Friday, November 28, 2014

சிரிக்கும் மலர்கள்!

எதிலும் அவசரமாய், இயந்திர கதியில் இயங்கும் வாழ்க்கையில், நம் கண்ணெதிரே, சொர்க்கத்தைக்கொண்டு வரும் பல வண்ண மலர்களில் சில இங்கே!

எங்களின் அடுக்ககத்தில், தோட்ட வேலைக்கு சிறப்புக்கவனம் செலுத்த படுகிறது. வருடா வருடம், சிங்கப்பூரில்,சுற்றுப்புறச்சூழல் அமைச்சின் போட்டிகளில் முதல் பரிசைத்தட்டி செல்ல வேண்டும் என்று, குறியாய் இருக்கிறார்கள். வாழை இலை, வெற்றிலை, முருங்கை கீரை, ஒமச்செடி என எல்லாமும் எங்கள், அடுக்கக்தொகுதிக்கு உள்ளேயே உள்ளன.

இதில் உள்ள எல்லா மலர்களின் பெயர்களும் எனக்குத் தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்!

ஒவ்வொரு நாள் முடிந்து வீட்டுக்கு வரும் போதும், படியருகே இம்மலர்கள் சிரிக்கின்றன.

அலுவலகம் அடுத்த வாரம் ஊரின் மறு கோடிக்கு மாறுகிறது. அழகான சூழலும், நல்ல நட்பாய் அமைந்த நண்பர்களும், பத்தடி தொலைவில் இருக்கும் கோயிலையும் விட்டு, வேறங்கும் மாற மனமில்லை.

பாரதியாரின் காணி நிலம் வேண்டும் பாட்டு தான் நினைவுக்கு வருகிறது.

வீடென்பது வெறும் சுவர்கள் மட்டும் இல்லையே!. எங்கள் அடுக்ககத்தின், தோட்ட ஆர்வலர்களுக்கு ஒரு ஷொட்டு!












Monday, November 24, 2014

தோல் பாவைக்கூத்து- சிங்கப்பூர் கலா உத்சவம் (2014)

எல்லா ஆண்டுகளிலும், பெரும்பாலும் கேரளாவிலிருந்து, ஒரு படைப்பு கண்டிப்பாக, கலா உத்சவத்தில் நடக்கிறது.

கடந்த ஆண்டுகளில்,இங்கு கதகளியும், நங்கையர் கூத்தும் பார்த்தோம்.

சிங்கையின் சின்னமான மீன் வால் சிங்கத்தின் (Merlion)முன்னே; அழகான மாலையில், படகுகள் பின்புறம் மிதந்து வர, கேரளத்தின் பாரம்பரிய வாத்திய கருவிகளுடன், இந்த முறை தோல் பாவைக்கூத்து!.

திறந்த வெளியில், உட்கார இடமில்லை; பல நாட்டவர்; நிறைய சிறார்கள்!

கைப்பேசியில் தொடங்கி, அவரவரும், இந்த நிகழ்ச்சியைப்படம் பிடித்துக்கொண்டிருந்தனர்,

இது, கேரளத்தின், பொம்மலாட்டம்; கம்ப ராமாயணத்தை அடிப்படையாகக்கொண்டது.

அதென்னவோ தெரியவில்லை; இது மாதிரி நிகழ்ச்சிகளில்-ஒருவராவது, குரல் வளத்தில் பாடகர் யேசுதாசை நினைவுபடுத்துகின்றனர்.

கேரளாவில், இந்த கூத்துக் காண்பிக்க இதற்கென்றே, கூத்து மண்டபங்கள் இருக்கின்றன.
21 எண்ணைய் விளக்குகள், சம இடைவெளியில், திரையின் பின்னே இருக்கின்றன. மாலை ஒரு 7.30 மணிக்கு இருக்கும், அந்தி வெளிச்சத்தில், முதலில் ஒரு ஆனைமுகன் துதி; பிறகு ஒரு பகவதி வந்தனம்.

அவர்களின் தோல் பாவைகளில், அங்கங்கே மெலிதாய், குண்டூசி ஓட்டைகள்; அவை அழகாய் முன் புறம் பார்ப்பவரின் அனுபவத்தை மேலும் இனிதாக்குகின்றன.

இந்த கலையில் அவர்கள் பயன்படுத்தும் வாத்தியங்கள்- பலா மரத்திலான எழுபறை(Ezhupara), இலதளம்(cymbals), சங்கு, குருங்குழல் முதலியன.

