Monday, June 21, 2010

தமிழில் பேசுவது அத்தனை பெரிய வேலையா?

தமிழில் பேசுவது அத்தனை பெரிய வேலையா?
இந்த வாரம் முழுக்க சுத்த தமிழில் பேசலாம் என்று எங்களுக்குள் ஒப்பந்தம். காலை 8 மணி பரபரப்பில், என் காலுறை எங்கே? என்றதும், சட்டென்று ஒரு நிமிடம் யோசித்து ஓஹ்.. socks ? என்றேன்.
breakfast சாப்பிட வரேளா என்று கேட்டு பழகி விட்டது. காலை உணவு தயார் என்று செந்தமிழில் சொன்னேன். dress change பண்ணிடேளா என்று செப்ப வந்து, பின்னர், ஒரு முறை சிந்தித்து, உடை மாற்றி கொண்டீர்களா? என்றேன்.
இன்று உங்களுக்கு meeting எத்தனை மணிக்கு என்று கேட்க நினைத்து, கூட்டம் எத்தனை மணிக்கு என்று கேட்டேன். எனக்கே அரசியல் பொது கூடங்களை பற்றி கேட்ட மாதிரி இருந்தது.

laptop on ஆகி இருக்கா, என்று வழக்கமாய் கேட்கும் கேள்வி, என் மடி கணினி திறக்கப்பட்டு உள்ளதா என்று மெதுவாய் வந்தது. என் கைபேசி எங்கே? என்ன அலைவரிசை பார்க்கலாம் போன்ற பரிமாற்றங்கள் எங்களுக்கே, விநோதமாய் இருந்தன. ஒரு மொழி சரியான முறையில் பயன்படுத்த செழிக்கும்.

நாம் எத்தனை தூரம் தமிழை விட்டு விலகி இருக்கிறோம் என்பது நன்றாக புரிந்தது.
அடுத்த ஐந்து நொடிகளில் உங்களால், கீழ்காணும் சொற்களுக்கு, சரியான தமிழ் வார்த்தைகளை சொல்ல முடிகிறதா?

1. Laptop

2. FM Radio

3. Shampoo

4. ToothBrush

5. Money purse

6. Grinder

7. Tea

8. Coffee

9. SMS
















சரியான தமிழ் சொற்கள் இதோ:
1. Laptop - மடி கணினி
2. FM Radio - பண்பலை வானொலி
3. Shampoo- கழுவான்
4. ToothBrush- பல் துலக்கும் தூரிகை
5. Money purse- பணப்பை
6. Grinder- மாவரைக்கும் இயந்திரம்
7. Tea- தேநீர்
8. Coffee- குளம்பி
9. SMS- குறுந்தகவல்

Sunday, June 13, 2010

மாறுமா மனங்கள்?

எங்க ஊரு வட்டார வழக்குல "எங்க பெண்ணை பக்கத்து ஊர்ல கெட்டி கொடுத்து இருக்கோம்னு" சொன்ன காலம் போய், உங்க பொண்ணு வேலைக்கு போவாளா? கலிபோர்னியாக்கு போக சம்மதமா? என்பதில் இன்றைய திருமணங்கள் வந்து நிற்கின்றன.
ஆனால் இன்னமும் துளியும் மாறாத, திருமணம் சார்ந்த- பல விஷயங்களை பற்றி அலசும் பதிவு இது.
(நானும் ஒரு மருமகள் என்பதால் இந்த பதிவு மருமகள் கோணத்தில் இருந்தே இருக்கும் :)-)

1. எந்த சமூகத்தினராக இருந்தாலும் மாறாத முதல் கேள்வி "எத்தனை பவுன் போடுவேள்?" என்பது. பெண் பார்க்கும் போது முதலில், சொல்லும் சராசரி வாக்கியம் உங்க பொண்ணுக்கு நீங்க என்ன போடுவேளோ போடுங்கோ.
இந்த மாதிரி பரிவர்த்தனைகளை மாற்றி, அழகாய், சரிசமமாய் பங்களித்து செய்தால் திருமணம் இன்னும் அர்த்தமுள்ள நிகழ்வாய் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. இது இன்றைய சமுதாயத்தில் மிகவும் தேவைப்படும் மன மாற்றம்.

