் பாடத்தில் 192 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றேன். மொத்த மதிப்பெண் 1136 பெற்று திருவாரூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்றேன்.
அப்போது 1997, தி.மு.க ஆட்சிக்கு வந்த புதிது. தமிழை இரண்டாம் பாடமாக படிப்பவர்களுக்கு என்று பரிசுகளை அறிவித்தார்கள். இதில் எல்லா மாவட்டங்களிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்கள்.
தமிழ்நாடு முழுதும் கிட்டத்தட்ட 90 பேர்,இந்த திட்டத்தின் பயனர்கள்.
எனக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. இந்த உதவித்தொகையை நம்பி என் அப்பா, என்னை பிலானியில் சேர்த்தார்.
நான் எந்த கட்சியை சார்ந்தவளும் அல்ல.
இந்த பதிவை ஒரு பயனாளியாக தமிழக அரசுக்கு என் நன்றியை சொல்லவும் , இந்த உதவித்தொகை சார்ந்த தடைகளை உடைக்க உதவியவர்களை எண்ணி என் நன்றியை சொல்லவும் பயன்படுத்த எண்ணுகிறேன்
பழைய சட்டபேரவை வளாகத்தில் தான் நாங்கள் ,அன்றைய முதல்வர் டாக்டர் திரு.கலைஞரை சந்தித்தோம்.
அப்போது, 2 பேர் தமிழில் 192 வாங்கி இருக்கீங்க. ஆனா மொத்த மதிப்பெண் அடிபடையில நீங்க 3 வது இடம். தமிழக அரசு, உங்களை இரண்டாம் இடமா நினைக்கிறோம்னு சொல்லி 2000 ரூபாய்க்கான காசோலையை அடித்து 3000 என எழுதிக் கையெழுத்திட்டார்.
என்றைக்கும் மறக்க முடியாத தருணம்.என் அப்பா முகத்தில் தெரியும் சந்தோஷம் என்றும் மறக்க முடியாதது.
கூடியிருந்த பத்திரிகையாளர்கள் கை தட்ட, எல்லாரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
பத்திரிகைசெய்தியில்,திரு.கலைஞர் அவர்களுக்கும்,திரு.அன்பழகன் அவர்களுக்கும் இடையில் நிற்கிறேன் நான்.(பாதி முகம் தெரியவில்லை :)
வார வாரம் எதாவது ஒரு பரிசு வந்து கொண்டே இருந்தது. தமிழ் பாடத்தில் நல்ல மதிப்பெண் வாங்கியதற்காக.
அப்போது எல்லா நிதி நிறுவனங்களும் 38% வட்டி என்று அறிவித்து கொண்டிருந்தன. கலைமகள் சபா, அனுபவ் சிட்ஸ் முதலியவற்றிலிருந்தும், கோனார் தமிழ் உரை நிறுவனத்திலிருந்தும் பரிசுகள் வந்தன. தினமலர் உள்ளிட்ட நாள் இதழ்களும் பரிசுத் தொகை வழங்கின.
ரொக்கமாக சுமார் 20000 ரூபாய் வந்து விட்டது.
நான் படித்த மன்னார்குடி,தூய வளனார் பள்ளியில் தமிழைக்கற்பிக்க, ஒரு நல்ல உக்தியை கையாண்டார்கள்.
6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தமிழுக்கு மட்டும் இரண்டு ஆசிரியர்கள்.
ஒரு ஆசிரியர் வயதில் மூத்தவர். அவர் செய்யுள் பகுதியை கையாள்வார்.
நிறைய பாடல்களுக்கு நாங்களே மெட்டமைத்து வந்து பாடுவோம்.
பிழையின்றி எழுதவும் இந்த ஆசிரியை வழிகாட்டினார். நான் படிக்கும் போது திருமதி.ராதாமணி, திருமதி.கலைமணி ஆகியோர் இருந்தனர்.
இன்னொரு தமிழ் ஆசிரியை, உரைநடை மற்றும் கட்டுரை, துணைப்பாடம் ஆகியவற்றை கையாள்வார்.