இளவல் லட்சுமணர்  பர்ணசாலை அமைக்க இடம் தேடுகிறார்; மான், மயில், சிங்கம், யானை என பல மிருகங்கள் எங்கள் முன்னே ஓடின; வில்லில், ஒரு நாணேற்றினார்; எல்லாம் ஓடி விட்டன; ஒரு மரத்தை வெட்டினார், சம்புகுமாரனை வதைத்தார்.

காணொளி இங்கே : http://youtu.be/0Aa3UhipYNo

சூர்ப்பனகை ராமரையும், லட்சுமணரையும், மணமுடிக்க ஆசைப்படுகிறாள். கோதவரி நதிக்கரையில் காலைக்கடன்களை முடிக்க வரும், ராமரிடம் தன் ஆசையை சொல்கிறாள்; ராமர் மறுக்க;பர்ணசாலையில் உள்ள சீதையைப்பார்த்து, இவளால் தான் ராமர் என்னை ஏற்கவில்லை ; இவளைக்கொன்று விடலாம் என முன்னேற; இளவல், அவள் மூக்கையும், காதுகளையும் அறுக்கிறார்.
சூர்ப்பனகை ராவணனிடம் சென்று, சீதையின் அழகை வர்ணிக்கிறாள்


"அம்மா தூக்கம் வருது போகலாம் !"என குழந்தை சொல்ல
தோல் விசிறி!
அரை மனதாய் கிளம்பினேன்;
பாரம்பரிய கலைகளுக்காக வாழ்ந்து வரும் கலைஞர்களை வாழ்த்தியபடி!

Wednesday, August 20, 2014

தேடிக்கண்டு கொண்டேன் - திருவதிகை (A trip to Thiruvadhigai Temple, TamilNadu)

To read the below in English: Click here.https://docs.google.com/document/d/1XxZ5bJde3yoIXLhVnp3xJQ-vMVKEjnLsJ1Z8mz0gzcY/edit?usp=sharing

இந்த முறை இந்தியா சென்றபோது, முன்கூட்டியே இதுவரைப்பார்க்காத கோயில்களில், சிலவற்றை பெற்றோருடனும், பிள்ளையுடனும் பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.

நாங்கள் அனுபவித்த திருவதிகைக்கோயில் பற்றிய பகிர்வு இதோ!

திருவதிகை:
1.முதல் தேவாரப்பதிகம், பாடப்பெற்றக்கோயில்;
2.கெடில நதிக்கரையில் அமைந்த தலம்;
3.அப்பர் பெருமானின் அக்கா திலகவதியார் அன்றாடம், தன் தம்பி திரு நாவுக்கரசர் சைவ நெறியைப்பின்பற்ற வேண்டி சிவனாரை, நெஞ்சுருகி வழிப்பட்ட தலம்.
4.சிவபெருமானின், 8 வீரட்டானத்தலங்களில் இதுவும் ஒன்று.
இறைவன்: வீரட்டானேசுவரர்; இறைவி: கெடில நாயகி


இந்த தலம், பன்ருட்டி அருகில் உள்ளது.
எங்களுக்கு சுமார் 2 மணி நேர பயணம், பாண்டிச்சேரியில் இருந்து.

நாங்கள், ஒரே நாளில், திருவதிகை, திருவந்திபுரம், மற்றும், திருப்பாதிரிப்புலியூர் சென்று தரிசித்து வந்தோம்.

கால மாற்றத்தில், இன்றைய திருவதிகை ஒரு சிறிய கிராமம்; காலை 8 மணி!
ஒரு திருமணம் முடிந்து, மணமக்களும், சுற்றத்தாரும், கோயிலை விட்டு,வெளியேறிக்கொண்டிருந்தனர்;
மணப்பெண்ணின் வெட்கத்தைப்பார்த்து புன்னகைத்தபடி நடந்தோம்.
அதிக பேர் இல்லை.
கோயிலின் முன்புறத்தோற்றம் உங்களுக்காக:



முதலில் கண்ணில் பட்டது இந்தஅருகக்கடவுளின் சிலை.
சிவன் கோயிலில், அருகக்கடவுள் சிற்பம், அதிசயம் தான்!

இந்தக்கோயில்,முதலாம் மகேந்திர வர்மனால் (Mahendra Verma Pallava -I) 6ஆம் நூற்றாண்டில், முதலில் சமணக் கோயிலாய் (Jain Temple) கட்டப்பட்ட இடத்தில், பின்னர் அதே அரசரால், சிவன் கோயிலாய் கட்டப்பட்டது.