2.எப்படி திருமணமாகி வரும் பெண் மனதவில் புதிய உறவுகளை எப்படி அரவணைப்பது என்று யோசிக்க வேண்டி இருக்கிறதோ, அதே போல, அந்த பெண்ணின் கணவன் வீட்டாரும் யோசிப்பது அவசியமே. "என் பிள்ளையை என்கிட்டேந்து பிரிச்சுடுவாளோனு புலம்பாம அழகாய் புதிய உறவை ஊன்ற செய்ய என்ன செய்யலாம் என்று யோசிப்பதே சரி. பல வீடுகளில், உள்ள, கணவனின் தங்கை தம்பிகள், அண்ணனுக்கு திருமணம் ஆன பின்னால்
தர வேண்டிய, ஆரோக்யமான இடைவெளியைத் தர மறுக்கின்றனர். இதுவே பல கருத்து மோதல்கள் வெடிக்க காரணமாகிறது.

3."ஆணும் பெண்ணும் நிகரென கொள்வதால் அறிவினில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்."
இது சுமார் 60௦ ஆண்டுகளுக்கு முன்னே பாரதியார் பாடினது. ஆனால் இன்றைக்கும் பிள்ளை வீடுகளில், மனைவிக்கு அடங்கி போகாதே, அப்படி இரு இப்படி இரு என்பதான உபதேசங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.பெரும்பாலான வீடுகளில், பெண்கள் பல வேலைகளை முகம் சுளிக்காமல், வலி பாராமல் எடுத்து செய்த பின்னரே, அலுவலகம் வருகின்றனர். அன்றைய நாட்களின், சம்ப்ரதாயங்கள் என்ற பெயரில் நடைமுறைக்கு உதவாத பல விஷயங்களை மருமகளின் தலையில் ஏற்றுவதை தவிர்க்கலாமே.

4.விதிகள் எல்லாருக்கும் பொது: ஒரு குடும்பத்தில் எதிர்பார்க்கப்படும் நடைமுறைகள், பிள்ளைகளுக்கு ஒரு விதமாகவும், மருமகள்களுக்கு வேறு விதமாகவும் இருக்க வேண்டியது அவசியம் இல்லை. முக்கால் வாசி குடும்பங்களின் சிக்கலே இதிலும் தொடங்கும். பிள்ளையை பத்து மணி வரை தாலாட்டும் பெற்றோர், மருமகள் அதிகாலை எழுந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.அதே போல பிள்ளை செய்யும் தவறை நியாயபடுத்தி மருமகளிடம் பேசுவதும் வீண் மனக்கசப்புக்கு இடம் கொடுக்கும்.

5.உளவியல் மகத்தாய் உதவும்:
சமையலோ, அல்லது அந்த பெண் ஆசையாய் வரையும் ஓவியமோ-அழகாய் பாராட்டுங்கள. அன்பான வார்த்தைகளே நாளை உறவு நீள உதவும்.சின்ன சின்ன பேச்சும், அழகான புன்னகையுமே, அடித்தளம். வீட்டில் அனைவரோடும் சேர்ந்து உங்கள் மருமகளை உண்ண சொல்லுங்கள். அது முடியாதென்றால், மருமகள் சாப்பிடும்போது என்ன வேண்டும் என்று அன்பாய் கேளுங்கள்.

6.சில கடினமான தருணங்களில், தோள் கொடுங்கள்: நாம் எல்லாருக்கும் வாழ்க்கை ஒரே போல இருப்பதில்லை. உங்கள் வீட்டில் மற்ற பெண்களுக்கு விரைவில் மகப்பேறு உண்டானால், உங்கள் மருமகளையும் கேள்வி கேட்டு துளைக்காதீர்கள். குறிப்பாய், இந்த மாதிரி வம்புக்கு அலையும் உறவினரிடம் இருந்து காப்பற்றுங்கள்.