இந்த முறை தமிழ் வகுப்புகளை ஆர்வமாக எதிர்நோக்க வழி செய்தது.
என் அப்பாவும் ஒரு பள்ளி ஆசிரியர். நான் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய வருடங்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு, வரவில்லை என எழுதிகொடுத்துவிடார். நேர்மைக்கு ரொம்பவே பேர் வாங்கியவர்.
சில வருடங்களில் இவரை கண்காணிக்கும் அதிகாரியாக கண்டால் நிறைய பேருக்கு நடுங்கி இருக்கிறது. ஒரு சிறு மூங்கில் கூடை நிறைய பிட் பேப்பர் பிடித்தார் ஒரு வருடம்.
நாங்கள் படித்த வருடம் புத்தகம் மாறி விட்டது. பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தை பன்னிரண்டாம் வகுப்பில் செப்டெம்பர் மாதம் தான் ஆரம்பித்தார்கள். ஒருத்தி வாங்கிய புத்தகத்தை எல்லாரும் பிரதி எடுத்துக்கொண்டோம்.
தீராத மின்வெட்டு அப்போதெல்லாம் மன்னையில் எப்போதுமே. மெழுகுவர்த்திக்கு தான் பணம் ஒதுக்க வேண்டி இருக்கும்.
பேப்பர் திருத்துவது கஷ்டமான வேலை. நிறைய இடைவெளி விட்டு எழுது; பாலும் தெளிதேனும் பாட்டு முதல்ல எழுது- அப்டின்னு நிறைய தேர்வு நுணுக்கங்களை சொன்னார் என் அப்பா.
அரசாணை வந்ததும்,எந்த செலவுகளை அரசு ஏற்கும்; எதை ஏற்காது என்பதில் ஒரு குழப்பம் இருந்தது. உணவு செலவுக்கு , புத்தக செலவுக்கு உண்டா. என் போல தமிழ்நாட்டில் படிக்காமல் வெளியே படிப்பவர்களுக்கு ரயில் கட்டணம் உண்டா என பல கேள்விகள்.
நாங்கள் செய்யும் எல்லா செலவுக்கும் கணக்கு காண்பித்து, அவற்றுக்கு 4 பிரதி எடுத்து, மாவட்ட பள்ளி கல்வி அலுவலகத்தில் காண்பிக்க வேண்டும்.
முன்னே செலவு செய்து பின்னர் பணம் அரசிடமிருந்து கிடைக்கும்.
முதல் வருடம் பெரிதாய் ஒரு பிரச்னையும் இல்லை. பார்க்கின்ற உறவினர்கள், பாரு. அக்கா மாதிரி படிக்கணும். அப்பாக்கு கஷ்டம் இல்லாம படிக்கறானு சொல்லும்போது உள்ளுக்குள்ள பெருமையா தான் இருந்தது.
நான் படித்தது பொறியியல் அல்ல. 4 வருடங்களில் கிடைக்கும் MBA க்கு சமமான MMS என்ற ஒரு படிப்பு. இந்தியாவில் இங்கே மட்டும் தான் இருக்கிறது. ஆராய்ச்சி எல்லாம் பண்ணி சேரல.
யாருக்கோ வாங்கிய விண்ணப்பபடிவம் என் சித்தப்பா கொடுத்து விண்ணப்பித்தேன்.
பிலானியில் சேரும் போது உங்களுக்கு என்ன படிப்பு வேண்டும் என்று கேட்பார்கள். நான் கேட்ட பொறியியல் படிப்பு கிடைக்கவில்லை. பிலானியில் முழுதும், மதிப்பெண் அடிப்படையிலான அனுமதி. நான் கேட்ட 4வது சாய்ஸ் MMS .
ரொம்ப நாள் தாமதமாய் counselling தொடங்கவும் பிலானியில் சேர்ந்து விட்டேன்.