27 நட்சத்திரம், மற்றும் 12 ராசிக்காரர்களுக்கான மரங்களை,
வளர்த்து வைத்திருக்கிறார்கள். அவசியம்,மூலிகை சம்பந்தமாக ஆராய்ச்சி செய்பவர்கள் பார்க்க வேண்டிய கோயில்.

பெரும்பாலும் நம் தலமரங்கள், மூலிகைத்தாவரங்களே. சமீபத்தில், நெல்லிமரத்தைத் தல விருட்சமாகக்கொண்ட திருநெல்லிக்கா என்ற தலத்தைப்பற்றி அறிந்தேன்.

சரி! திருவதிகையைப்பற்றி, பார்ப்போம்!

அப்பர் பெருமானின் சூலை நோய் , அவரை முடக்கி எடுக்க, இந்தக்கோயில், வீரட்டானேசுவரரிடம், தன் நோய் தீர்த்தருள வேண்டிப்பாடினார்.
முதல் தேவாரப்பாடல் உருவானது!.





இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலும், அப்பர் பெருமானின் மிகுந்த வலியையும், தாங்க முடியாத வேதனையில், மனித மனம் என்னவெல்லாம் சொல்லி அழுமோ,அந்த உணர்வையும் பிரதிபலிக்கிறது.

லிங்க திருமேனியில், 16 செங்குத்தான உலோக பட்டைகள் காணப்படுகின்றன. மனதை வருடிய தரிசனம்.


இங்குள்ள சரக்கொன்றை மலர்கள், நாம், பரவலாய், காணுகின்ற பூக்கள் தான்; அவை நீர்ழிவு நோய்க்கு மருந்து. நாங்கள், கேரளத்தின், திரு அஞ்சைக்களத்திற்கும், இதே தல விருட்சம் எனக்கண்டோம்; அது, சுந்தரர், விண்ணகம் நோக்கி புறப்பட்ட தலம்; இது அப்பரை, இறைவன், ஆட்கொண்ட தலம்.

மிகுந்த வேதனையிலிருந்து, மன அமைதி தர வல்லது, இந்த தலம்.

இன்றும், மன நிம்மதி வேண்டியும், தன் வயிறு சம்பந்தமான உபாதைக்கள் தீரவும் இங்கு வருவோர் பலர். (Intestine related/Ulcer Ailments cure).

கண்ணுக்கு அழகாய், அரிதான, நிறைய சிற்பங்கள்; அவற்றில், சில இங்கே.
புகைப்படங்களைக்காண கீழ்கண்ட படத்தில் சொடுக்கவும்.
அன்னதானம், தினமும் நடக்கிறது. நாங்கள் அடுத்த வாரத்தில் வந்த எங்கள் மண நாளில், அன்ன தானத்திற்கு, கொடுத்து, விடை பெற்றோம்!. நீஙகளும் போய் வாருங்கள்

Friday, April 18, 2014

பினாங்கு, மலேசியா- மார்ச் 2014- பயண அனுபவம் (1)

அதிக அளவில், தமிழர்கள் வாழும், மலேசியாவின், வடமேற்கு பகுதியில் உள்ள ஊர் பினாங்கு. மலேசியாவின், மிகச்சிறிய மா நிலங்களில், பினாங்கும் ஒன்று.
 வழியெங்கும், நிறைய இந்துக்கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், சீனக்கோயில்கள், புத்தர் கோயில்கள் என, ஒரு கலாச்சாரக்குவியலாய், இருக்கிறது பினாங்கு.

சிங்கப்பூரில் இருந்து 40 நிமிட விமான பயணம் எங்களுக்கு.
Courtesy: Wikipedia.

13.5 km நீளத்தில், ஒரு மிகப்பெரிய பாலம், பெனாங்கின் இரு தீவுகளையும்  (Pulau Pinang, Seberang Perai) இணைக்கிறது. படகிலும், மற்ற தீவுக்குப்போகலாம். ஒரு வழி தான், கட்டணம் செலுத்த வேண்டும். :)பெனாங்கின் முக்கிய துறைமுகமான - Butterworth, Seberang Perai-ல்- உள்ளது.

சமீபத்தில் தான் இரா. கார்த்திகேசு அவர்களின், பினாங்கை மையமாகக்கொண்ட கதையைப்படித்தேன். பெனாங்கின் நீண்ட பாலத்தைப்பற்றிய கற்பனை என்னுள். நாங்கள், பினாங்கிலிருந்து,கிளம்பிய அன்று, எங்கள், வண்டி ஓட்டுனர்- இந்த நீண்ட பாலத்தையும் காட்டினார்.

