Friday, November 28, 2014

சிரிக்கும் மலர்கள்!

எதிலும் அவசரமாய், இயந்திர கதியில் இயங்கும் வாழ்க்கையில், நம் கண்ணெதிரே, சொர்க்கத்தைக்கொண்டு வரும் பல வண்ண மலர்களில் சில இங்கே!

எங்களின் அடுக்ககத்தில், தோட்ட வேலைக்கு சிறப்புக்கவனம் செலுத்த படுகிறது. வருடா வருடம், சிங்கப்பூரில்,சுற்றுப்புறச்சூழல் அமைச்சின் போட்டிகளில் முதல் பரிசைத்தட்டி செல்ல வேண்டும் என்று, குறியாய் இருக்கிறார்கள். வாழை இலை, வெற்றிலை, முருங்கை கீரை, ஒமச்செடி என எல்லாமும் எங்கள், அடுக்கக்தொகுதிக்கு உள்ளேயே உள்ளன.

இதில் உள்ள எல்லா மலர்களின் பெயர்களும் எனக்குத் தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்!

ஒவ்வொரு நாள் முடிந்து வீட்டுக்கு வரும் போதும், படியருகே இம்மலர்கள் சிரிக்கின்றன.

அலுவலகம் அடுத்த வாரம் ஊரின் மறு கோடிக்கு மாறுகிறது. அழகான சூழலும், நல்ல நட்பாய் அமைந்த நண்பர்களும், பத்தடி தொலைவில் இருக்கும் கோயிலையும் விட்டு, வேறங்கும் மாற மனமில்லை.

பாரதியாரின் காணி நிலம் வேண்டும் பாட்டு தான் நினைவுக்கு வருகிறது.

வீடென்பது வெறும் சுவர்கள் மட்டும் இல்லையே!. எங்கள் அடுக்ககத்தின், தோட்ட ஆர்வலர்களுக்கு ஒரு ஷொட்டு!












Monday, November 24, 2014

தோல் பாவைக்கூத்து- சிங்கப்பூர் கலா உத்சவம் (2014)

எல்லா ஆண்டுகளிலும், பெரும்பாலும் கேரளாவிலிருந்து, ஒரு படைப்பு கண்டிப்பாக, கலா உத்சவத்தில் நடக்கிறது.

கடந்த ஆண்டுகளில்,இங்கு கதகளியும், நங்கையர் கூத்தும் பார்த்தோம்.

சிங்கையின் சின்னமான மீன் வால் சிங்கத்தின் (Merlion)முன்னே; அழகான மாலையில், படகுகள் பின்புறம் மிதந்து வர, கேரளத்தின் பாரம்பரிய வாத்திய கருவிகளுடன், இந்த முறை தோல் பாவைக்கூத்து!.

திறந்த வெளியில், உட்கார இடமில்லை; பல நாட்டவர்; நிறைய சிறார்கள்!

கைப்பேசியில் தொடங்கி, அவரவரும், இந்த நிகழ்ச்சியைப்படம் பிடித்துக்கொண்டிருந்தனர்,

இது, கேரளத்தின், பொம்மலாட்டம்; கம்ப ராமாயணத்தை அடிப்படையாகக்கொண்டது.

அதென்னவோ தெரியவில்லை; இது மாதிரி நிகழ்ச்சிகளில்-ஒருவராவது, குரல் வளத்தில் பாடகர் யேசுதாசை நினைவுபடுத்துகின்றனர்.

கேரளாவில், இந்த கூத்துக் காண்பிக்க இதற்கென்றே, கூத்து மண்டபங்கள் இருக்கின்றன.
21 எண்ணைய் விளக்குகள், சம இடைவெளியில், திரையின் பின்னே இருக்கின்றன. மாலை ஒரு 7.30 மணிக்கு இருக்கும், அந்தி வெளிச்சத்தில், முதலில் ஒரு ஆனைமுகன் துதி; பிறகு ஒரு பகவதி வந்தனம்.

அவர்களின் தோல் பாவைகளில், அங்கங்கே மெலிதாய், குண்டூசி ஓட்டைகள்; அவை அழகாய் முன் புறம் பார்ப்பவரின் அனுபவத்தை மேலும் இனிதாக்குகின்றன.

இந்த கலையில் அவர்கள் பயன்படுத்தும் வாத்தியங்கள்- பலா மரத்திலான எழுபறை(Ezhupara), இலதளம்(cymbals), சங்கு, குருங்குழல் முதலியன.

இளவல் லட்சுமணர்  பர்ணசாலை அமைக்க இடம் தேடுகிறார்; மான், மயில், சிங்கம், யானை என பல மிருகங்கள் எங்கள் முன்னே ஓடின; வில்லில், ஒரு நாணேற்றினார்; எல்லாம் ஓடி விட்டன; ஒரு மரத்தை வெட்டினார், சம்புகுமாரனை வதைத்தார்.

காணொளி இங்கே : http://youtu.be/0Aa3UhipYNo

சூர்ப்பனகை ராமரையும், லட்சுமணரையும், மணமுடிக்க ஆசைப்படுகிறாள். கோதவரி நதிக்கரையில் காலைக்கடன்களை முடிக்க வரும், ராமரிடம் தன் ஆசையை சொல்கிறாள்; ராமர் மறுக்க;பர்ணசாலையில் உள்ள சீதையைப்பார்த்து, இவளால் தான் ராமர் என்னை ஏற்கவில்லை ; இவளைக்கொன்று விடலாம் என முன்னேற; இளவல், அவள் மூக்கையும், காதுகளையும் அறுக்கிறார்.
சூர்ப்பனகை ராவணனிடம் சென்று, சீதையின் அழகை வர்ணிக்கிறாள்


"அம்மா தூக்கம் வருது போகலாம் !"என குழந்தை சொல்ல
தோல் விசிறி!
அரை மனதாய் கிளம்பினேன்;
பாரம்பரிய கலைகளுக்காக வாழ்ந்து வரும் கலைஞர்களை வாழ்த்தியபடி!