இன்று, சிங்கப்பூர் பொன் விழா காண்கிறது.மிக சிறிய நாடாக இருந்தாலும், பெருமைக்குரிய பல சாதனைகளைக்கடந்து, உலக நாடுகள் மதிக்கும் முக்கிய நாடாக தன்னை எப்போதும் முன்னிறுத்திக்கொண்டிருக்கிறது. திரு.லீ குவான் யூ அவர்கள் வழி நடத்திய இந்த தேசம், நல்லொழுக்கமும், பல்வேறு இனத்தவரும், வேறுபாடின்றி ஒன்றாய் வாழ முடியும் என்பதன் முன் மாதிரி.
ரொம்ப சின்ன ஊருய்யா; அதான் நல்லபடியா செய்ய முடியுது!!!!. இது இந்தியாவிலிருந்து வரும் பலரும் சொல்வது.
ஆனால் இந்த நாட்டின் சாதனை, ஊழலற்ற அரசாங்கம், தொலை நோக்கு பார்வையுடன் தீட்டப்ட்ட திட்டங்கள், மக்களின் முழு ஒத்துழைப்பு என,இந்த வெற்றிக்கு உந்து சக்தியாக இருக்கும் பல விஷயங்கள் வளர்ந்து வரும் பல நாடுகள் எளிதில் சாதிக்க முடியாதவை.
ஒரு 8 ஆண்டுகள் இங்கு வாழ்ந்த அனுபவத்தில், சில வித்தியாசங்கள், சட்டென கண் முன் விரிகின்றன.
- மறந்தும் யாரும் குப்பைகளைக்கண்ட இடத்தில் வீசுவதில்லை. 300/500 வெள்ளி அபராதம் பொது இடத்தில் குப்பை போடுவோருக்கு- இரண்டாம் முறை சிறை தண்டனை என, சட்டம் கடுமையாய் இருக்கிறது.
- நம்ம ஊரிலே நம்மளை படாதபாடு படுத்தும் கொசுக்களைக்கட்டோடு அழிக்கிறார்கள்.டெங்கி தாக்குதல் உங்கள் குடியிருப்பு பகுதியில் தெரிந்தால், உங்கள் வீட்டுக்கு தீடீரென சோதனைக்கு அலுவலர்கள் வருவார்கள்; கழிவறை, பூச்சாடி என தண்ணீர் தேங்கி இருக்கிறதா என்று கண்டு செல்வார்கள்.
- எல்லா அரசு துறைகளின், இணைய பக்கங்களில் உங்களுக்கு தேவையான தகவல்கள், படிவங்கள், அவற்றை இணையத்தில், கட்டணத்தோடு சம்ர்ப்பிக்க வழிகளும் இருக்கின்றன. இதனால், அரசு அலுவலகங்களின் நேரம், வீணாவதில்லை. பொது மக்களும், விடுமுறை எடுத்துக்கொண்டு அலைய தேவையில்லை.
- எல்லா இன பெண்களும், பயமின்றி படிக்கவும், வேலைபார்க்கவும் முடியும். சட்டங்கள் மிகக்கடுமையாய் இருப்பதால் பெண்களை யாரும், கேலி செய்வதை பார்க்க முடியாது.இந்தியாவில், பெண்களுக்கு எதிராக நடக்கும், வன்கொடுமைகளுக்கு, இது முற்றிலும் வேறான அனுபவம்.
- எங்கு சென்றாலும் கழிவறைகள், குழந்தைகளின் கைத்துண்டு(Diaper) மாற்றும் அறை இருக்கும். அதனால்,நாள் முழுக்க பயந்துக்கொண்டு, தண்ணீர் அருந்தாமல், அலைய வேண்டியதில்லை.
- ஒரு மருத்துவமனையிலிருந்து, நீங்கள் வீட்டுக்கு செல்வதற்கு முன், மொத்தப்பணத்தையும் கட்டத்தேவையில்லை. மொத்தப்பணம் எத்தனை செலுத்த வேண்டும் என்பது, வீட்டுக்கு ஒரு கடிதமாய் வரும். நீங்கள் தவணையில் செலுத்தலாம்.
- எல்லா உணவுக்கூடங்களுக்கும் அவற்றின் தூய்மையைக்கணக்கில் கொண்டு (A/B/C), என பிரிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் வீட்டில் சமைக்க முடியாமல், அலுவலகம் நோக்கிச் செல்வோரும், தம் வயிற்றைக்காத்துக் கொள்ள இது உதவுகிறது.
- வாடகைக்காரில் செல்லும்போது, பயணிப்பவர், கண்ணுக்குத்தெரியும்படி, வாகனத்தின் எண்ணும், ஓட்டுனர் பெயரும் இருக்கும்.இது உங்களின் பாதுகாப்பிற்கென இவர்கள் கடைப்பிடிக்கும் விதி. சென்னை போன்ற நகரங்களில், பெண்கள் தனியாக பயணிக்கும் பொழுதுகளில், நம் இந்திய அரசாங்கம் பின் பற்ற வேண்டிய சின்ன உதாரணம்.
- குடி நீரைப்பாதுகாக்க அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. பசுமைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நிலம் மிக சிறிய அளவிலிருப்பதால், இங்கு பல அடுக்கு வீடமைப்புப்பேட்டைகள் அதிகம். ஆனால் எங்கும் குழந்தைகள் விளையாடவும், பெரியவர்களின் உடற்பயிற்சிக்கும் வசதிகள் கண்டிப்பாக இருக்கும்.
- தமிழ் இங்கே உண்மையில் வாழும் மொழியாக இருக்கிறது. எங்கள் திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலிருந்து, நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ் மொழி விழா, அவ்வையார் விழா, திருமுறை மாநாடு, பைந்தமிழ் விழா, கம்பன் விழா, என்று, இங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் அதிகம்.
- நடைமுறை சிக்கல் அதிகமில்லாமல், அமைதியாக வாழவும், நம் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் வழி செய்கிறது சிங்கப்பூர்.
- குறை மாதத்தில் பிறந்த என் மகன் இன்று நல்லபடியாய் இருப்பதற்கு, சிங்கப்பூரின் மருத்துவ வசதிகளும், தூய்மையான சூழலும் முக்கியக்காரணங்கள்.!