 George Town வட்டாரத்தில் தான் நாங்கள் தங்கிய  Traders Hotel இருந்தது.. இங்கிருந்து, 20 நிமிடங்களில்,  Little India-வைஅடையலாம். 3 வயசு பையனோட போகும் போது, தோசைக்கு என்ன வழின்னுதான், முதல்ல பார்த்தோம்.நாங்கல்லாம் ரொம்பவே கருத்து!. :)

முதலில் ஒரு தாய்லாந்து வழி- புத்தர் கோயிலுக்கு போனோம். (Wat Chaymangalkaram).இது, பெங்காக்கின்  Wat Phoவில் உள்ள புத்தரின் சிலையைப்போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

33 அடி நீளத்தில், மிக பிரமாண்டமாய், உறங்கும் புத்தரைக்கண்டோம். என்ன அழகு கண்கள்!!!. இந்த கோயிலின் மேற்சுவர்களில், புத்தரின், கதை, சிற்பங்களாய் இருப்பது, இன்னும் அழகு.

இந்த கோயிலில், எடுத்த சில புகைப்படங்கள் இதோ!
1. உச்சி வெயிலிலும், கடமை உணர்ச்சியில் , நிற்கும் துவார பாலகர்  (At Wat ChayMangalkaran)

2.அனந்த சயனத்தில், புத்தர்



3.கடவுளின் ஆசியுடன், உலகுக்கு வந்த குழந்தை புத்தர் (at Wat Chaymangalkaran-Thai style)

4.சகஸ்ர புத்தர்  மேற்சுவர்களில் (@ Wat ChayMangalkaran
5.அமைதியின் உருவம்

6.புத்தரின் திருவடி

இதற்கு, நேர் எதிரில், பர்மீய முறையில், ஒரு புத்தர் கோயில்.  (Dharmi Karama Burmese Temple).இரண்டு கோயில்களும், புத்தரின் பெருமையை அழகாய் கூறுகின்றன.
இந்த கோயிலும், மிக அழகு- ஒரு புத்த குரு எல்லாரையும் ஆசீர்வதித்துக்கொண்டு, துதித்துக்கொண்டும் இருந்தார்.

இந்த கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில், உலகின் பல நாடுகளில், உள்ள புத்த சிலைகளை வைத்து இருக்கிறார்கள். புத்தரின் கை முத்திரை, புத்த மதம், அந்த நாட்டில், பரவிய நூற்றாண்டு, என அதுவும் ஒரு புதிய அனுபவம்.



1.பர்மா முறையில் (at Dharmi Karama Buddhist temple)
2.புத்தரைத்தொழும், என் மகன் சித்தார்த் :)


3.இலங்கையின் புத்தரைப்போல தானும் கைமுத்திரைக்காட்டும் சித்தார்த்

4. இன்னொரு பெரிய புத்தர் (@ Dharmi Karama Burmese temple's Pagoda)

சரி- அப்படியே கொஞ்சம், பழனியாண்டவரையும் தரிசிப்போமா? "தண்ணீர் மலை முருகன் கோயிலுக்கு போங்க!- அங்க தான் தைப்பூசத்துக்கு காவடி எடுத்து வருவாங்கனு"- பார்க்கிற எல்லா தமிழர்களும் சொல்ல நாங்களும் போனோம்.
என் பையன், அம்மா தூக்குனு அவனைக்காவடி தூக்க சொன்னான். முருகன் சுமாரா ஒரு 300 படிக்கு மேல உக்காந்து இருக்க, இது என்னடா சோதனைனு ஆகிப்போச்சு.இருட்டவும் ஆரம்பிச்சது.
சரி, ஏறிப்பார்ப்போம்னா 50 படிக்கே கண்ணைக்கட்ட,சரி-முருகா- அடுத்த முறை வரேன்னு இறங்கிட்டேன். ஆனா மனசு வரலை.
 அப்பத்தான், பக்கத்துல இருந்த செட்டியார் கோயில், கண்ணுல பட்டுது. முருகா என்ன கருணைனு, போய் பார்த்தோம்.


கூட்டமில்லை; அண்ணனும் தம்பியுமாக, பிள்ளையாரும், முருகனும், மட்டும், இந்த தேக்கு மரத்தால் ஆன சுமாரா 100 வருட பழமையான கோவில்ல இருக்காங்க.