என் அம்மா அப்பா வழியில் சித்தப்பா, சித்தி, மாமா என பலரும் எனக்கு உதவினார்கள்.உடைகளில் தொடங்கி, துணிகள் உலர்த்தும் கயிறு வரை பட்டியலிட்டு வாங்கி கொடுத்தார்கள்.
ஹிந்தி தெரியாமல், ஆங்கிலமும் அதிகம் தெரியாமல் நன்றாக விழிகள் பிதுங்கின.
ஒரு வழியாக பாதியில் விடாமல் நல்லபடியாய், மிக தீவிரமான குளிரையும், மற்ற பல சிக்கல்களையும் தாண்டி படித்தேன்.நாலாம் வருட கடைசியில் cognizant நிறுவனம் என்னை வேலைக்கு சேர்த்துக்கொண்டது.
என் அறை தோழியில் ஒருத்தி என்னை விட மொத்த மதிப்பெண் அதிகம் வாங்கியவள். அதென்ன தமிழ் படிச்சதாலே உனக்கு மட்டும் உதவித்தொகைனு நிறைய தடவை கேட்டு இருக்கா.இது வேற மாதிரி சமூக அநீதின்னு சொன்னவங்களும் இருந்தாங்க
இரண்டாவது வருடம் ஆரம்பத்தில் சொன்னார்கள்- அரசால் முழுதும் செலவை ஏற்க முடியாது. ஒரு அரசாணை வர போகிறது. வருடத்திற்கு ஒரு சிறு தொகை கிடைக்கும் என்று.
இரண்டாம் ஆண்டில் எந்த வங்கியும் உங்களுக்கு எளிதில் கல்விக்கடன் தராது. அதிலும் என்னைப்போல,பரவலாக தெரியாத படிப்பை படிப்பவர்களின் கதை இன்னும் மோசம்.
அப்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியராக திரு.உமா சங்கர் இருந்தார்.
நான் ஒரு இன்லண்ட் லெட்டரில் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
படிப்புக்கான உதவி பாதியில் நின்றால் எங்கள் எதிர்காலம் என்ன?. உங்களுக்கு என் நிலை புரியும் என்பதாக.
அந்த கடிதம் சென்னையில் நடந்த கலெக்டர் மாநாட்டில் படிக்கப்பட்டது.
எங்கள் நல்ல நேரம், நாங்கள் படித்து முடிக்கும்வரை உதவி தொகை கிடைக்கும் என்று அறிவித்தார்கள். அடுத்த வருடத்திலிருந்து இந்த திட்டம் கைவிடப்பட்டது.
இது எனக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ் ; இதில் வாழ்த்துக்களுடன் என்று தான் இருக்கிறது டாக்டர்.கலைஞரின் கையொப்பம் .
ஆனால் பெருவாரியானவர்கள் வாழ்த்துகள் என்றே எழுதுகிறார்கள்.
எது சரி என்பதில் தனியாக பட்டிமன்றம் நடக்கிறது அங்கங்கே :).
என் அனுபவம் சொல்லும் பாடம் என்ன?
1. எந்த அரசாணையாக இருந்தாலும், அதைத்தொடங்கி அதனால் பயன் பெறுவோருக்கு இடையில் பயன் நின்று போகாமல் இருக்கும் வகையில் செயல் திட்டம் இருக்க வேண்டும்.
2. எந்த செலவு வகைகள் உண்டு இல்லை என்று விரிவாக சொல்லிவிட்டால், பல கேள்விகளை தவிர்க்கலாம்.
3. நிறைய பெற்றோர்கள் செலவழிக்காத பணத்திற்கு பொய் ரசீது தந்தனர்.ஆதியோடு அந்தம் ஊழல் இல்லாமல் இருந்தால் தான் தனி மனித அளவிலும் பொய்யை தவிர்க்க இயலும்.