Saturday, June 12, 2010

வீடு வாங்கலையோ வீடு!

அந்த பாங்குல, 7.5% வட்டி, இதுல,90% லோன் தரான்!
ப்ரொபெர்டி ப்ளஸ், வாங்கிப் பாக்க வேண்டிதானே!, எங்க மாப்பிள, போன மாசம், தான், மடிப்பாக்கத்தில கிரவுண்டு வாங்கினார், அவர்ட கேட்டாக்க கான்டாக்ஸ், கிடைக்கும்.
வேளச்சேரி, பக்கம், தண்ணி கஷ்டம்.! சோழிங்க நல்லூர் பக்கம், ரேட், ஏறும்கறா, அங்க வேணா பார்ப்போமா...!

அந்த பில்டர், டயத்துக்கு, சாவி, தருவானோ!3 ரூம் ப்ளாட்டா? செர்வீஸ் ஏரியா இருக்கா? கார்ப்போரேஷன் தண்ணீ வருமா?லிப்ட் இருக்கா? மெய்ன்டெனெனன்ஸ் எவ்ளோ? இப்படி சென்னை செந்தமிழ்ல எதுவும் கேக்காம, சிங்கப்பூர்ல வீடு வாங்க நினச்சோம்.

வீடு பாக்கறோம்னு, தெரு தெருவா,ஏரியா ஏரியாவா, அலசி...என் திருவாளர், கேட்டதால, நோட்ஸ்(?!) வேற எடுத்து... ஒரு ஏஜெண்டு கூட கைடட் டூர் போனோம், ஒரு வாரம் கூட விடாம!.
இந்த வீடு, ஸ்டேஷன் பக்கம், இது, ப்ரைவேட் காண்டொமினியம், நமக்கு தருவானா?இப்படி சில வினாக்கள்!

அஞ்சு சனிக்கிழம விடாம சுத்தினா வீடு கிடைக்குமுனு, முக்கு வீடு, ஜோஸியர் சொன்ன மாதிரி, கடைசியில வீடும் கிடைச்சுது.
5% இப்பவே தரணும், தந்தா, ஓனர் அடுத்த ரெண்டு வாரத்துக்கு வீடை யாருக்கும் காட்டமாட்டார், அதுக்குள்ள டீலா, நோ டீலானு முடிவு பண்ணனும். அப்டி ரெண்டு வாரத்துல, முடிக்க முடியலைனா, பணம் வாபஸ் தரப்பட மாட்டாதுனு, சீட்டுக்கடைக்காரன் மாதிரி சொன்னவங்களைப் பாத்து, நீங்க நல்லவரா? கெட்டவரானு கேக்க முடியாம நொந்து நூடுல்ஸ் ஆனோம்.!கேட்டதைக்கொடுத்துட்டு, மொத்த விலைல, கொஞ்சங் கூட குறைக்க மாட்டேங்கறானே கிராதகன்னு, மனசுக்குள்ள நொந்தோம்.

அடுத்த வாரம், இந்தியாவுக்கு, தொ(ல்)லைபேசியில, சொன்னா, வீட்டு வாசல், எந்த பக்கம் பார்த்து இருக்குனு எல்லாரும் மாறி மாறி கேட்டு எங்களை காம்பஸ் தேட வெச்சா!

பத்து வாரத்துல சாவி கிடைக்கும், நீங்க இந்த லாயரைப் போய் பாருங்கோன்னு, பாங்குல சொன்னான்!

சத்தியமா சொல்றேன், அந்த லாயர் மாதிரி, நம்மூர்ல பாக்கல!, இருக்கற எல்லா வாரியத்துக்கும், கடுதாசி போட்டானுங்க!. இவங்க வீடு வாங்கற எடத்துல், ரோடு வருமா, ரெயில் தண்டவாளம் வருமானு கேட்டு, பதில், போட சொல்லி வாங்கினானுங்க. ஆனா, வில்லங்கமில்லைனு தெரிஞ்சா தான், பாங்க் லோன் கொடுப்பான். நம்ம ஊர்ல, பட்டாணி, கடலை மாதிரி, லோன் கொடுத்துட்டு, அப்புறம், பிரச்சனைனு லோன் வாங்கினவன், போய் அழுதா, பாங்கு ஆளுங்க, மறதி வந்த மாறி நடிக்கறானுங்க.

