Thursday, July 8, 2010
அப்பா என்னும் வரம்
நம் எல்லாருக்குமே அப்பா என்னும் முகமும், குரலும், பெருமைக்குரியன தான். என் அப்பாவிடம், நாங்கள் கண்ட, தேர்ந்த குணங்களின், கண்ணோட்டம் இந்த பதிவு.
1 பெண்களுக்கு முதுகெலும்பு கல்வி: நான் படித்த தஞ்சை மாவட்ட பள்ளியில், முதல் மதிப்பெண் வாங்கினாலும், பரிசாய் தருவது பாத்திரங்கள். (கேட்டால், பெண் பிள்ளைகளுக்கு அவை தான் பயன்படும்). பல நேரங்களில், பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியைகளுக்கு இல்லாத தெளிவோடு இருந்தார் என் அப்பா. மிகத் தெளிவாய், பெண்ணுக்கு நகையை விட படிப்பே முக்கியம் எனக் கண்டு , என்னை, பிலானி அனுப்பி வைத்தார். இன்று, என் வளர்ச்சி கண்டு சிலிர்க்கும் அப்பாவின், அன்றைய முகமே கண்ணில் நிழலாடுகிறது. ( எங்கள் மாவட்டத்திலிருந்து முதன்முதலில் பிலானி சென்ற பெண் பிள்ளை நான் தான் )
2.அறிவு வளர்ச்சிக்கு கை கொடுக்கும் சாளரம் புத்தகங்கள்: எங்கள் ஊரில் பள்ளி நூலகம் பயன்பாட்டுக்கு இல்லை. என் அப்பா, அப்போதே, தன் சின்ன வருமானத்தில் ஒரு பகுதியை, Readers Digest, Wisdom முதலிய சஞ்சிகைகள் வாங்க செலவிட்டார்.
அவற்றில் வரும் விளம்பரங்களை கண்டு அப்படி ஒரு அழகான இடத்தில இருக்க வேண்டும் என்று நினைத்ததுண்டு.
3.விலைவாசி அறிவு விளையாட்டாய்: என்னை அழைத்துக்கொண்டு, சந்தைக்கு செல்வார். ஒரு கடையிலிருந்து மற்ற கடை வரை விலை விசாரிப்பார். எட்டாம் வகுப்பு மாணவியான எனக்கு, அரிசி பருப்பு, காய்கறி விலை தெரியும். மறைமுகமாய் விலைவாசியை அறிய வைத்தார் அப்பா.
சகல கல வல்லவர்: இந்த பட்டம் அநேகமாய் என் அப்பாவிற்கு தான் அதிகம் பொருந்தும். காலை, வயல் வேலைகளை கவனிப்பார், மாடு குளிப்பாட்டுவார்
... அப்போது அங்கே ஆட்டம் போடும் நாங்களும் சேர்ந்தே நனைவோம். அழகழகாய் பாத்தி கட்டி, எங்களையே, விதை தூவ வைத்து, தண்ணீர் ஊற்ற வைத்து, தோட்ட அறிவு தந்தார். சுறுசுறுப்பே என் அப்பாவின் முகம். ஒரு நாளும் அவர் நிறைய தூங்கி பார்த்ததில்லை நான். அவரை பின்பற்றி, அதிகாலை எழும் பழக்கம் எங்களுக்கும் இயல்பாய் வந்தது.
சங்கீத அறிவு: என் அப்பா மிக இனிமையாய் பாடுவார், அம்மாவும் தான். மின்சாரம் இல்லா நேரங்களில், நாங்கள் எங்கள் கச்சேரியை அரங்கேற்றுவோம். அப்பா சினிமா பாடல்களை சொல்லி, ராகங்களை அறிமுகம் செய்தார். இன்றும் மறக்கவில்லை!.
சுயமாய் தயாரிப்பதில் ஆர்வம்: அப்பாவிற்கு வற்றல் முதலிய பண்டங்களை கடையில் வாங்குவதை விட நாமே செய்தால் என்ன என்ற ஆர்வம். தஞ்சாவூர் குட மிளகாய், கொத்தவரங்காய் வற்றல், வெங்காய வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய், வீட்டில் காய்த்த கொட்டை எடுத்த புளி என்று சென்னையிளுருந்து வரும் என் உறவினருக்கு ஒரு பெரிய புதையலே இருக்கும். இன்று அதே பழக்கம், என்னை புதிதாய் செய்ய தூண்டுகிறது.
தோல்விகளில் தோள் கொடுக்கும் அப்பா : என் பல வெற்றிகளில் களித்த அப்பா, என் தோல்விகளிலும் தோள் கொடுத்தார். அவரை பொருத்தவரை தேர்வுகளை மட்டுமே வைத்து மாணவனை எடை போட முடியாது.
உற்சாக ஊற்று அப்பா: அப்பாவிற்கு சமைப்பது என்பது மனதுக்கு இதமளிக்கும்
வேலை. அழகாய் பாராட்டி, ரசித்து சாப்பிடுவார். அதற்காகவே தேடி தேடி செய்ய தோன்றுகிறது, அவர் சிங்கை வரும் மாதங்களில்.
ஏழை பங்காளன்: என் அப்பா செய்யும் இன்னொரு நெஞ்சை தொடும் விஷயம்; வாரம் ஒரு நாள் பத்து ஏழைகளுக்கு, வீட்டில் அம்மாவை உணவு பொட்டலம் தரச் சொல்லி விநியோகம் செய்கிறார், நிறைய ஆண்டுகளாக. புற்று நோய் மருத்துவ மனைக்கு, பருத்தி சேலைகளை அண்டை வீடுகளில் வாங்கிக்கொடுக்கிறார்.
பணம் கொடுப்பது எல்லாராலும் முடியும்!. ஆனால் இவர் உழைப்பையும், உணவையும் தர நினைக்கிறார்.
ஒரு நாளும் லஞ்சம் வாங்காமல், அரசாங்க பள்ளி ஆசிரியர், ஆய்வாளர் முதலிய பதவிகள் வகித்த அப்பா, நாம் அறியாத பல கிராமங்களில் அறிவு கண்களை திறந்து இருக்கிறார். அப்பாவால் முன்னேறிய குடும்பங்கள் நிறைய. இன்று அந்த புண்ணியம் தான் எங்களுக்கு நல்ல வாழ்க்கையாய் மாறி இருக்கிறது.
அப்பாவின் பிறந்த நாளில் பிறந்தேன் நானும். என் பிள்ளை நாளை வரும்போது என் அப்பாவை போல, நல்ல பெற்றவளாய் இருக்கவே ஆசை. ஆனால் அப்பா தொட்ட சிகரங்களை யாரும் தொட முடியாது என்றே தோன்றுகிறது.
இந்த முறை அப்பா சிங்கப்பூர் வந்த போது, பல புதிய சுவைகளை ரசித்தும், இருக்கும் அழகை வியந்தும் உற்சாகமாய் செலவிட்டார். பல மணி நேரம் நூலகம் தான் பொழுது போக்கு!.
குடிக்கார தகப்பனால் தள்ளாடும் மாணவர்களை வழி நடத்தி, கருணையே வடிவாய் இருந்தார்.
சிங்கப்பூரிலும் அவரை அவர் மாணவர்கள் அடையாளம் காண்கின்றனர்.
இப்போதும் நான் வியட்நாமிலிருந்து வாங்கி வந்த காபி மணம் பற்றி தான் சொல்கிறார் தொலை பேசியில்.
அப்பா அப்பப்பா! :)-
Subscribe to:
Posts (Atom)