திண்ணையில்- பழனியாண்டவருடன்

அம்மா, அப்பா, எதிர்த்த மாதிரி தனிக்கோவில்ல இருக்காங்க. நான் இது வரை பார்த்த கோவில்களில், முருகரும், பிள்ளையாருமாக தனிக்கோயில் இங்க தான்.எங்களுக்காகவே முருகன் இங்க இருந்த மாதிரி இருந்தது.

(மீண்டும்)

Sunday, March 16, 2014

கண்களும், நெஞ்சமும் தேடும் அன்றைய மன்னை -1 (Mannargudi, Tiruvarur District)

கல்லூரி, வேலை, திருமணம், குழந்தை என தன் சொந்த ஊரை விட்டு வெகு தூரம், வந்துவிட்ட என் போன்றவர்களுக்கு, என்றோ ஒரு நாள், சொந்த வீட்டையும், ராஜகோபாலனையும் பார்க்க என மன்னைக்கு சென்றால், மனம் கனக்கிறது. ஒரு 10-15 ஆண்டுகளில், பெருத்த மாற்றம்!.

எல்லா வீடுகளும், முகமாற்றம் கண்டுள்ளன- ஓட்டு வீடுகளிலிருந்து, கட்டிடங்களாக!;அக்கம் பக்கத்திலிருந்த மாமா மாமிகள், எங்களைப் போல, சென்னை நோக்கி சென்றாகிவிட்டது. ஜெல்லி மாமா வீடு, அப்பாலு மாமாவீடு,தொப்பை அய்யங்கார் வீடு முதலிய எங்கள் மேல இரண்டாம் தெருவின்,அடையாங்களைக்காணோம்.

ஒரு நிமிடம்,காலத்தைப்பின்னோக்கி நகர்த்தி,  பழைய தெரு கண்ணில் இருக்காதா என்ற ஏக்கம் வந்தது. சட்டென தலையில், கொட்டிக்கொண்டேன்; என்னைப்போல என்னூரும், மாறி விட்டது.

மாறாமல், என் மனதில், உள்ள நினைவுகளை எழுதியதன், பலன், இந்த கட்டுரை!.

தஞ்சை பெரிய கோயிலைப்பார்த்து விட்டு பள்ளி நாட்களில், எழுதும் போது, நினைத்திருக்க வாய்ப்பில்லை- இது போல ஒரு முயற்சி தேவைப்படும் என்று!

பரவலாக புங்கை மரங்களும், வேப்ப மரங்களும், நிறைந்த,பரந்த தெரு. ஜுன் மாதத்தில், வேப்பம் பழங்களைக் கையால், பிதுக்கி, மூக்கு சளிப்பழம், என எல்லாரையும் ஓட வைப்போம்.

என் முதல் வயது முதல், சமீப காலம், வரை, மாலையானால், கடலை வண்டி பாயை எதிர்பார்க்கும் நாக்கு. சுடச்சுட வேர்க்கடலையை மணலில் வறுத்து, சலித்துப்பொட்டலம், போட்டுத்தருவார். பெருவாரியான குழந்தைகளின், அன்றைய புரத சத்து, இவர்  கைங்கர்யம்.

வருட விடுமுறையில், எல்லா அம்மாக்களும், வீட்டுக்குள்ளே தூங்க அழைக்கும், உச்சி வெயிலில், முக்கோண க்ரேப்  மற்றும்,பால் குச்சி  Ice  எங்களை வா என்றழைக்கும்.கொஞ்ச நேரத்திற்கு, சிவந்த நாக்குகளோடு, சந்தோஷமாய் வலம் வருவோம். இப்ப அதெல்லாம் இருக்கானு தெரியலை!..

எங்கள் வீட்டுக்கொல்லையில காய்க்கும், முழு நெல்லிக்காய்கள், தெருவில், உள்ள அத்தனை வீடுகளுக்கும், கொடுத்த்திருக்கிறோம்.

ஒரு சில தொழில்கள், இன்றும்,நினைக்கையில் வியப்பூட்டுகின்றன. "கிணத்தில விழுந்த சொம்பெடுக்கலையோ சொம்பு" என சட்டை அணியாமல், ஒருவர், சைக்கிளில், கத்திக்கொண்டே வருவார்.

இரும்பினால், ஆன பாதாள கரண்டியால், முதலில், முயற்சி செய்வார்; முதன்முதலில் நான் பார்த்த சர்க்கஸ் (Circus) என இவரைத்தான் சொல்ல வேண்டும்; கிணற்றில், தடாலடியாய் குதித்து, விழுந்த பொருளை எடுத்துக்கொண்டு, சொட்ட சொட்ட மேலே வருவார்.

(மீண்டும்)