வீடு ஒரு வாட்டி பாத்துக்குங்கோ, அப்புறம் அதில்லை இது இல்லைங்கக்கூடாதுனு, சொன்னான், ஏஜண்ட். அங்க இங்கனு எல்லா முக்கும் பார்த்தோம்.
வீடு சாவி நாங்களே வாங்கி தருவோம்; டாகுமெண்ட், எலக்ட்ரானிக், அதுனால, பத்திரம் மாரி இல்லனு சொன்னார், லாயர். ஆச்சரியமா அவருக்கு ஒரு ஓ போட்டோம்.

வீட்டுக்குத் தேவையான அனைத்தும் வாங்க வசந்த் & கோ இங்க இல்ல. மறுபடியும் தேடுதல் வேட்டை. சோபா, சுவர் கலருக்கு மாட்ச் ஆகணும்னு, நாங்க எங்க வீட்டு, போட்டோவோட கடைக்கு போனது, உச்சக்கட்ட ரவுசு!

பிள்ளையார் பூஜை பண்ணலானு, வாத்தியாரைக்கூப்டா, அவர், வாங்கின 150 டாலருக்கு, மந்திரத்தை சொல்லாம, எங்க கதையைக்கேட்டார். உங்க பூர்வீகம், எங்க? உங்க தம்பிக்கு வரன் பாக்கறேளா இப்படி நிறைய. பிள்ளையார் அவரை ஒரு கொட்டு வெக்க மாட்டாரானு இருந்தது எங்களுக்கு!

வீடு உள்ள வந்த பிறகு, ஒரு சில விஷயங்க தான், வீடு வீடா இருக்க காரணம்னு பட்டுது. அமைதியான சூழல், நம் விஷயத்தில், மூக்கே நுழைக்காத அக்கம்பக்கம், ஜன்னலில் தெரியும் அழகான வானம், அப்பப்போ பெய்யும் மழை (ஆமாம், நல்லவங்க நாங்க இருக்கோம்ல!)., நிறைய மரங்கள், அதுல பல வண்ணப்பூக்கள், பறவைகளின் ஒலி, நானும் இருக்கேன்னு அப்பபோ காமிக்கற குயில், இதல்லாம், நாங்களே எதிர்பார்க்காத பெரிய வரம்னு தான் சொல்லுவேன்.




பத்து பன்னிரண்டு தென்னை மரம் பக்க்த்திலே வேணும்னு, பாரதியார் ஏன் பாடினார்னு இப்போ எங்க ரெண்டு பேருக்கும், நன்னாவே தெரியறது!.



எந்த இடம், உங்களுக்கு மன அமைதியும், நிம்மதியும் தருமோ அது தானே வீடு!. இப்பல்லாம், பாரதியார், பாணியிலே, அம்மா, நிந்தன் காவலுற வேணும்னு வேண்டறேன். அம்மாவின் அருளால தான், அழகான வீடு கிடச்சுது.

நாளை நம்ம சந்ததிகளுக்கு, குயில் காக்கானு எதுவும், இல்லாமலே போகலாம்!
நம்மால செய்ய முடியற சில சில விஷயங்கள், கண்டிப்பாக பண்ணனும்னு முடிவு பண்ணினோம். கடைகளுக்கு காய் வாங்க போகும் போது, துணிப்பை எடுத்து போறது,கூடியவரை அச்சடிக்காம இருக்கறது, பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவது, இப்படி ஒரு சில.

இப்போ நல்ல வீடில் வாழுகிற சந்தோஷத்தோட மன நிறைவும் இருக்கு!