சிங்கப்பூராக இருந்தால் பொய் ரசீது சமர்ப்பிக்க யாரும் அஞ்சுவார்கள்
4.அடித்தளத்தில் இருந்து படித்து அதிகாரத்தில் இருக்கும் அலுவலர்கள் பலருக்கு, தம்போன்ற மாணவர்களின் கஷ்டம் புரிகிறது. இப்போதெல்லாம் முன்னை விட இன்னும் நிறைய பேர் உதவுகிறார்கள். ஊடகங்களும் தன் பங்கிற்கு உதவுகின்றன.
ஒருவர் மற்றவர் மீது காடும் அக்கறை என்பது மேலும் அதிகரித்தாலே, நாம் முன்னேறிவிடலாம்.
5.ஒவ்வொரு முறையும் கருவூலத்திலிருந்து என் அப்பாவுக்கு DD வரும்போதும் கண்டிப்பாக கையூட்டு கொடுத்தே ஆக வேண்டிய நிலை இருந்தது. என் அப்பா சொல்லி கொண்டே இருப்பார் . இது scholarship என்று நினைக்காதே . பல முறை நடையான நடை நடக்கிறேன் என்று.
எல்லா அரசாங்க அலுவலகத்திலும் பணம் வாங்காமல் ஒன்றுமே நடக்காதா?. அங்கொன்றும் இங்கொன்றுமாய் நாம் லஞ்சம் வாங்காதவர்களை ப்பற்றி கேள்விப்படுகிறோம். 20 ஆண்டுகளில் இந்த நிலை மாற வில்லை.
முதல் முறை பணம் கடனாக வாங்கி கல்லூரிக்கு கட்டி இருந்தார். 4 மாதங்கள் ஆகியும் பணம் வரவில்லை. அப்போது அப்பாவுக்கு தெரிந்த திரு.அம்பிகாபதி என்ற மில் உரிமையாளர் அவருக்கு தெரிந்த திரு. T.R.பாலு அவர்களின் உதவியாளருக்கு சொல்லி அவரும், திரு.கலைஞர் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.பணம் எங்களுக்கு வந்தது.
நான் ஒவ்வொரு முறை பிலானிக்கு கிளம்பும் போது கண்டிப்பாக ஒரு மொத்த தொகையும், ஒரு 200 ரூபாய்க்கு நாணயமுமாய் தருவார் அப்பாவின் நண்பர் திரு.வைத்யநாதன். இவர் ஸ்டேட் பேங்க் ஊழியர்.
அப்பாவின் மற்றொரு நண்பர் திரு.விவேகானந்தனும் அப்பாவிற்கு முன்பணம் கடனாக கொடுத்து உதவினார்.
ஆக, ஊர் கூடி தேர் இழுத்து போல, அரசு செலவில் என் படிப்பிற்கு தடை வந்த போது, பலரும் உதவினார்கள்.
ஒருமைக்கண் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப் புடைத்து என்கிறது திருக்குறள்.
என் கல்வி என்னைபோல பலரையும் கைத்தூக்கி விட வேண்டும்.
என் கல்வி என்னைபோல பலரையும் கைத்தூக்கி விட வேண்டும்.
இன்று அந்த எண்ணத்தில் நானும் வருடத்தில் ஒரு 5-10 பிள்ளைகளுக்கான பள்ளி அல்லது கல்லூரி கட்டணத்தை செலுத்துகிறேன்.
இந்தியாவில் இல்லாவிட்டாலும் என்னால் முடிந்த நன்றி இதுவே.
இலவச கணினி முதலியவற்றைத்தருவதை விட, வென்றவர்களுக்கு படிப்புக்கான உதவித்தொகை என்ற அணுகுமுறை, மாணவர்களை ஊக்கப்படுத்தும் என்பது என் தனிப்பட்ட கருத்து .
இலவச கணினி முதலியவற்றைத்தருவதை விட, வென்றவர்களுக்கு படிப்புக்கான உதவித்தொகை என்ற அணுகுமுறை, மாணவர்களை ஊக்கப்படுத்தும் என்பது என் தனிப்பட்ட கருத்து .
எனக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!!!.